Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கேரளாவில் ஆம்புலன்ஸ் ஓட்டும் முஸ்லிம் பெண்மணி
Nov 22 2022 நாடும் நடப்பும்

கேரளாவில் ஆம்புலன்ஸ் ஓட்டும் முஸ்லிம் பெண்மணி

கோழிக்கோட்டில் ஆம்புலன்ஸ் ஓட்டும் முஸ்லிம் பெண்மணி!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே குருவட்டூர் எனும் ஊரைச் சேர்ந்தவர் ஆயிஷா முஹம்மத். இவர் தன் ஊரான குருவட்டூரில் ராஜீவ்ஜி சாரிடபிள் சொஸைட்டி எனும் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் ஆம்புலன்ஸ் ஒன்றின் ஓட்டுநராக இருக்கிறார். தன்னுடைய ஊர் மட்டுமின்றி கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள அனைத்து ஊர்களிலிருந்தும் நோயாளிகளை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று, தேவைப்பட்டால் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கே கொண்டுசென்று விடுகிறார். இவர் 24×7 என்று சொல்லும் விதத்தில் ஒரு நாளின் 24 மணிநேரமும், ஒரு வாரத்தின் 7 நாட்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுகிறார். இதில் இன்னொரு விடயம்: ராஜீவ்ஜி அறக்கட்டளை அதை இலவசமாகச் செய்கிறது. இச்சேவைக்காக நோயாளிகளிடமிருந்து அந்நிறுவனமோ, ஆயிஷாவோ ஒரு பைசா பெறுவதில்லை.

2017ல் இவருடைய மாமியார் நோய்வாய்ப்பட்டபோது, நான்கு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் - ஹெவி லைசன்ஸ் பெற்றிருந்த ஆயிஷா, தன் மாமியாரை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதுதான் அவர் முதன்முதலாக ஆம்புலன்ஸ் ஓட்டியது. அப்போது அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஒரு மருத்துவமனையிலிருந்த ஆம்புலன்ஸை வாங்கி, அதை ஆயிஷாவே ஓட்டி, தன் மாமியாரை மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் மாமியாரை முதன்முதலாகச் சேர்த்தபோது மட்டுமின்றி, மேலும் சில தடவைகள் அந்த ஆம்புலன்ஸில் மாமியாரைக் கொண்டு சென்றார். அதுவே, குடும்பத் தலைவியாக இருந்த ஒரு பெண்மணி, ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் புது அவதாரமெடுக்கக் காரணமானது. அப்போது ஆரம்பித்த அந்தப் பயணம் கோவிட் காலத்தில் நிறைய உயிர்களைக் காப்பாற்ற உதவியிருக்கிறது. கோவிட் காலத்தில் நோயாளிகளைமருத்துவமனைக்கு கொண்டு செல்வது மட்டுமின்றி, ஆக்ஸிஜன் சிலிண்டர், மருந்துப் பொருட்கள், இறந்தவர்களின் உடல்கள் ஆகியவற்றையும் உரியவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.

"ஆண், பெண், சாதி, மத பேதமின்றி எல்லோரையும் என் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றேன். அப்படி எந்த ஒரு பேதமுமில்லாமல் இருப்பதே என் பாலிஸி" எனப் பெருமிதத்துடன் கூறுகிறார். "ஆம்புலன்ஸ் ஓட்டுவதால் நான் மற்றவர்களுக்கு நன்மை செய்யவில்லை. எனக்கு நானே நன்மை செய்து கொள்கிறேன்" என்கிறார்.

"24 மணி நேரமும் ஒரு பணியிலிருப்பது, அதுவும் இரவு நேரத்தில் கூப்பிட்ட உடன் ஒரு இடத்துக்குச் செல்வது பெண்ணான உங்களுக்கு அச்சமாக இல்லையா?" எனக் கேட்டால், "நான் சிறுவயதிலிருந்தே எதைக் கண்டும் அஞ்சியதில்லை. பெண்ணாக இருப்பதால் அச்சப்படத் தேவையில்லை. அப்போது என்னைப் பெண்ணாக நினைப்பதில்லை. என்னை ஒரு ஆணாக நினைத்துக் கொள்கிறேன்.ஒரு ஆம்புலன்ஸில், ஒரு ஆண் ஓட்டுநராக இருப்பதைக் காட்டிலும் ஒரு பெண் ஓட்டுநராக இருப்பதால் எனக்கு அது அனுகூலமாக இருக்கிறது. பெண் நோயாளியை நானும் சேர்ந்து அழைத்துக்கொண்டு வரமுடிகிறது" என்கிறார். "கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி கேரளாவின் மற்ற மாவட்டங்களுக்கும் நோயாளிகளைக் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன். மற்ற மாநிலங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். ஒருமுறை நானே எனது வாகனத்தை ஓட்டிக்கொண்டு டெல்லி வரை சென்றுவந்தேன்" என்கிறார். "என் வீட்டில் இந்த ஆம்புலன்ஸைத் தவிர, ஒரு இன்னோவா கார், ஒரு ஜீப், ஒரு பஸ், ஒரு பைக் உள்ளன. ஹெவி லைசன்ஸ் இருப்பதால் எல்லாவற்றையும் எனக்கும் ஓட்டத் தெரியும்" என்கிறார். "எப்போதாவதுஆம்புலன்ஸை அதிவேகமாக ஓட்டியதுண்டா?" எனக் கேட்டதற்கு, "ஒருமுறை என் ஆம்புலன்ஸில் ஏற்றிய நோயாளிக்கு சோடியம் அளவு குறைந்துகொண்டே வந்தது; வேகமாக ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டிருந்த நான், உடனே, இன்னும் வேகமாக ஆம்புலன்ஸை ஓட்டி, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். இவ்வாறான பரபரப்புத் தருணங்களும் இந்த என் ஆம்புலன்ஸ் வாழ்வில் உண்டு" என்கிறார்.

"உங்கள் குடும்பத்தார் உங்களுடைய இந்தப் பணிக்கு ஆதரவளிக்கிறார்களா?" எனக் கேட்டால், "என் கணவரும், என் பிள்ளைகளும் எனக்கு முழு ஆதரவு தருகின்றனர்" என்கிறார். பார்ப்பதற்கு 20 வயதுப் பெண் போலத் தோற்றமளிக்கும் இவருடைய மூன்று பிள்ளைகளும் திருமண வயதில் உள்ளனர். மூத்த மகன் பொறியாளர். இரண்டாம் மகன் எம்பிஏ - MBA முடித்து, கனடாவில் உள்ளார். மூன்றாம் மகள் (அவரைப் பேட்டியெடுத்த அன்று), எம்பிபிஎஸ் - MBBS நான்காமாண்டு படிக்கிறார்.

உங்களைப் போன்றே சமுதாயத்தில் இவ்வாறான பணிகளைச் செய்ய ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் முன்வர வேண்டும்

வாழ்த்துகள் சகோதரி!

Related News