விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக விளங்கியவர். பட்டியலின மக்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர். சாதி, தீண்டாமை களுக்கு சவுக்கடி கொடுத்தவர். அரசியல், வரலாறு, தத்துவம், பொருளாதாரம், சட்டத்துறை என்று அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கியவர்.
உதயம்:
ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'நவ புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்.
இவ்வாறு சொல்லாலும், செயலாலும் வெற்றிக்கொடி நாட்டிய சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கர் அவர்கள் பிரித்தானிய இந்தியாவில் மாவ் எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார்.
தலித் இன மக்களின் தலைவர்:
(புனே உடன்படிக்கை)
தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும், செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் இவர் 1931ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு அழைக்கப்பட்டார்.[12] அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார்.
பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்:
இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகஸ்டு 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.
அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.
அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு 1949 நவம்பர் 26, அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.
பொருளாதாரம் குறித்த புத்தகமும், ரிசர்வ் வங்கியின் தோற்றமும்:
அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.
1.கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
2.1921-பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
3.1923-ரூபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்
கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.
மறைவு:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.