முப்பது வருடங்களுக்கு முன்னால்
பேருந்தில் பயணம் செய்யும்போது
நம்மோடு சேர்ந்து மரங்களும் ஓடி வருவது போல இருக்கும்.
பேருந்தில் பயணம் செய்யும் போது குலுகுலுவெனக் காற்று நமக்குக் கிடைத்தது
தற்போது பேருந்துப் பயணம் வெப்பக் காற்றை அல்லவா
நமக்குத் தருகிறது
வீட்டிற்கு அருகில் மரங்கள் இருக்கும்
அந்த மரத்தின் அடியில் செப்புச் சாமான்களை வைத்து விளையாடிய காலம் உண்டு.
அன்றைய காலத்தில் தோட்டத்திற்குச் சென்றால்
அங்கே மாமரத்தில் மாங்காயைப் படுத்துக்கொண்டே சாப்பிடும் அளவிற்குத் தாழ்ந்து இருக்கும்.
புளிய மரத்தோப்பில் ஓடிப் பிடித்து விளையாண்ட காலம் உண்டு.
தென்னை மரத்தில் ஓலையை இரண்டாகக் கிழித்து
அதைப் பிடித்துத் தூரி ஆடிய காலம் உண்டு.
ஆத்தோரத்தில் தாழம்பூக்களும் உண்டு
தாழம்பூ வாசத்தில் மயங்காத ஆளே கிடையாது.
பாம்பும் தாழம்பூக்கு மயங்கும்.
வேப்பமரத்தடியில் கயிற்றுக் கட்டில் போட்டுத் தூங்கிய காலம் உண்டு.
இப்போது அந்த மரங்கள் எங்கே?
அந்தக் காற்று எங்கே?
நம்மை விட்டு வெகுதூரம் சென்று விட்டது.
இப்போது பேருந்தில் பயணம் செய்தால்
நம்மோடு மரமும் இல்லை; காற்றும் இல்லை.
குளம் குட்டைகள் இருந்த இடங்களையெல்லாம்
பிளாட் போட்டு விற்று விட்டார்கள்.
இயற்கையையெல்லாம் அழித்து விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும்
ரியல் எஸ்டேட்களும் நிறுவனங்களும் உருவானதால்
நாம் சுவாசிக்கும் காற்றுகூடக் கலப்படமாகி
மாசு நிறைந்ததாக மாறிவிட்டது.
நமக்கே இந்த நிலைமை என்றால்
நமக்குப் பின்னால்
வரும் சந்ததிகளின் நிலைமை என்னவாகுமோ!?