நிலக்கடலையும் நெல்லும் மிகுதியாக விவசாயம் செய்யப்படுகிற ஊரில் அப்துல் அஹத் பிறந்தார்; அவர் தம் பெற்றோருக்கு ஐந்தாவது பிள்ளை. அவருடைய மூதாதையர்கள் அரசவைக் கவிஞர்களாகவும் புலவர்களாகவும் வாழ்ந்து மறைந்தவர்கள். மிகச் சிறந்த குடும்பப் பாரம்பரியத்தில் பிறந்ததால் கல்வியில் சிறந்து விளங்கினார். சிறுபிராயத்திலேயே தாயை இழந்த அவர், தம் தந்தையின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்தார்.
ஆசிரியர்கள் வகுப்பறைகளில் சொல்லும் அறிவுரையை நன்கு செவியுற்று, அதன்படி செயல்படுபவர். ஒரு நாள் அந்த ஊரின் பாலர் வகுப்பில் (மக்தப் மத்ரஸா) சிறுவர்களுக்குக் குர்ஆன் கற்பித்த ஆசிரியர், மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். அதில் மார்க்கக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இன்னின்ன அரபுக் கல்லூரிகளில் கல்வி பயின்று மார்க்க அறிஞராக உருவாகலாம். இன்று ஆலிம்களின் தேவை அதிகமாக உள்ளது என்று சொல்லி, சில அரபுக் கல்லூரிகளின் பெயர்களையும் கூறினார். அதில் ஒன்று அஹதுடைய மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
அஹத் தம் தாயை இழந்துவிட்டதால், தந்தைவழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். அந்தப் பாட்டிக்கு அரைகுறையான பார்வைதான். அதனால் சமையல் வேலையில் அவருக்கு அஹதுதான் உதவியாக இருப்பார். தந்தை, மூத்த சகோதரர்கள், தம்பி, தங்கை ஆகியோர் அடங்கிய பெரிய குடும்பம் அது. காலை உணவு முடித்துவிட்டுத் தந்தையும் மூத்த சகோதரர்களும் வேலைக்குச் சென்றுவிட்டால், காலையிலேயே பகலுணவைத் தயாரிப்பதில் தம் பாட்டிக்கு உதவி செய்துவிட்டு, பிறகுதான் அவர் பள்ளிக்கூடம் செல்ல முடியும்.
பிறகு மூத்த அண்ணனுக்குத் திருமணம் ஆனபின் சமையல் வேலையை அண்ணி கவனித்துக்கொண்டதால் அஹதுக்குச் சமையல் வேலையிலிருந்து விடுதலை கிடைத்தது. இருப்பினும் இப்போது மற்றொரு வேலை அவர் பொறுப்பில் வந்தது. அன்று தேவையான காய்கறிகளை, அவர்தம் தந்தை, தாம் வேலை பார்க்கும் கடலை எண்ணெய் ஆலையில் வாங்கி வைத்துவிடுவார். ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள அந்த ஆலைக்கு நடந்தே சென்று, அதை எடுத்துக்கொண்டுவந்து வீட்டில் அண்ணியிடம் கொடுத்துவிட்டுத்தான் அஹது பள்ளிக்கூடம் போக வேண்டும். இதனால் ஒவ்வொரு நாள் காலையிலும் அவர் ஓட்டமும் நடையுமாகச் செயல்பட்டால்தான் அந்த வேலையை முடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்திற்கு உரிய நேரத்தில் போக முடியும்
பள்ளிக்கூடம் செல்லும்போதெல்லாம் ‘மத்ரஸா’ சென்று ஓத வேண்டும் என்ற அவரது ஆர்வம் அவருக்குள் வந்து வந்து போனது. அவருடைய ஆசிரியர் கூறிய ‘மத்ரஸா’ பெயரும் அவருடைய நினைவில் நிலைத்துப்போனது. தம்முடைய நண்பர்கள் முஹம்மது கனி, அப்துல் லத்தீப் ஆகியோரிடம் இது குறித்துப் பேசுவார். மத்ரஸா சென்று ஓதினால் ஒவ்வொரு நிமிடமும் நன்மையாக மாறிவிடுமே என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பார்.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், காட்டுப் பகுதியில் விழுந்து கிடக்கும் சிறு சிறு குச்சி (சுப்பி) களைப் பொறுக்கி வந்து தம் அண்ணியிடம் கொடுப்பார். அதை வைத்துத்தான் அவருடைய அண்ணி அடுப்பைப் பற்றவைத்து இரவு உணவைத் தயார் செய்வார். அதன்பிறகு பள்ளிவாசலுக்குத் தொழச் செல்வதும், பள்ளிக்கூடப் பாடங்களைப் படிப்பதும் எழுதுவதும் தொடரும். இப்படியே அவருடைய வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் சென்று கொண்டிருந்தது. அவர் வயதொத்த நண்பர்களோடு விளையாடுவது மிக மிகக் குறைவு.
