2024 ஜூன் 20
தமிழகத்தில் முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காகக் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லீம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3.5% உள்ஒதுக்கீட்டை 2008ம் ஆண்டு மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக தமிழக அரசு வழங்கியது.
மதத்தின் பெயரால் எந்த மதத்திற்கும் சலுகைகள் அளிக்கப்படக்கூடாது என்பது இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். இதனால் மாநில அரசுகள் மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க இயலாது.
பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் தரும் பரிந்துரையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படலாம் அது செல்லுபடியாகும்.
கல்வி,வேலைவாய்ப்பு பெற பொதுப் பிரிவில் போட்டியிட முடியாதவர்கள். தங்களுடைய இயலாமையால் வாய்ப்பைப் பெறமுடியாது என்ற நிலை வரும்போது இவர்கள் தானாகவே சமூக பங்களிப்பிலிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள். அப்படிப்பட்ட நிலையைத் தவிர்கவே இவர்களுக்கு இருக்கின்ற ஒரே வாய்ப்பு அரசின் இட ஒதுக்கீடு என்கிற பங்கீடு முறையாகும்.
பிற்படுத்தப்பட்ட நிலையை ஆய்வு செய்வதற்கான அரசு நியமிக்கப்பட்ட ஆணையம் பரிந்துரையின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகிறது.
ஒடுக்கப்பட்டச் சமூகமே இந்தியாவில் 98% பெரும்பான்மையான மக்களாக வசிக்கும்போது. இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்பது உச்ச நீதிமன்றம் விதித்துள்ள ஓர் அநீதியான தடை யாகும்.
இந்தியாவில் ஆட்சி அதிகாரம்,கல்வி, வேலைவாய்ப்புகளில் 2% சதவீதத்தில் வசிக்கும் உயர் சமூகத்தினர் இவற்றில் போட்டியிட்டு இந்த 50% இடத்தையும் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
சமூகநீதி குறித்து தந்தை பெரியார் கூறியதாவது,ஒவ்வொரு சாதிக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை அரசு வழங்கிட வேண்டும். பிராமணர்களுக்குக் கூட 2 சதவீதத்தைக் கொடுத்துவிடுவதாகும். இதுதான் உண்மையான வகுப்புவாரி ஒதுக்கீடு. இது இந்தியச் சாதியச் சமூகத்தில் நியாயமான கோரிக்கையாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து விட்டதாக நாம் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஆங்கிலேயர்களுக்குப் பிறகு அடுத்தபடியாக அடிமைத் தனம் இன்றளவும் மறு வடிவத்தில் ஆட்சி செய்து கொண்டுதான் உள்ளது.
இன்றைக்கு எந்தச் சமூகமாக இருந்தாலும் அவர்களின் மொத்த மக்கள் தொகையைக்காட்டிலும் குறைவாகவே அவர்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்படுவதே இதற்கான சான்றுகளாகும்.
தமிழகத்தில் முஸ்லிம்கள் பெற்று வரும் 3.5% இட ஒதுக்கீடு இவை போதுமானது அல்ல. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த நாடாளுமன்றத் தேர்தலின் 40/40 தொகுதிகளில் வெற்றிபெற்றதும். அதற்கான வெற்றியின் சாதகங்களையும் நன்கு அறிந்துள்ளனர்.
முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்றும் பல தளங்களில் உள்ளன. அரசு நலத்திட்டங்கள், வேலை வாய்ப்பு,கடன் வசதி பெறுதல், தனியார்த் துறைகளில் ஒதுக்கீடு,தொகுதிச் சீரமைப்பு,இடஒதுக்கீடு என ஏராளமான விவகாரங்கள் இருக்கின்றன.
இந்த 3.5% இடஒதுக்கீடு ஆணையைப் பெற்றதோடு முஸ்லிம் இயக்கங்களின் பணிகள் ஓய்ந்து விட்டதாகக் கருதிவிட்டனர். முஸ்லீம் சிறுபான்மை மக்களின் உரிமையைப் பெற வெறும் 3.5% இடஒதுக்கீடு என்பதோடு நிறுத்திக்கொண்டால் அதில் எந்தப் பயனுமில்லை.
பிரிட்டிஷ் அரசு இயற்றியுள்ள 1976ம் ஆண்டு இன உறவுகள் சட்டத்தின் வழியில் ‘சமவாய்ப்பு ஆணையச் சட்டம்’ இயற்றப்பட வேண்டும். நாம் அதற்கான வரைவைத் தயாரித்து அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப் பெரியாரின் சமூகநீதி பேசும் திமுக தலைமையிலான முதல்வர் ஸ்டாலின் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். இதில் இவர்களின் சமூகநீதியின் நிலைப்பாடு தெள்ளத்தெளிவாக்கத் தெரிந்துவிடும்.