ஆய்வு முன்னுரை
”தமிழுக்கு அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
தமிழே உணர்வாக, தமிழே உயிராக, தமிழே வாழ்வாக, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து சிறந்தவர், நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிக் குலவும் நம் நாஞ்சில் நாட்டு நாவலர், செய்குதம்பிப் பாவலர். தனக்குவமை இல்லாராய் சரித்திரத்தில் இடம் பெற்ற சதாவதானி. இசுலாமியக் குடும்பத்தில் பிறந்தாராயினும் எல்லா சமயத்தவர்பாலும் ஈடில்லா அன்பும் இதய நெகிழ்வும் கொண்டவர். இவரால் செந்தமிழ் செழுந்தமிழாகியது. இதனாலேயே எம் சிந்தையும் அவர்பால் சென்றது.
31.07.1874.ல் பிறந்தவர். 31.12.1950 வரை இப்புண்ணிய பூமி, இவரைச் சுமக்கும் பேறு பெற்றிருந்தது. இலக்கியத்தமிழ் எழுச்சியோடு பீடு நடைபோட உலாவிவந்த, இவ் இசுலாமியத் தென்றல் இன்று நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
”எல்லா வல்ல றின் பெருமை
இயம்பற்கரிய வாயிடினும்
வல்லார் நாவில் என்னாளும்
வாழாய் வாழாய் தமிழ்த் தாயே”
இவரைப் பற்றி கீழ்வரும் கட்டுரையில் காண்போம்.
காங்கிரஸ் பிரச்சாரம்
ஆங்கில ஆட்சியினை எதிர்த்துச் சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 1920-ல் நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியப் போது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையில் நடந்தன.
1937-ம் ஆண்டில் பாவலர் நாகர்கோவில் நகராண்மைக் கழகத் திடலில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன் என்றார். பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துக் கொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர்.
நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்போதும் இலவசமாக ஏறிச் செல்லும் உரிமை தந்து சிறப்பிக்கப் பட்டிருந்தார்.
இந்திய விடுதலையில் நாட்டங் கொண்டு காந்தியடிகள் தலைமையில் போராடினார். கதரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததுடன் தனது வாழ்நாள் முழுவதும் கதர் ஆடையை அணிந்தார்.
மனித சமுதாயத்தை மேம்படுத்தவும் சாதி, சமய வேறுபாடுகள் கடந்து கடைசி மனிதனைக் கடைத் தேற்றவும் கண்ணயராது பாடுபட்டார்.
பிற சமயத்தவர் வெறுப்படையாத வகையில் சமய நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க கருத்துரை வழங்கினார். இந்தியர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வலியுறுத்தினார். செந்தமிழில் சமய தத்துவங்களை பாமரரும் புரிந்துக் கொள்ளும் வகையில் பட்டித் தொட்டி எல்லாம் பேசினார்.
மறுமணத்தை ஆதரித்தவர்
”அறுத்தால் கட்டு என்ற வேளான் மொழிக்கு இணங்க பெண் தன் வாழ்வை இழந்தால் மீண்டும் மணவாளனைக் கட்டிக் கொள்ள தடையில்லா சமுதாய பெண்டிர்க்குத் தடை போடக் கூடாது” என்பதை பாவலர் பேசியதோடு மறுமணத்தையும் ஆதரித்தார்.
சதாவதானம்
ஒருமுறை இவர் சதாவதானம் நிகழ்த்தும் போது கூட்டத்தில் இருந்த ஒருவர் துருக்கனுக்கு ராமன் துணை என்ற வெண்பா ஈற்றடியை எடுத்துக் கொடுத்தார். உடனே இவர் பாட ‘பரத லட்சுமணா, சத்’ என்று முந்தைய அடியில் சேர்த்து பரத, லட்சுமண் சத்துருக்கனுக்கு ராமன் துணை என்று பாட்டை முடித்து வைத்துப் பாராட்டை பெற்றார்.
நூறு வெவ்வேறு விதமான கேள்விகள், சந்தேகங்களுக்கு தக்க பதில் தருகின்ற சதாவதான சாதனையை சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் 1907ல் நிகழ்த்திக் காட்டினார். இறை நாம உச்சரிப்பு, கைப்பணி தலைவரோடு உரையாடல் இலக்கண, இலக்கியம் இருமுறை கேட்டு வெண்பாவை ஒப்பித்தல் உள்ளிட்ட 10 விஷயங்களில் இக்கேள்விகள், சந்தேகங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் முதல் சதாவதாணி எனப் போற்றப்பட்டார்.