ஒரு நாள் சுப்பிகளைப் பொறுக்கிக்கொண்டிருந்தபோது அவரது அடிக்காலில் முள் தைத்துவிட்டது; இரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அதைத் தம் பாட்டியிடம் சொன்னதும் அதன்மீது மஞ்சள் தடவிவிட்டனர். காயம் ஆறிவிட்டதாக உணர்ந்தார். ஆனால் காலில் தைத்த முள்ளின் ஒரு பகுதி உள்ளேயே தங்கியிருந்திருக்கிறது. அது அவருக்குத் தெரியவில்லை.
சில நாள்கள் கழித்து, அவரால் தம் காலை ஊன்ற முடியவில்லை; வலியால் துடித்தார். அங்கே அருகில் குடியிருந்த ஃபரீதா என்பவரை அவருடைய பாட்டி அழைத்தார்.
“அடியே ஃபரீதா, என் பேரனுக்கு முள் குத்தி வலிக்குதுங்கிறான். கொஞ்சம் என்னென்னு பாரு” என்று அவருடைய பாட்டி கேட்டுக்கொண்டார்.
அவர் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, “ஒண்ணும் இல்ல ஆயிஷாக்கா” என்று கூறிவிட்டார். அவர் போதிய அனுபவம் இல்லாதவர். அப்படியே சில நாள்கள் கழிந்தன. மீண்டும் அவரால் நடக்க முடியவில்லை.
ஃபரீதாவின் அம்மா ராபிஆவை அழைத்து, “ஏ ராபியா, என் பேரனுக்கு முள் குத்தி வலிக்குதுங்கிறான். கொஞ்சம் என்னென்னு பாறேன்” என்று அன்பொழுகக் கேட்டுக்கொண்டார்.
அவர் அனுபவசாலி. காயம் பட்ட காலைச் சற்று மேலே தூக்கிப் பார்த்தார். பிறகு ஊசியைக் கொண்டுவரச் சொல்லி அவ்விடத்தில் குத்திக் கிளறிவிட்டார். அதன்பிறகு பக்கவாட்டில் இரண்டு கைகளை வைத்து அழுத்திப் பிதுக்கினார். உள்ளிருந்து சலம் பொத்துக்கொண்டு வந்தது. பிதுக்கிப் பிதுக்கி எல்லாச் சலத்தையும் வெளியே எடுத்தார். பிறகு அண்டைவீட்டு சஹர்பானு மஞ்சளை அரைத்து வந்து கொடுத்தார். அதை அவ்விடத்தில் அப்பிவிட்டு, பருத்தித் துணியால் கட்டுப் போட்டுவிட்டார். அதன்பின் சில நாள்களில் இயல்பு நிலைக்கு வந்தார். இது அவரது வாழ்க்கையில் அவரால் மறக்க முடியாத நிகழ்வாகும்.
***
பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்த அப்துல் அஹத், ஒரு நாள் தம் தந்தையிடம் கோபித்துக் கொண்டு, யாரிடமும் சொல்லாமல் அந்த அரபுக் கல்லூரியை நோக்கி நடந்தே புறப்பட்டார். திருச்சிக்குச் சென்று அங்கு ஓர் ஓட்டலில் சேர்ந்து பத்து மாதங்கள் வரை பணிசெய்தார், அதில் கிடைத்த சம்பளப் பணத்தைச் சேர்த்துவைத்து, துணி வாங்கி, தையலரிடம் கொடுத்து ஜுப்பா தைத்துக்கொண்டு, குறிப்பிட்ட மாதத்தில் அந்தப் பழைமையான மத்ரஸா நோக்கிப் பேருந்தில் புறப்பட்டார்.
