அனல் மேல் விழுந்த பனித்துளி
அன்னையின் அழுகையுடன், அழுது பிறந்து..
பேச்சும், நடையும் சிறுகச் சிறுக கற்றுக் கொண்டு..
தந்தை விரல், தாயின் சேலை பிடித்து..
சகோதர, சகோதரிகளின் சொல்லில் சோறு எடுத்து..
வெற்றி, தோல்விகளைக் கணக்கிடாமல், பள்ளியில் பயின்று..
ஏறாத பாடங்களை மனதில் பதிய வைத்து..
பாலிய மற்றும் பள்ளி நட்புகளின் ஆணிவேர்க்குப் பாசமென்ற நீர் பாய்ச்சி..
ஊர் பயின்று..
கல்லூரி, பயண மற்றும் பணிப் பண்புகளையும் வார்த்தெடுத்து..
உள்ளமும், இல்லமும் சீராய் இயங்க..
சில்லறைகளைத் தேட ஆசை எழ..
சில்லறைகளுக்காகச் சீன தேசம் வரை செல்லத் துணிந்து..
உறவும், உற்றமும் கூடினாலும்.. நம்மைச் சுற்றும் ஒரு பெண்ணைத் தேடி..
திருமண வாழ்வை ஜோடிப் புறாக்கள் போன்று மகிழ்ந்து கழித்து..
தவமிருந்து பிள்ளைச் செல்வங்களைப் பெற்று..
அவர்களின் அசூர வளர்ச்சிக்குக் கோடும், ரோடும் வகுத்துக் கைத்தடியாய் உருவெடுத்து..
வாழ்வில் கற்றப் பாடங்களை பேரக்குழந்தைகளுக்கு விரல் பிடித்துப் பயிற்றுவித்து..
முன்னறிவிப்புப் பலகை இல்லா..
வளைந்து, நெளிந்து செல்லும் வாழ்க்கைப் பாதைகளில்.. தேனீக்களாய் ஓடி..
இறுதியில்..
ஓய்வென்ற மூன்று எழுத்தைத் தேடும் நேரத்தில்..
முடிவுரை எழுத மரணமென்ற நான்கு எழுத்து நம்மைச் சந்திக்கும் தருவாயில்..
அனல் மேல் விழுந்த பனித் துளியாய்ச் சற்றென்று மறைந்து..
வாடகைக் கொண்டாட்டமான வாழ்க்கை..
வண்ணமில்லாத ஆடையில் அடங்கிப் போனது..
மனித வாழ்க்கை!..
A.H. யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.