சென்னை ஏப்ரல் 22
தமிழ்நாடு தவ்ஹித் ஐமாஅத் மாநில பொதுச் செயலாளர் ஆர்.அப்துல் கரீம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில். 2024 பாராளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பல இடங்களில் இந்தியப் பிரதமர் மோடி பேசி வருகிறார். இராஜஸ்தானில் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
பிரதமர் மோடி பாசிச பாஜகவுக்கு ஆதரவாக இராஜஸ்தானில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இராஜஸ்தானில் பேசும் போது கடுமையான மதவெறுப்பு பிரச்சாரத்தை மேற் கொண்டுள்ளார். இது இந்திய இறையாண்மையை நேசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் கசப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இந்துக்களின் சொத்தை பிடுங்கித் தான் முஸ்லிம்களுக்குக் கொடுக்கப் போகிறார்கள் என்று மோடி பேசியுள்ளார்.
நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வத்தைக் காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும் என்ற தன் மத துவேசத்தைக் கக்கியுள்ளார்.
காங்கிரஸின் நக்சல் சிந்தனை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது என்ற கடுமையான வார்த்தைகளை மோடி சர்வ சாதாரணமாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்து அல்லது முஸ்லீம் என்ற வார்த்தை எங்காவது எழுதப்பட்டுள்ளதா என்று காங்கிரஸின் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்திற்காகப் பொய் பேசுவதும், ஆதாரமற்ற விஷயங்களைப் பேசுவதும், எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பயிற்சி. இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்தப் பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தைக் குறைத்ததில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் பொய்கள், மன்மோகன் சிங் பற்றி பொய்களைப் பரப்பிய விதம், கேவலமான அரசியலுக்கு உதாரணம் எனச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்த மத வெறுப்பு பேச்சைக் கண்டித்து தங்களுடைய எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மன்மோகன் சிங் என்ன பேசினார் என்பதை விளக்குவதை விட மதச்சார்பற்ற தேசத்தின் பிரதமர் இப்படி மதவெறுப்பைப் பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்தியப் பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தியத் திரு நாட்டில் சகோதரத்துவம் இருக்கக்கூடாது என்ற பாசிசச் சிந்தனையைக் கொண்ட மோடி இந்து பெண்கள் தெய்வீகமாக மதிக்கும் தாலியைப் பறிப்பார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தி இந்தத் தேசத்தைத் துண்டாட நினைக்கிறார்.
மதக்கலவரங்களை ஏற்படுத்தி இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குக் காரணமாக இருந்தவர்கள் தான் இந்தச் சங்பரிவாரக் கூட்டம். இந்து, முஸ்லிம் ஒற்றுமையைத் தேசத்தந்தை காந்தி ஆதரித்தார் என்பதற்காக அவரையே கொலை செய்தவர்கள்.
தற்போது வரை மதவெறுப்பை மட்டுமே மூல தனமாக வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். பாபர் மசூதி, முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து 370, பொது சிவில் சட்டம் இவை மட்டும் தான் அவர்களின் செயல் திட்டம். நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து சிறிதும் அக்கறை இல்லாதவர்கள்.
இந்தியத் தேச விடுதலைக்காக தங்களின் கல்வியை இழந்து, பொருளாதாரத்தை வாரி வழங்கி, சிறைக்குச் சென்று, வழக்குகளைச் சந்தித்து தங்கள் இன்னுயிரையும் நீத்த இந்நாட்டின் பூர்வ குடிகளான மண்ணின் மைந்தர்கள் முஸ்லிம்களைத் தான் ஊடுருவல்காரர்கள், வந்தேறிகள் என்று மோடி புளுகித் தள்ளியுள்ளார்.
குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு கடுமையான வேதனைக்கு ஆளாகினார்களே என்று கேட்கும் போது நாம் காரில் செல்லும் போது நாய் அடிபட்டால் அதற்காக வேதனைப் படுவோமா என்று கேட்டவர்தான் இந்த மோடி. முஸ்லிம்களை நாய்கள் போலக் கருதும் இவரிடம் இது போன்ற வெறுப்பு பேச்சுக்கள் தான் இடம்பெறும்.,
மதச்சார்பற்ற இந்தியத் தேசத்தின் பிரதமராக இருக்கக் கொஞ்சம் கூட தகுதியற்றவர் இந்த மோடி. தன்னுடைய பிரதமர் பதவி இந்தத் தேர்தலில் பறி போகும் என்பதை உணர்ந்துதான் இப்படி உளறி வருகிறார். தேர்தல் ஆணையம் இந்த வெறுப்பு பேச்சின் மீது கடுமையான நடவடிக்க எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம் என வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.