மேட்ரிட் மே19
இஸ்ரேலுக்கு ஆயுதக் கப்பல் அனுப்பிய விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தர் ஜெய்ஸ்வாஸ் கூறும்போது இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்.
அதன் விபரம் வருமாறு. சென்னையிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்ற ஆயுதக் கப்பல், ஸ்பெயின் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை நோக்கிச் சென்றுள்ள இந்தக் கப்பலில் சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் கன்டெய்னர்களை கடந்த மாதம் 8ம் தேதி அனுப்பியுள்ளது.இவற்றை இஸ்ரேல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பெறுகிறது.
செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் இந்தக் கப்பல் ஆப்பிரிக்க நாடுகளைச் சுற்றிக் கொண்டு ஸ்பெயின் வழியாக இஸ்ரேல் செல்கிறது. தற்போது இந்தக் கப்பல் மொராக்கோவிலிருந்து ஸ்பெயின் நோக்கிச் செல்கிறது.வழியில் அந்தக் கப்பல் ஸ்பெயின் நாட்டின் கர்டஜெனா துறைமுகத்தில் வரும் 21-ம் தேதி நின்று செல்ல அனுமதி வேண்டியது.
அந்தக் கப்பலில் 27 டன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டறிந்த ஸ்பெயின் அரசு, தங்கள் நாட்டுத் துறைமுகத்தில் நின்று செல்ல அனுமதி மறுத்துள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மேனுவல் அப்பேர்ஸ் கூறும்போது, ‘‘இஸ்ரேலுக்குச் செல்லும் ஆயுதக் கப்பல், ஸ்பெயினில் தங்கிச் செல்ல அனுமதி மறுப்பது இதுவே முதல் முறையாகும். இது எங்கள் நாட்டின் உறுதியான கொள்கையாக இருக்கும். மத்தியக் கிழக்குப் பகுதிக்கு மேலும் ஆயுதங்கள் தேவையில்லை. அங்கு அமைதிதான் வேண்டும்’’ என்றார்.
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஸ்பெயின் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.