மனிதநேயர் யூசுஃப் அலி பெற்ற மறுமையின் கொடை!
கேரளாவில் பிறந்த வெளிநாடுவாழ் இந்தியரான யூசுஃப் அலிஅவர்கள் ஒரு பில்லியனர். வளைகுடா நாடுகளில் பல வர்த்தகங்களை நிறுவி, அவற்றைத் திறம்பட நிர்வகிக்கிறார். கேரளாவின் மக்கள் தொகையில் பெரிய நகரமான கொச்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிரமாண்டமான லூலூ மால் எனும் பல்பொருள் அங்காடியின் அதிபரும் அவரே. லூலூ மால் தற்போது கேரளாவுக்கு, குறிப்பாக கொச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது. இந்தியாவில் ஒரு பேரங்காடி - மால், சுற்றுலாத்தலமாக மாறியது இதுவே முதல்முறை.
இறையருளால் தன் தொழில் நிறுவனங்களைத் திறமையாக நடத்தும் தொழிலபதிபர் யூசுஃப் அலி, அவ்வப்போது இந்தியாவுக்கு, குறிப்பாக கேரளாவுக்கு வருகை புரிகிறார். இந்தியாவுக்கு வருகை புரியும்போதெல்லாம் ஏதேனும் நற்காரியங்களைச் செய்துவிட்டுப் போகிறார்.
ஒருமுறை கேரளாவைச் சேர்ந்த ஒரு ஹிந்து வளைகுடா நாட்டில் வேறொரு நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் நபரைக் கொலை செய்துவிட்டார். அந்நாட்டுச் சட்டப்படி, ஒன்று: அவர் மரண தண்டனை ஏற்க வேண்டும். அல்லது இன்னொன்று: கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு நட்ட ஈடாக இந்திய மதிப்பில் 1 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. (எல்லா வழக்குகளிலும் 1 கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்கவேண்டும் என்பது சட்டம் அல்ல; வழக்கின் தன்மையைப் பொறுத்து அத்தொகையை நீதிமன்றம் முடிவு செய்யும்).
கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய 1 கோடி ரூபாயை தன் பணத்திலிருந்து யூசுஃப் அலி அவர்கள் வழங்கி, கேரளாவைச் சேர்ந்த ஹிந்து நபரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றினார். மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அந்நபர் கேரளாவில் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவரைக் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர் அவருடைய குடும்பத்தினர். அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் "யூசுப் அலி சாருக்கு நன்றி!" என நன்றிப்பெருக்கோடு கூறினர். அன்று கேரளாவின் எல்லாத் தொலைக்காட்சிகளும் அதை ஒளிபரப்பியதோடு, மறுநாள் எல்லா தினசரிகளிலும் செய்தியாக வந்தது.
யூசுஃப் அலி அவர்கள் தற்போது கேரளாவில், 15 கோடி ரூபாய் மதிப்பில், காந்தி பவன் என்ற பெயரில்
ஆதரவற்றோர் காப்பகம் ஒன்றை அமைத்து,
அதைத் தன் மறைவுக்குப் பிறகும்
தொடர்ந்து செயல்படத் தேவையான
ஏற்பாடுகளைச் செய்துள்ளார்; எவரின் பாராட்டையும் எதிர்பார்க்காமல்
இறைவனுக்காக அதைச் செய்திருப்பதாக
செய்தியாளர்களிடம் கூறினார்,
கோடிக்கணக்கில் செல்வம் இருந்தும்
இறைவழியில் செலவு செய்யாமல்
பதுக்கி வைத்து இன்பம் காணும்
செல்வந்தர்கள், யூசுஃப் அலியிடம்
பாடம் படிக்க வேண்டும்!