சேலம் ஜனவரி 03
சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகம். இதன் துணைவேந்தராக ஜெகநாதன் இருந்துவந்தார். பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போதைய பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் சொந்த லாபத்தினைக் கருதி வர்த்தக ரீதியான நிறுவனம் இதில் தொடங்கியிருப்பதாகப் புகார் வந்துள்ளது.
தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய அடித்தட்டு மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்காக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், கல்வி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாத பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் தான் தற்போது தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழகத்தைச் சுற்றிப் பல ஆண்டுகளாகச் சர்ச்சைகளும் பிரச்னைகளும் அடுத்தடுத்து வெடுத்துவருகின்றன.
இதழியல் துறை இணைப் பேராசிரியரான சுப்ரமணி, அங்குள்ள கலைஞர் ஆய்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இவரைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல்வித்துறை நியமித்தது. பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய ’பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம், கடந்த ஆண்டு வெளியானது.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே இவர் எழுதிய ’மெக்காலே - பழைமைவாதக் கல்வியின் பகைவன்' என்ற நூலின் மறு பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. நிர்வாக அனுமதி பெறாமல் இந்த நூல்களை எழுதியதற்காக, ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என விளக்கம் கேட்டு, சமீபத்தில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜெகநாதன், பேராசிரியர் சுப்ரமணிக்கு மெமோ வழங்கி பிரச்சினை துவங்கியது.
கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாசாரத் தன்மையுடைய விவகாரங்களுக்கு எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால், பெரியார் குறித்து புத்தகம் எழுதிய பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருந்தது முதலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பிரச்சனை ஒருபக்கம் சென்றுகொண்டிருக்க, அப்பகுதி காவல் நிலையத்தில் பெரியார் பல்கலைக்கழகத் துணை வேந்தரை, தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோ அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விதிகளை மீறி, அரசு அனுமதியின்றிப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளைத் தனக்குச் சொந்தமான பெரியார் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத் தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்தி நிதியை முறைகேடு செய்துள்ளதாக அடுத்த குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகத்தின் மீது எழுந்துள்ளது.இது தற்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.