தாடியில்லா மனிதன் பிடரியில்லா சிங்கம்!
ஆண்கள் அனைவரும் ஒருவகையில் அழகுதான். ஆனால் சில ஆண்கள் கூடுதல் அழகாகத் தெரிவதற்கு அவர்களின் முகத்தில் இருக்கும் மீசையும், தாடியும்தான் காரணம் . சமீப காலங்களில் அதிக தாடி வளர்ப்பது ஆண்களிடையே மிகுந்த வரவேற்ப்பையும், ஆர்வத்தையும் பெற்றுள்ளது. இப்படி ஆசையாக வளர்க்கும் தாடிகள் ஆரோக்கிய நன்மைகளை தரக்கூடியது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தாடி வைத்திருப்பவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் வாழ்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
சருமப் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு
அறிவியல்ரீதியாக முகத்தில் அதிக முடி இருக்கும்போது, சூரிய ஒளிக்கதிர்களால் சருமத்தைத் தாக்க இயலாது என நிரூபிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் பெரும்பாலும் அடர்த்தியான தாடியால் தடுக்கப்படுகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வில் அதிக தாடி வைத்திருக்கும் ஆண்களுக்குத் தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
தொண்டை நோய்களை குணப்படுத்தும்
மருத்துவர் அடிசன் பி. டச்சேர், தாடி தொண்டை மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் என தனது நூலில் கூறியுள்ளார். மேலும் முகத்தில் வளரும் முடிகள் நம் நுரையீரலைப் பாதுகாக்க இயற்கையால் ஏற்படுத்தப்பட்டது எனக்கூறுகிறார். அடர்த்தியான தாடி ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்று தொண்டை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
ஆஸ்துமா
ஒருவேளை சுற்றுசூழல் காரணமாகவோ அல்லது தூசி காரணமாகவோ உங்களுக்கு ஆஸ்துமா ஏற்படும் என்ற பயம் இருந்தால் அடர்த்தியான தாடி உங்கள் பயத்தை போக்கக்கூடும். உங்கள் மூக்கை சுற்றியுள்ள மீசை மற்றும் தாடி அவற்றை தடுத்து அதனை நீங்கள் நுரையீரல் மூலம் சுவாசிப்பதைத் தடுக்கும். உங்கள் தாடி இந்த நச்சுப்பொருள்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவராய் இருக்கும்.
தாம்பத்திய வாழ்க்கை
உங்கள் தாடி வளர்வதைத் தூண்டும் ஹார்மோன் உங்கள் உடலுறவு நடவடிக்கைகளை அதிகரிக்கக்கூடும். அதாவது நீங்கள் எப்போதெல்லாம் அதிக ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுகிறீர்களோ அப்போதெல்லாம் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கப்பட்டு உங்களின் தாடி வேகமாக வளர்கிறது.
சுருக்கங்களும் ஈரப்பதமும்
சூரிய ஒளியிலிருந்து முகத்தை பாதுகாப்பதால் தடிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதேசமயம் ஈரப்பதத்தை பாதுகாப்பதால் சரும வறட்சியால் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தாடியை ஷேவ் செய்து இதனை நீங்கள் அழிப்பதால் இயற்கையாக இருக்கும் ஈரப்பதம் அழிக்கப்பட்டுச் சரும வறட்சி ஏற்படுகிறது. சருமம் முடி இல்லாமல் இருக்கும்போது அது வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
தன்னம்பிக்கை
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 55 சதவீத ஆண்கள் அவர்கள் அடர்த்தியான தாடி வைத்திருக்கும்போது அதற்காகப் பல பாராட்டுக்களைப் பெற்றதாக தெரிவித்துள்ளனர். பாராட்டுக்கள் கிடைக்கும்போது தானாக உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். தினமும் காலையில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது உங்களுக்குள்ளேயே ஒருவித மகிழ்ச்சி உண்டாகும். தாடி வைத்திருப்பது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இளமையான தோற்றம்
ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அழகும் முக்கியம். அந்தவகையில் தாடி உங்கள் ஆசையை சிறப்பாக நிறைவேற்றும். முன்னரே கூறியது போல அதிக தாடி வைப்பதுதான் இப்போது ட்ரெண்டாக இருக்கிறது. அதிக தாடி வளர்த்து அதை சீராக பராமரிப்பது உங்களுக்கு இளமையான அதேநேரம் அழகான தோற்றத்தை வழங்குகிறது.