பேருந்து நிலையத்தில் இறங்கி, ஆட்டோ ஒன்றில் ஏறி, மத்ரஸாவின் பெயரைச் சொல்ல, அந்த ஆட்டோ சில பல தெருக்களைத் தாண்டி, அந்த மத்ரஸாவின் வாசலில் போய் நின்றது. அந்த மத்ரஸாவின் கட்டடத்தைப் பார்த்ததும் முதலில் மலைத்துப் போய்விட்டார். இவ்வளவு பெரிய மத்ரஸாவில்தான் நாம் ஓதப்போறோமா என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார். அங்கு பள்ளிவாசலைத் தூய்மைப்படுத்திக்கொண்டிருந்தவரிடம், மத்ரஸாவுக்குள் எப்படிப் போக வேண்டும் என்று கேட்க, அவர் உள்ளே செல்வதற்கான வழியைக் காட்டினார். உள்ளே சென்றதும், யாரைச் சந்திக்கணும் என்று கேட்டுக்கொண்டே அந்த மத்ரஸாவின் முதல்வர் அறையை அடைந்துவிட்டார்.
அவரைப் பார்த்த அக்கல்லூரி முதல்வர், “யாருமில்லாமத் தனியா வந்திருக்கியே, உன்னை எப்படி மத்ரஸாவில் சேர்த்துக்கொள்வது? போய், உன்னோட அத்தாவ கூட்டிட்டு வா!” என்று கூற, முதல்வரின் அருகில் அமர்ந்திருந்த கண்ணியத்திற்குரிய உஸ்தாத் கமாலுத்தீன் ஹள்ரத், “ஓதணும்னு ஆர்வத்தோட வந்திருக்கான். சேத்துக்கங்க ஹஸ்ரத். பிற்காலத்தில் நல்லா வருவான்” என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, கல்லூரியின் சட்ட விதிமுறைகளைக் கூறினார். பிறகு, “நீ போய் தலைமுடி மழித்துவிட்டு வா” என்று சொன்னார்.
அதன்பின் தலைக்கு ஒரு மொட்டையைப் போட்டுக்கொண்டு, குளித்து, லுங்கி-ஜுப்பா அணிந்துகொண்டு, முதல்வரின் முன்னிலையில் போய் நின்றபோது, “இப்பதான்டா நீ ஓதுற புள்ள மாதிரி இருக்கெ” என்று கூறினார்.
பின்னர் அங்கு வந்திருந்த சேலத்தைச் சார்ந்த அன்வர்தீன் என்பவரிடம், நூர் முஹம்மது உஸ்தாதிடம் வாய்மொழி நுழைவுத் தேர்வுக்காக அவரை அழைத்துச் செல்லுமாறு கல்லூரி முதல்வர் பணித்தார். நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேர்ச்சி பெற்று ‘இப்திதா’ எனும் தொடக்க வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவ்வாண்டு ஒருவர்பின் ஒருவராக ஏழு பேர் அவருடன் சேர்ந்தார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் ஒருவர்பின் ஒருவராக அக்கல்லூரியை விட்டுச் சென்றுவிட்டார்கள். அவர் ஒருவர் மட்டுமே எஞ்சியிருந்தார். அந்த எழுவருள் ஒருவரான முபாரக் என்பவர் இன்றும் அஹதுடன் தொடர்பில் இருக்கிறார்.
அவர் நினைத்துச் சென்ற அதே அரபுக் கல்லூரியில் சேர்ந்துவிட்டதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும் நல்ல முறையில் பாடங்களைக் கற்றுவந்தார். பின்னர் அவருக்கு வீட்டு நினைவு வந்ததும் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். காணாமல்போன தம் மகனை நீண்ட காலமாகத் தேடித் தேடித் துவண்டு போய், நம்பிக்கையிழந்துபோன தந்தைக்கு மகனின் கடிதம் மகிழ்ச்சியைத் தந்தது. அத்தோடு தம் மகன் அரபுக் கல்லூரியில் சேர்ந்திருப்பது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் கைச்செலவுக்காக ஒவ்வொரு மாதமும் அவருடைய தந்தை ஐம்பது ரூபாய் மட்டுமே அனுப்பிவைத்தார். அது போதாததால் அவருடைய அண்ணன் சித்தீக்கிடம் பணஉதவி கேட்டார். அவருடைய சகோதரர்கள் சித்தீக், லத்தீப் ஆகிய இருவரும் மளிகைக்கடை நடத்திவந்தனர். எனவே அவர் தம் தம்பி அஹதுக்கு மாதந்தோறும் நூறு ரூபாய் அனுப்பிவைத்தார். அதை வைத்துக்கொண்டுதான் அவர் சிக்கனமாகச் செலவு செய்துவந்தார்.
