தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாக இல்லாமல் தேவைக்கு உபயோகப்படுத்தும் பொருளாகவே இருந்த ஒரு காலம்.
இணையத்தில் வாசிக்கும் இந்த காலத்தில் காகிதத்தின்
வாசனையையும், திருப்பும்போது ஏற்படும் சப்தத்துடனும்
செய்தித்தாள்களின் இணைப்பு புத்தகங்களுக்காகவே காத்திருந்த என் இளமைக்காலம்
என்னுள் முதலில் ஏற்படுத்திய தாக்கம், என்ன கிடைத்தாலும்
படிக்கவேண்டும் என்பதே…
செய்தித்தாள்களின் இணைப்புபுத்தகங்களின்
ரசிகையாக இருந்தேன்.
கதை, கவிதை, நகைச்சுவை, போட்டிகள், உண்மை
சம்பவம், என்று நவரசங்களும் நடனமாடிய இளமைப்பருவம்
என்னுடையது. என் தோழிகளுக்கு நான் சொல்லும்போது நம்முடைய கற்பனைக்குதிரை
கடிவாளமில்லாமல் கபடி ஆடும். கோபம், வருத்தம் , மகிழ்ச்சி, துக்கம், துயரம் என
உணர்வுகளையும் , சத்தியம், பொறுமை,
நேர்மை, உண்மை , கட்டுப்பாடு,
நீதி என்ற வாழ்வின் சாரம்சங்களையும் எனக்குள் ஒளி ஏற்படுத்தியது என்
வாசிப்பே…
அந்த சிறு வயதிலும் என் வீட்டு பாட்டிகள்
“புத்தகம் என்பது புருஷன் போல கண்டால் விட மாட்டீர்களே “என்று கதைப்பார்கள்.
அப்போது அதற்கான அர்த்தம் தெரியாது, அர்த்த்தை கேட்க
வேண்டும் என்ற எண்ணமும் தோன்றவில்லை.
கதைகள் ஒரு காடு எனில் காட்சியில் காடு வந்து
போகும் ,பேருந்து எனில் எங்கள் ஊர் பேருந்து ஞாபகம் வரும் ..
காட்சிகளை நாமே நம் உணர்வுகளின் அடையாளமாகவும், கற்பனைகளின்
உந்துதலாகவும்காணப்பெற்றேன்.
மலர்களின்
வாசம், குருவிகளின் நாதங்கள், வண்ணத்துப்பூச்சியின்
அழகு , காக்கைகளின் கரைச்சல்கள், வாகனங்களின்
இரைச்சல்கள்,
தெருக்களின் சப்தங்கள், சேவல்
சண்டைகள், கதைகளின் வரும்போது ஒலிகளாகவும் , ஒளிகளாகவும் பெறப்பெற்றேன்..
வாசிக்க வாசிக்க என்னை அறியாமல் படைப்பை
உருவாக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அன்று
என் தோழி இன்னொரு தோழிக்கு எழுதிய ஒரு கவிதை.
அரபிக்கடல் வற்றினாலும்
என் அன்புக்கடல் வற்றாது.
பசிபிக்கடல் வற்றினாலும்
என் பாசக்கடல் வற்றாது.
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்.
இதை நான் படித்தவுடன் நாமும் ஏன் கவிதை
எழுதக்கூடாது என்று தோன்ற ஆரம்பித்தது.
(90 களில்
பள்ளிகளில் படித்த எல்லா மாணவிகளுக்கும் அந்த கவிதை தெரியுமென எனக்கு
கொஞ்சம் லேட்டாகத்தான் தெரிந்தது)
சின்ன சின்ன கிறுக்கல்களுடன் ஆரம்பித்தேன். அது
இறைவனின் கிருபையால் இன்று வரை அது தொடருகிறது. நகைச்சுவைத்துணுக்குகள் எழுதி
பத்திரிக்கைக்கு அனுப்பினேன். குறுக்கெழுத்து போட்டிகளில் கலந்து பரிசுகள்
வாங்கினேன். வாசிப்பு படிப்படியாக என்னை உயர்த்திக்கொண்டே சென்றது.
ரமணிச்சந்திரன், சிவசங்கரி
போன்ற பெண் எழுத்தாளர்கள் எனக்கு எழுத்தின் மூலம் அறிமுகமானார்கள். எண்ணங்கள்
விசாலமவதை கண்கூடாக பார்த்தேன். மூட நம்பிக்கைகளை அப்போதே வெறுத்தேன். இலக்குகளை
தேட ஆரம்பித்தேன்.
கடமைகளை இரசிக்க ஆரம்பித்தேன்.
இல்லாதோருக்கு இயன்ற வரை உதவக்காத்திருந்தேன்.
தொடர்புகளை அதிகப்படுத்த ஆரம்பித்தேன். சுவாரஸ்யமான விஷயங்களை பகிர ஆரம்பித்தேன்.
பொது அறிவு விஷயங்களை தேட ஆரம்பித்தேன். எழுத்தும், வாசிப்பும்
தேனைவிட இனிமையாக இருந்தது எனக்கு .
வியாழக்கிழமைகளில் ஜெயா டீவியில் 15 நிமிட ஒளிபரப்பான மனோ த்த்துவ நிகழ்ச்சி என்னை ஈர்த்தது. அதில் வரும்
குறிப்புகளை என்றோ ஒரு நாள் எனக்கோ என் சந்ததிகளுக்கோ உபயோகமாகும் என ஒரு
நோட்புத்தகத்தில் குறிப்பு எடுத்து வைப்பேன்.அதுவே என் தொழிலாக ஆகும் என அப்போது
எனக்குத் தெரியாது. சைக்காலஜி தேவை கொரோனா காலங்களில் நிறைய பேருக்குத்
தேவைப்பட்டது . அது வரை குடும்பம் என்று இருந்த நான் மீண்டும் உயிர்த்தெழுந்தேன்.
எனக்கான கதவுகளை ஏராளமாக என் இறைவன்
திறந்துவைத்தான். கேட்ட அத்துனை துஆக்களும் அற்புதமாக வெளிப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். கற்றதையும், பெற்றதையும், கணக்கில் இட முடியாது என்றாலும் பல கவிதைகளும், கட்டுரைகளும்
எழுதி முடித்தபின் ஒரு குழந்தையை பிரசவித்த திருப்தி மட்டுமே எனக்கு தோன்றும்.
வாசிப்பை வாழ்வின் அங்கமாகவும், வழக்கமாகவும் ஆக்கிக்கொண்ட
அத்துனை மனிதர்களும் மேம்பட்ட வாழ்ககையைத்தான் பெற்றிருக்கிறார்கள் என்பது
என்னுடைய தார்மீக மந்திரம்.
வாசிப்பை மூச்சு போல் (சு)வாசித்ததால்
வானமும் வாழ்ககையும் வசப்படும் என்று எனக்கு
உயர்(ணர்)த்திவிட்டு சென்றது…..!!
தலைநிமிர்ந்து வாழ தலைகுனிந்து படிப்போம் .
வாழ்க வையகம். வளர்க நம் கவனம் .