2024 மார்ச் 31
தேர்தல் பத்திரம் ஊழல் இவற்றைக் காங்கிரஸ் அரசு செய்து இருந்தால் நாட்டையே ரணகளம் ஆக்கி இருப்பார்கள் பாஜகவினர்.
அண்ணாஹசாரேவை ஊழலுக்கு எதிராக டெல்லியில் படுக்கவைத்து திரைக்கதை,வசனம் எழுதி மீண்டும் உண்ணாவிரதம் நாடகம் நடந்திருக்கும். செய்திகளை மீடியாவில் நொடிக்கு நொடி வாசித்து பாஜகவினர் நாட்டின் தேச பக்தர்களாக அப்பாவி மக்களிடம் தங்களைக் காட்டிக் கொள்வார்கள்.
ஆனால் ஊழல் செய்தது ஒரே நாடு பாஜக கூட்டம்.இவர்கள் கொண்டு வந்த ஒரே தேர்தல் நிதி பத்திரம் 11 ஆயிரம் கோடி வரையிலும் சுருட்டியது. இந்தியாவில் உழைத்து 100 ரூபாய் வருமானத்தைப் பார்க்கும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைத்தது இந்த இமாலய ஊழல்.
சோப்பு,சீப்பு,கண்ணாடி,
அரிசி,பருப்பு,சமையல் என்னை, இட்லி,தோசை,சப்பாத்தி,
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,
பெட்ரோல்,டீசல்,மருந்துகள்,ஜவுளிகள்,
செல் ரீசார்ச்,எனச் சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் ஒன்றையும் விட்டுவைக்காமல் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகள் உயர்த்து உள்ளது .தயாரிப்பு மூலப்பொருட்களின் விலைகள் இந்த உயர்வுக்குக் காரணம் என நாட்டுமக்கள் நினைத்து வந்தனர்.
மாதச் சம்பளமும், தினக் கூலியும் பெறுபவனுக்கும் கட்டுப்படுத்த முடியாத விலைவாசி உயர்வுகளினால் சிக்கித் தவிக்கும் நிலையில்.
எந்த வித எதிர்காலச் சேமிப்புகளுமின்றி கையில் வைத்திருக்கும் பணம் கரைந்து வரும் காலங்களாக ஆளும் மத்திய பாஜக அரசு மாற்றிவிட்டன.
இந்தியாவில் இதனால் பாதிக்கக்கூடிய மிகுதியானவர்கள் ஏழைகளும்,நடுத்தர மக்கள்களும் தான். நாட்டில் ஊழல்கள் பல வழிகளில் நடந்துள்ளன. ஊழல் செய்பவர்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகள் என்பவர்கள் தான்.இன்றைக்கு நாட்டின் விலைவாசி உயர்வுக்குக் காரணமான மிகப்பெரிய ஊழல் என்றால் அது பாஜக அரசின் தேர்தல் பத்திரம் எனலாம்.
மனிதன் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களுக்கும் ஒன்று விடாமல் GST வரிவிதித்த மத்திய அரசு.
தேர்தல் பத்திரம் மட்டும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்ணுக்கு வேண்டுமென்றே தெரியாமல் போனது. பாஜக கட்சி ஒன்றிய அரசு என்ற போர்வையில் தனக்குச் சாதகமான போக்கை எடுத்துக் கொள்கின்றனர்.
சாலை வரி,வாகன வரி,காப்பீடு வரி,சுங்கச்சாவடி வரி,எனத் தன்னுடைய போக்குவரத்து வசதிக்காக ஒரு வாகனத்தை வாங்கியவனுக்கு இத்தனை வரிகள் செலுத்துகிறான். சொந்த நாட்டு மக்களிடம் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் அளவுக்கு இன்றைய காலகட்ட வரி விதிப்பு.
இதனால் மக்கள் படும் அவதிகள் எழுத முடியாத துயரங்களாக மாறிவிட்டன.உலக நாடுகளில் முதலாளித்துவம் கொள்கையும், வரைமுறையில்லாத வரி விதிப்புகளே பல புரட்சிகளை ஏற்படுத்தியது என்பது வரலாறு.
GST வரி விதிப்பு ஆன்லைன் வர்த்தகம்,கார்ப்ரேட் நிறுவனங்களின் நலன் மட்டுமே மத்திய பாஜக அரசால் கவனித்துக்கொள்ளப்படுகிறது.
சாலை வியாபாரிகள்,சிறு,குறு வியாபாரிகள்,வணிகர்கள், சிறுதொழில் முனைவோர்கள்,கைத்தொழில் செய்யக்கூடியவர்கள் என அனைவரும் இன்று குறைந்த வருமானமும், நிறைந்த செலவினங்களை எதிர்கொள்கின்றனர்.
GST வரி,EB கட்டணம்,கடை வாடகை,ஆள் சம்பளம்,பிள்ளைகளின் பள்ளிக் கூடம் கட்டணங்கள், வீட்டு வாடகை என அனைத்து வகையிலும் செலவழித்து விட்டு வட்டிக்குக் கடன் பெறும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இது இந்தியாவில் வாழும் அடித்தட்டு குடிமக்களின் பொருளாதார நிலைமையாகும்.இந்திய மக்களை ஆட்சி செய்யக் கூடிய அரசியல் கட்சிகள் ஊழல் மூலம் கோடி,கோடிக்காகப் பணத்தைச் சுருட்டி உள்ளனர்.
இந்தியாவில் அனைத்து முன்னணி அத்தியாவசியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் முதல் பொழுதுபோக்கு நிறுவனங்கள் வரையும்,கார்ப்ரேட் நிறுவனங்கள் எனத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் வாரி வழங்கியுள்ளன.
இதில் பாஜக கட்சிக்கு 60% மேல் தேர்தல் பத்திரம் நன்கொடைகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ்,திமுக,திரிமுனல் காங்கிரஸ்,அதிமுக,என அனைவரும் தேர்தல் பத்திர நன்கொடையைப் பெற்றுள்ளன. கம்னியூஸ்ட் கட்சிகள் மட்டுமே இவற்றைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை உச்சநீதி மன்றத்தின் அதிரடி தீர்ப்புகளினால் இந்த விவகாரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரியவந்தன.
அப்பாவி மக்களிடம் GST வரிகளையும் பெற்று,பல நிறுவனங்களிடம் தேர்தல் நன்கொடை பத்திரம் பெற்று நாட்டின் பொருளாதாரங்கள் அனைத்து வகையிலும் சுரண்டப்பட்டுவிட்டன.
கிழக்கு இந்திய கம்பெனி என்ற பெயரில் இந்திய மக்களிடம் வரி வசூல் செய்த ஆங்கிலேய அரசு சுதந்திரப் போராட்டங்கள் மூலம் விரட்டி அடிக்கப்பட்டன. இன்றைக்கு உள்நாட்டுக் கிழக்கு இந்திய கம்பெனியாக அரசியல் கட்சிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன.
இவர்களிடம் இருக்கும் தேர்தல் பத்திரம் கட்சி நிதிகளை நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும்.தனிநபர்கள் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்ப்பது குற்றமாகக் கருதுவது போல். கட்சிகளின் நிதிகளும் அதிகமாக இருப்பதும் குற்றமாகக் கருதபடவேண்டும்.
நாட்டின் வளங்கள் எந்த வடிவில் எங்கு முறைகேடாகச் சேர்ந்தாலும் அவைகளை விடுவித்து மக்களுக்கு கிடைக்கசெய்திடுவது ஓர் உண்மையான அரசின் கடமையாகும். இதுவே இன்றைய நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.