***
அக்கல்லூரியில் நடத்தப்படுகிற பாடங்களை நல்லவிதமாகப் படித்ததோடு, கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் கவனம் செலுத்தினார். சக மாணவர்களுள் ஒருவரிடமிருந்து, ‘எளிய முறையில் ஆங்கிலம்’ எனும் நூலை வாங்கிச் சுயமாகப் படித்து முன்னேறினார். அதன்பின் ஆங்கில நூல்களையும், திருக்குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசிக்கத் தொடங்கினார். அதன்மூலம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.
மேலும் அக்கல்லூரியின் மாணவர் கையேட்டுப் பிரதிக்குத் துணையாசிரியராகவும், பின்னர் அடுத்த ஆண்டு ஆசிரியராகவும் இருந்துள்ளார். தொடக்க வகுப்பிலேயே சிறியதொரு கட்டுரை எழுதியமைக்காக, அப்போது அந்தக் கையேட்டு இதழுக்கு ஆசிரியராக இருந்த ஜாகிர் ஹுஸைன் என்பவரிடம், ‘பேனா’வை ஊக்கப்பரிசாகப் பெற்றார். அதுமுதல் மாணவர் மன்றக் கையேட்டுப் பிரதிக்கு எழுத்தராகப் பணியாற்றியதோடு, அதில் கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதையும் தொடர்ந்தார்.
ஒன்பதாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தியிருந்த அவர், மேல்வகுப்பு நண்பர்களின் வழிகாட்டுதலோடு, பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதினார். பத்தாம் வகுப்பின் கணக்குப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்தவர் ஜுபைர் அஹ்மது என்பவர்தாம். அவர் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருந்தார்.
பின்னர் மேல்வகுப்பு நண்பரும் மாற்றுத்திறனாளியுமான அபூதாஹிர் என்பவரின் வழிகாட்டுதலோடு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை வரலாறு படித்தார். அத்தோடு அங்கு பயிலும்போது சென்னைப் பல்கலைக் கழகம் நடத்துகிற பி.ஏ. அரபிக் பட்டத்திற்கு நிகரான அஃப்ளலுல் உலமா தேர்வையும் எழுதிமுடித்தார். அஹத் ஒரு தடவை மாணவர் மன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றியபோது அதனைப் பாராட்டி, அவர் நண்பரான அபூதாஹிர் அவருக்கு நூல் ஒன்றைப் பரிசளித்து ஊக்கப்படுத்தினார்.
அவர் கையேட்டு இதழுக்கு எழுதும் கட்டுரையில் தம் பெயருக்குப் பின்னால் பி.ஏ., ஏ.யு. (ஏ.யு. என்பது அஃப்ஸலுல் உலமா படிப்பிற்கான சுருக்கம்) என்று குறிப்பிடுவது அவரது வழக்கம். அதன்மேல் ஒரு கோடும் இடுவதுண்டு. (அப்போது அவ்விரண்டையும் படித்துக்கொண்டிருந்ததால்...) அவரது பெயரைச் சொல்லும்போது சக வகுப்புத் தோழர்கள் சிலர், ‘பி.ஏ., ஏ.யு. அதன்மேல் ஒரு கோடு’ என்று அழுத்திச் சொல்லி கிண்டலாகச் சிரிப்பதுண்டு. ஆனால் அவர்களின் கேலி, கிண்டலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் தம்மைச் செதுக்கிக்கொள்வதிலேயே கவனம் செலுத்தினார். அங்கேயே எட்டாண்டுகள் படித்து ஆலிம் பட்டம் பெற்றார்.
அக்கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற கையோடு தாருல் உலூம் தேவ்பந்த் செல்ல முடிவு செய்து, அவரும் அவருடைய நண்பர் முஹம்மது முபாரக்கும் சென்றனர். அங்கு நடத்தப்பெற்ற நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று தவ்ரத்துல் ஹதீஸ் பாடப் பிரிவில் சேர்ந்து, ஓராண்டு பயின்று பட்டம் பெற்றார். இதுவரை படித்துப் பட்டம் பெற்றது போதாது என்று கருதிய அவர் மேலும் படிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆகவே எங்கேனும் பணியாற்றிக்கொண்டே உயர்கல்வி படிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் அதற்குச் சென்னைதான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து, அங்கு வந்தார்.
