டெல்லியில் காற்று மாசுபாடு என்பது அதி தீவிரமாக மாறியுள்ளதால் பள்ளிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு விடுமுறை என டெல்லி முதல்வர் அறிவிப்பு.
டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசடைதல் என்பது மனிதர்கள் வாழ்வதற்கே அச்சுறுத்தலாக மாறிவருகிறது.
தற்போது கடந்த இரண்டு நாட்களாக காற்று மாசு நிலையானது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
இனி வரும் அடுத்த இரண்டு வாரத்திற்கு காற்றானது மேலும் மாசு அடையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு என்பது 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக முண்ட்கா பகுதியில் 498 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடு தற்போது அபாய கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த அளவிற்கு மாசுபட்டுள்ள காற்றானது ஆரோக்கியமுள்ள "குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடியது" என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி உள்ளது.
இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார். அதேபோல காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய தலைநகர் பகுதிக்கு (NCR) உட்பட்ட இடங்களில் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.