Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

திருமண உறவில் அன்பு
தென்காசி முபீனா Sep 27 2024 வாழ்வியல்

திருமண உறவில் அன்பு



என்னவள், என்னவன் என்ற சொல்  திருமணப்  பந்தத்தின் உளப்பூர்வமான உன்னத வார்த்தை. கணவன் மனைவியின் தேடல் வார்த்தை.

 

திருமண உறவு என்பது காலத்தின் கடமையில்லை. மனித வாழ்க்கையின் இரண்டாவது கட்டம். அடுத்த சந்ததிகளை உருவாக்குகின்ற  தருணம். கணவன், மனைவி உறவென்பது, கணவன் மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் கடைசிக் காலம் வரை வாழ்வதற்குரிய உன்னதமான உறவுதான் கணவன் மனைவி உறவு ஆகும். இந்த உறவை வழி நடத்துவதற்கும், வலிமைப் படுத்துவதற்கும் மிக முக்கியமான அஸ்திவாரம் ஒன்று தேவைப்படுகிறது.

 

வீட்டைக் கட்டுவதற்கு ‘அஸ்திவாரம்’ பலமாக இருக்க வேண்டும். அதைப் போன்று திருமணம் என்ற பந்தத்திற்கான அஸ்திவாரம் அன்புதான். இந்த அன்பு ஒன்று மட்டும் திருமணப் பந்தம் நிலைத்து நிற்பதற்கு போதுமா என்றால் இல்லை.  ஆனால் மேலதிகமான குணங்களும் தேவைப்படுகிறது. இந்த மேலதிகமான குணங்களை  இந்த அன்பு ஒன்றுதான் அழகாக்குகிறது. கணவன் மனைவி உறவில் அன்பு என்ற ஒன்று திருமணப் பந்தத்தை அழகாகவும், கவியின் வர்ணனையாகவும் ஆக்குகிறது. கணவன், மனைவி உறவில் அன்பு எப்பேற்பட்டது என்பதைப் பார்ப்போம்.

 

 

திருமண உறவின் அன்பு என்பது, ஆசை அறுபதும், மோகம் முப்பதும் என்ற முதுமொழிக்கேற்ப தொண்ணூறு நாள் மட்டுமே தொடரும் அன்பல்ல. மாறாக, திருமணத்தில் தொடங்கி மறுமை வரை இருக்க வேண்டும். சரி அந்த அன்பு எப்படித் தொடரும்? உன்னுடைய மனைவியின் வாயில் ஊட்டுகின்ற ஒரு கவள உணவிற்குக்கூட உனக்கு நன்மை இருக்கின்றது என்று ரசூல் (ஸல்) அவர்களின் கூறுகின்ற ஹதீஸில் இருந்து திருமண உறவின் அன்பு வலுவாகின்றது. வெளியில் சென்று வரும் கணவன் வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் மனைவியிடத்திலும், தனக்காக, தன்னை எதிர்பார்த்து ஒரு ஜீவன் காத்திருக்குமே என ஓடி வருகின்ற கணவனிடத்திலும் இருக்கின்ற அன்பு என்பது இரசனைக்குரியது.

 

அனுபவித்தவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தின் சுகம். இந்த அன்பு திருமணப் பந்தத்தில் மட்டுமே அனுபவிக்க முடியும். ஒரு பெண் தன் குழந்தையைப் பிரசவிக்கும்போது தன் கணவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். அதேபோல் கணவனின் ஆசையும் தன் மனைவியை முதலில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவான். இந்தத் தருணத்தைச் சுமந்தவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். சிலரின் வாழ்க்கையில் அது ஒரு கேள்விக் குறிதான்.

 

கணவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு தன் மனைவி கருவைச் சுமந்த நாளிலிருந்து 9 மாதம்வரை ஏக்கங்களோடு காத்துக் கொண்டிருந்தவன், 10வது மாத இடையிலே அல்லது நிறைவிலோ தந்தை எனும் பொறுப்பைச் சுமக்கும்போது தன்னையறியாமல் தன்னோடு இருக்கும் தோழர்களைக் கட்டித் தழுவி அழுகிறான். (திருமணப் பந்தத்தின் இது அடுத்த நிலை) இந்த அழுகை யாரிடம் இருந்து வரும் தெரியுமா? தன் மனைவியை நேசிக்கக்கூடிய, மனைவியால் நேசிக்கப்படுகின்ற ஒருவனிடத்திலிருந்து மட்டுமே வரும் உணர்ச்சிப்பூர்வ அன்பின் வெளிப்பாடு (கண்ணீர்).

 

கணவன், மனைவி பந்தத்தில் அன்பை எவ்வாறு நிலைப்படுத்துவது? கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்வதற்குச் சில வழிமுறைகளைக் காண்போம்.

 

1,கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேச வேண்டும்.

 

2,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.

 

3,யாரிடமும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுத்து விடக்கூடாது.

 

4,கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர்  சந்தேகம் கொள்ளக்கூடாது.

 

 5,இருவரும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

 

6,எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுக்காமல் இருவரும் ஒருவரையொருவர் கலந்தாலோசித்தல் வேண்டும்.

 

 7,தன்னுடைய வறுமையை ஒருவரிடமும் தெரியப்படுத்த வேண்டாம்.

 

  8, கணவன், மனைவி அந்தரங்க விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளல் கூடாது.

 

 9,மனைவியைக் கணவன் வெளியிடத்தில் கை ஓங்க  கூடாது.

 

 10, சந்தர்ப்பம் கிடைக்கும்போது சிறு, சிறு பரிசுகளை இருவரும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.

 

 இந்தத் திருமணப் பந்தத்தில் கவனம்:

 இந்தத் திருமணப் பந்தத்தில் மட்டும் ஏன் இவ்வளவு கவனம் இருக்க வேண்டும்காரணம் ஷைத்தான். அவன் கணவன்-மனைவிடம் விரிசல் உண்டாக்குவதில் துரிதமாகச் செயல்படுகிறான். அதில் மிகுந்த ஆர்வம் கொள்கிறான். ஏனென்றால்  கணவன்-மனைவி பிரிவில் அல்லாஹ் தனது  அரியாசனம் நடுங்கும் அளவிற்குக் கோபம் கொள்கிறான்.

 

 கணவன்-மனைவி உறவில் உள்ள அன்பு:  

 கணவன், மனைவி உறவில் எதற்காக இவ்வளவு அன்பு இருக்க வேண்டும்? ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய விலா எலும்பிலிருந்து அவர்களின் மனைவி ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் படைக்கப்பட்டதாலோ என்னவோ அவர்களுடைய சந்ததிகளாகிய நம்முடைய உறவிலும் அன்பைப் பரிமாறிக் கொள்வதாக இவ்வளவு அக்கறை கொள்ள (அல்லாஹ்) வைக்கின்றானோ என்னவோ?

 

முடிவுரை:

நாம் அனைவரும் இந்தத் திருமணப் பந்தத்தை இரசனையோடு வாழ்ந்து அல்லாஹ்வின் திருப்தியைத் பெற்று, சொர்க்கம் செல்ல அவனே அருள்புரிவானாக.


=====