***
சென்னையில் தம் மூத்த சகோதரர் யூசுஃப் இருப்பதால் அவருடைய துணையோடு ஏதாவது பள்ளிவாசலில் இமாமாகச் சேர்ந்துகொள்ளலாம். அதன்பின் உயர்படிப்பைப் பற்றி யோசிக்கலாம் என்று உறுதிகொண்டார். அதன்பின் “அவரே ஏழ்மை நிலையில் சிரமப்படுகிறபோது, நாம் அங்கு சென்று தங்கினால் அவருக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்” என்றெண்ணி, அம்முடிவைக் கைவிட்டார். அவருக்குத் தெரிந்த நண்பர் அமீர் என்பவர் சென்னையில் ஒரு மஹல்லாவில் இமாமாகப் பணியாற்றுவதை அறிந்து அவரிடம் சென்றார்.
அந்த நண்பர், அந்தப் பகுதியில் பல்லாண்டுகளாக இமாமாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த மௌலவி ஒருவரிடம் அழைத்துச் சென்றார். ஏனெனில் இமாம் தேவையென்றால் அவரிடம்தான் தகவல் சொல்வார்கள். அவர்தாம் அப்பகுதியைச் சுற்றியுள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் இமாமையும் முஅத்தினையும் அனுப்பிவைப்பார். அவரோ, “தற்போது காலியிடம் எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் விரும்பினால் பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்காக வசூல் செய்யப் போகலாம். போறீங்களா?” என்று கேட்டார்.
தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்ந்து பழகிய அஹத், ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று வசூல் செய்வதை விரும்பவில்லை. “வேண்டாம் ஹஜ்ரத்” என்று கூறி, உடனடியாக அதை மறுத்துவிட்டார்.
அங்கிருந்து வெளியே வந்தபின், “நீங்க ஏன் முகத்தில் அடித்தாற்போல், வேண்டாம் என்றீர்கள்? பாக்குறேன்; யோசித்துச் சொல்றேன் என்று ஏதாவது சொல்லியிருக்கலாமே?” என அமீர் அவரைக் கடிந்துகொண்டார்.
“பாய், சோப்பு போட்டு மொழுகி, நழுவியெல்லாம் எனக்குப் பேசத் தெரியாது. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக, தெளிவாகச் சொல்லிடுவேன்; அதுதான் என்னோட பழக்கம்” என்றார்.
“சென்னை மண்ணடியிலுள்ள பெண்கள் மத்ரஸாவில் வாரந்தோறும் புதன்கிழமை ஆலோசனை நடைபெறும். அங்கு போங்க, இமாமத் பணி, முஅத்தின் பணி குறித்த தேவைகளுக்கு அங்குதான் எல்லோரும் பதிவு செய்வாங்க. அங்கு போனா கண்டிப்பாக ஏதாவது வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்” என்று நண்பர் ஒருவர் கூறி, அனுப்பிவைத்தார்.
அங்கு சென்று தம்முடைய தேவையைச் சொன்னார். அங்கிருந்த பதிவாளர் “நகரத்தின் ஓரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளிவாசலுக்கு இமாம் தேவைப்படுகிறார்; நீங்க போறீங்களா?” என்று கேட்டார். “சரி, நான் போறேன்” என்று கூறி, அப்பள்ளியின் முகவரியை வாங்கிக்கொண்டு அங்கு சென்றார். “அங்கிருந்த பள்ளிவாசலின் தலைவரைச் சந்தித்து, “மண்ணடி மத்ரஸாவில்தான் இந்த முகவரியைக் கொடுத்து அனுப்புனாங்க” என்று சொன்னதும், “ஆம்! நாங்கதான் அங்கு சொல்லிவச்சிருந்தோம்” என்று கூறினார்.
அதன்பின் அப்பள்ளியின் தலைவர் பேசினார். “இங்குள்ள யாரேனும் பாங்கு சொல்லிடுவாங்க. நீங்க தொழுகை நடத்தணும்; காலையில் சின்னப் பிள்ளைகளுக்குத் திருக்குர்ஆன் ஓதிக்கொடுக்கணும்; அதன்பிறகு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்த மஹல்லாவைச் சுற்றியுள்ள முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சந்தா வசூல் செய்யணும்; மூன்றுவேளை உணவு ஏற்பாடு செய்து தந்துவிடுகிறோம்; சம்பளம் ஈராயிரத்து ஐநூறு” என்றார்.
