ஆகஸ்ட் 25
எந்தவிதமான உயர்கல்வியும் அவசியமில்லை. இவர்களுக்கென நுழைவுத் தேர்வும் எதுவுமில்லை.இவர்கள் தகுதிக்காக பொறியியல், மருத்துவம்,போன்று கல்லூரிகளும் இல்லை.
வாழையடி வாழையாக ஆட்சிக்கு வருகிறார்கள்.அதிகாரத்தில் அமர்ந்து கொள்கிறார்கள், சுகபோகமான ஆட்டம் போடுகிறார்கள். இவர்களுக்கான எந்தவிதக் கடிவாளமும் இல்லாதவர்கள் தான் இன்றைய இந்திய அரசியல்வாதிகள்.
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர்,சட்டமன்ற உறுப்பினர்கள்.இதுபோன்ற தேர்தல் இந்திய அரசியலைப் படுமோசமான நிலைகளுக்கு கொண்டு செல்கிறது.
கொலை,கொள்ளை,வன்முறையைத் தூண்டியவர்கள்,ஊழல்வாதிகள், முறைகேடுகள்,மோசடி செய்தவர், உள்ளிட்ட குற்றப்பின்னணி கொண்டவர்கள் தான் இன்றைய இந்தியாவின் ஆட்சியாளர்களாக உள்ளனர்.
நாடாளுமன்றம்,சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு சிலர்கள் மட்டுமே உயர்கல்வி கற்றுள்ளனர், மற்றவர்கள் குறைந்த கல்வி அல்லது கல்வித்தகுதி இல்லாத அரசியல்வாதிகளாகும். இவர்களுக்கு உதவியாளர்களாக படித்தவர்கள் கீழ் நிலையில் பணியாற்றுகிறார்கள்.
சிறந்த ஆட்சிமுறை,ஊழல் இல்லாத நிர்வாகம், எதிர்கால சிறந்த செயல் திறன்கள் இவைகள் மற்ற ஏனைய துறைகள் போல் இனி அரசியல் துறைக்கும் அவசியமானது.
இந்தியாவில் மதவாத பிரிவினை,சாதியப் பாகுபாடுகள் இவற்றை வைத்துத்தான் அரசியல் செய்யப்படுகிறது.ஆனால் இவைகளின்றி இனி சிறந்த அரசியல் செயல்பாடுகளுக்குப் படித்த கல்வியாளர்கள் தான் தேவையுடையவர்கள் ஆவார்கள்.
படிக்காத மேதை காமராஜர் இலவசக் கல்வி திட்டத்தைக் கொண்டு வந்து கல்வியை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கு அன்றைய அரசியலில் இருந்தது. இன்றைய அரசியலில் கல்வியை வியாபாரமாக்கிய பெருமை தற்போதைய அரசியல்வாதிகளையே சேரும்.
படித்தவர்கள் அரசியலைத் தவிர்ப்பதினால் கட்சிகளின் செல்வாக்குகளை கொண்டு,தேர்தலில் வாக்களிக்கும் முறைகளின் மூலம் தகுதியில்லாதவர்கள்,சினிமா நடிகர்கள் என ஆட்சியில் அமர்ந்து கொள்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்கள் இந்திய அரசியலிலும்,தமிழக அரசியலிலும் நிகழ்ந்துள்ளன.
தற்போது ஒன்றிய அரசு அனைத்துச் செயல்களிலும் பழமையானது எனக் கூறி புதிய வழிமுறைகளைக் கொண்டுவந்துள்ளன.டிஜிட்டல் பண பரிவர்த்தனை,புதிய கல்விக் கொள்கைகள், புதிய குற்றவியல் சட்டங்கள், தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப அரசின் செயல் திட்டங்கள் வகுப்பதும், இதன் மூலம் திறமையான நிர்வாகத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்க்காக இவற்றை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது.
இதுபோல் நாட்டில் தகுதியான மருத்துவர்களை உருவாக்க மருத்துவத்துறையில் NEET என்கிற நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டுவந்துள்ளன. கல்லூரி ஆசிரியர்கள் நியமனம், பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசியத் தகுதித் தேர்வு,IAS,IPS, மற்றும் அரசுத்துறை வேலைகளுக்கு என ஏராளமான நுழைவுத்தேர்வு முறைகளை இந்திய நாட்டில் நடத்தப்படுகிறது. இதற்கான தேசியத் தேர்வு முகமை (NTA), என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களுக்கு தேசியத் தேர்வு முகமை மூலம் எந்தவிதமான தேர்வும் இல்லை.
சட்டங்களை ஏற்றிடும் நாடாளுமன்ற,சட்டமன்ற அவைகளுக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கும் NEET போன்ற கடுமையான நுழைவுத் தேர்வுகள் நடத்தித் தேர்தலில் போட்டியிடும் தகுதியை தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கவேண்டும்.
இதன் மூலம் படிக்காதவர்கள் அரசியலிருந்து ஓரம் கட்டப்படுவார்கள். ஆட்சி அதிகாரம் இனி படித்தவர்களிடம் இருந்தால் மட்டுமே தேசநலன் காக்கப்படும். இல்லையெனில் நாடு நாசமடைந்துவிடும்.
இந்திய அரசியல்வாதிகள் இவர்களுக்கு சாதகமானதை வைத்துகொண்டு மற்றவர்களுக்கு சட்டத்தை ஏற்றுகிறார்கள் உத்தரவு வெளியிடுகின்றனர். இது போன்ற நவீன அடிமைதனத்திலிருந்து இந்தியர்கள் விடுபடவேண்டும்.