பொதுத் தொண்டில் ஈடுபாடு
”நேற்றைய மறவாதே, கள்ளைக் குடியாதே” உள்ளிட்ட தலைப்புகளில் பேசியும், பாடியும் மக்களின் சிந்தனைகளைத் தூண்டினார். கவிமணியால் சீரிய செந்தமிழ்ச் செல்வன் என்றும் பாண்டித் துறை தேவரால் ‘தமிழின் தாயகம்’ என்றும் போற்றப் பட்டார். அரை நூற்றாண்டுக்கு மேலாக பொது தொண்டில் ஈடுபட்டார்.
வள்ளலார் குறித்த தமிழகம் முழுவதும் உரையாற்றினார். மத நல்லிணக்கத்துக்காகப் பெரிதும் பாடுபட்ட இவருக்கு காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பூரண கும்ப மரியாதையோடு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அந்நிய நாட்டுத் துணிகள் எரிப்பு போராட்டத்தில் அப்பா பேசும் போது ”ஒரு நல்ல மணமகன் கைத்தறி வேட்டி தான் அணிவான் பிணமகனுக்குத் தான் மில் துணி போர்த்துவாங்க. நீங்க மணமகனா பிணமகனா?” எனக் கேட்டதும் கூட்டத்தில் மில்துணி அணிந்திருந்தவர்கள் அதைக் கழற்றி எறிந்தார்களாம். ஜீவா, திரு.வி.க மாதிரி முக்கியமான தலைவர்கள் அப்பாவின் பேச்சுக்கு ரசிகர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
சமய நல்லிணக்கம்
”ஓடும் அவதானம் ஒரு
நூறும் செய்திற்தப்
பாரில் புகழ் படைத்த பண்டிதன்
சீரிய செந்தமிழ் செல்வன்
செய்கு தம்பிப் பாவலர்”
எனக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் பாடினார்.
”சாதிகுலம் சமயமெல்லாம்
தவிர்த்தெனைமேல் ஏற்றித் தனித்ததிரு
வமுதளித்த தணித் தலைமைப் பொருளே,
ஆதிநடு கடைகாட்டா அகண்ட பகிரண்ட
ஆருயிர்கள் அகம்புறம் மற்றனைத்து
நின்ற மொழியே,
ஓதியுணர்ந்தவரெல்லாம் எனைக் கேட்க
எனைத்தான் ஓதாமலுணர்ந் துணர்வாம்
உருவுறச் செய்யுறவே,
ஜோதிமயமாய் வளங்கித்
தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசேயென் சொல்லு
மணித்தருளே!”
இப்பாடலை முழங்கினார். கேட்ட அவையோர் இவருடைய சமய நல்லிணக்கப் பாங்கை உணர்ந்து கையொலி எழுப்பி மகிழ்ந்தனர். பல அரங்குகளில் தமது வாதத் திறமையால் “அருட்பா அருட்பாவே என்று நிறுவினார்”
ஆய்வு நிறைவுரை
”வாஞ்சை யுடனே கடலாடும்
வண்ண வண்ண மணற்பரப்பில்
வந்து குவியும் வெண்சிப்பி
வாரிக்கொள்வார் யாருமிலர்
பூஞ்சிற கோடு புள்ளினங்கள்
பொதுவில் அமர்ந்தே இளைப்பாறும்
பொன்னொளிச் சூழல் பூமரங்கள்
பொதிந்த பசுமைத் தோரணங்கள்”
”பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு இன்றளவும் பாவலர் தெரு” என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசு மேல் நிலைப் பள்ளிக்கு ”சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப் பள்ளி” என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது. இந்திய அரசால் ”31 திசம்பர் 2008 அன்று இவரது நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது”. மனித சமுதாயத்தை மேம்படுத்தவும் சாதி சமய வேறுபாடுகள் கடந்து கடைசி மனிதனைக் கடைத் தேற்றவும் கண்ணயராது பாடுபட்டார். தனது இறுதி மூச்சுள்ள வரை செந்தமிழைப் பாடிய செய்குத் தம்பிப் பாவலர்.
13-02-1950 – ஆம் நாள் இம் மண்ணை விட்டு மறைந்தார். பாவலர் புகழ் பாருள்ள வரை நிலைத்து நிற்கும்.