அதைக் கேட்ட அஹதுக்கு, “சந்தா வசூல் செய்யணும்” என்பதுதான் உறுத்தலாக இருந்தது. இருப்பினும் உயர்படிப்பைத் தொடர வேண்டுமென்ற உயர் இலட்சியத்தோடு இருந்ததால், அவர் கூறிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு பணியில் சேர்ந்துவிட்டார்.
பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. அரபிக் சேர்ந்துவிட்டார். அதன்பின் நிர்வாகத்தினரிடம், “லுஹர் தொழுகை மட்டும் உங்களுள் யாராவது பார்த்துக்கொள்ளுங்கள். நான் மேற்படிப்பு படிக்கப்போறேன்” என்று கூற, அவர்களும் “நல்ல விஷயம்தானே” என்று அனுமதி கொடுத்துவிட்டார்கள். வாரத்தில் நான்கு நாள்கள்தான் வகுப்புக்குச் செல்வார். வெள்ளிக்கிழமைகளில் வகுப்புக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொள்வது அவரைப் போலவே பணியில் இருந்துகொண்டு படிக்கும் ஆலிம்கள் சிலரின் வழக்கம்.
அண்ணன் யூசுஃப் கொடுத்த சைக்கிள் ஒன்றை வைத்திருந்தார். அதை வைத்துக்கொண்டுதான் பணியாற்றும் பள்ளியிலிருந்து முக்கியச் சாலையில் அமைந்திருக்கும் வேறொரு மஸ்ஜித் வரை சென்று, அங்கு அதை நிறுத்தி வைத்துவிட்டு, பேருந்தில் செல்வார். போரூரிலிருந்து சென்னைப் பல்கலைக் கழகம் வரை செல்லக்கூடிய 25ஜி பேருந்தில்தான் அவர் வழமையாகச் செல்வார். பின்னர் திரும்பி வந்து, அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக வேகமாக மஸ்ஜிதை நோக்கி விரைவார்.
அந்த மஹல்லாவில் ஆறு மாதங்கள் வரை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன்பின் அந்தப் பள்ளியின் நிர்வாகிகள், “இந்த நோன்போடு உங்களை நிறுத்திவிட முடிவு செய்துட்டோம். ஏன்னா, நீங்க லுஹருக்கு வருவதில்லை. அதனால கமிட்டி நிர்வாகிகள் பேசி முடிவு பண்ணிட்டாங்க” என்று சொல்லிவிட்டார்கள்.
அதன்பிறகு மற்றொரு பள்ளியைத் தேடி அலைந்தார். இறுதியில் ஒரு பள்ளியில் பணியில் சேர்ந்தார். அங்கும் ஆறு மாதத்திற்கு மேல் நீடிக்க முடியவில்லை. “நீங்கள் தொடர்ந்து லுஹருக்கு வராததால் உங்களை நீக்குகிறோம்” என்று கூறிவிட்டார்கள். பின்னர் தென்சென்னையில் ஒரு கூரைப் பள்ளியில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்து சென்னைப் பல்கலைக் கழகம் சென்றுவர எளிதாக இருந்தது. அங்கு நிர்வாகியாக இருந்த ராஷித் என்பவர் இமாமின் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்தார். ஓராண்டுக் காலம் அங்கு நல்லவிதமாகப் போனது.
அதன் அருகிலேயே அவருடைய உஸ்தாத் ஓர் அரபுக் கல்லூரியைத் தொடங்கியிருந்தார். அம்மாணவர்களுக்கு காலை நேரத்தில் ஒரு பாடம் மட்டும் நடத்துவதற்கு அஹத் இமாமுக்கு அனுமதி வழங்கியிருந்தார். காலை உணவை அங்கு சாப்பிட்டுவிட்டு, பல்கலைக் கழகம் செல்வது அவரது வழக்கம்.
அந்த மஹல்லா மக்களிடம் நல்லவிதமாகப் பழகினார். அங்கிருந்த மக்களும் இமாமிடம் நெருங்கிப் பழகினார்கள். ஹாஜரா என்ற பெண்மணி அஹதைத் தம்பி போல் பாவித்து உணவு வழங்கிவந்தார். அவருடைய பிள்ளைகளுக்கும் அவருடைய தங்கையின் பிள்ளைகளுக்கும் அவர் குர்ஆன் ஓதக் கற்பித்துள்ளார். கறிக்கடை காஜா வீட்டிலும், யூசுஃப் பாய் வீட்டிலும் ஆசிரியை ரஹீமா வீட்டிலும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர்களின் வீட்டிலெல்லாம் அவர் குர்ஆனை ஓதக் கற்பித்துள்ளார். பள்ளியிலிருந்து அவர்களின் வீடு வெகுதூரம் என்பதால் அவர் தம் ஓய்வு நேரத்தில் அங்கு சென்று அவர்களின் பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதக் கற்றுக்கொடுத்துவந்தார். அவர்களுடனான நட்பு இன்றும் தொடர்கிறது என்பதே அவர்மீது அவர்கள் கொண்டுள்ள தூய அன்புக்குச் சான்றாகும்.
***
ஏற்கெனவே அந்தப் பள்ளியில் ஒரு பிரச்சனை புகைந்துகொண்டே இருந்தது. அது அவ்வப்போது வெளிவரும். பின்னர் அமுங்கிவிடும். அந்தப் பிரச்சனை இப்போது மிகப் பெரிய அளவில் கிளம்பியது. அதாவது அந்தப் பள்ளியின் இடத்தை வக்ஃப் செய்த சுலைமான் இறந்துவிட்டார். அந்தப் பள்ளியை நிர்வாகம் செய்தவர் பள்ளியின் பெயரைச் சொல்லிச் சொல்லிப் பணத்தை வசூல் செய்துகொண்டே இருந்தாரே தவிர, அப்பள்ளியைக் கட்டவே இல்லை. கூரைப் பள்ளியாகவே அது நீடித்துவந்தது.
அங்கு தொழ வருகிற சுலைமான் என்பவரின் மகன் ராஷித், “இந்தப் பள்ளி ஏன் இன்னும் இப்படிக் கூரைப் பள்ளியாகவே இருக்கிறது? எப்பதான் இதைக் கட்டுவீங்க? பள்ளிப் பேரைச் சொல்லிப் பணம் வசூல் செய்யிறீங்க. ஆனால் கட்டுமானப் பணியைத் தொடங்க மாட்டேங்கிறீங்களே?” என்று கேட்டார். அவரோ பதில் சொல்ல முடியாமல் விழிபிதுங்கி நின்றார். “கூடிய சீக்கிரம் பணியைத் தொடங்கிடுவேன்” என்று சொல்லிச் சமாளித்தார்.
ஒரு நாள் அந்த சுலைமானின் மகன்கள் ஐந்துபேரும் சேர்ந்து, “எங்க அத்தா கொடுத்த இந்த இடத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள்; நாங்களே இதைக் கட்டிப் பராமரித்துக்கொள்கிறோம்” என்று கூறி, நிர்வாகப் பொறுப்பை வாங்கிக்கொண்டனர். பிறகு பள்ளி சார்ந்த எல்லாப் பணிகளையும் அவர்களே கவனித்துக்கொண்டார்கள்.
வசூல் செய்வதற்கான கதவு மூடப்பட்டுவிட்டதைப் பொறுத்துக்கொள்ளாத அந்தப் பழைய நிர்வாகி, இந்த இடத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று உறுதிகொண்டார். அந்தப் புகைச்சல் இருக்கும் நிலையில்தான் அஹத் அங்கு இமாமாகச் சேர்ந்திருந்தார். தற்போது அந்தப் பழைய நிர்வாகி மக்கள் அனைவரையும் தமக்குச் சாதகமாக அணிதிரட்டிக்கொண்டு வந்து, அஹத் இமாமை வெளியே அனுப்பிவிட்டு, பள்ளிக்குப் பூட்டு போட்டுவிட்டார். “நீங்க ஒங்க தலைவரிடம் சொல்லி, அவரை இங்கு வரச் சொல்லுங்க” என்று கூறினார்.
அதன்பின் அஹத் இமாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அப்பள்ளிக்குத் தொழ வருகிற ராஷித்
என்பவரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர் தம் சகோதரர்களை அழைத்துக்கொண்டு அங்கு வந்தார்.
அவர்கள் அனைவரும் காவல் நிலையம் சென்றனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர் சுலைமானின் மகன்கள், “இங்கு ஒரே பிரச்சனையாக இருக்கு; எனவே நீங்க வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டனர்.
அதனால் அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளானார். இருப்பினும் அங்கு இருந்தபோதே எம்.ஏ. படிப்பை முடித்துவிட்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து புறப்பட்டார்.
**’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
* (தொடரும்)