Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நாம் பேசாவிட்டால் - வேறு யார் பேசப் போகிறார்கள்!?
-பேராசிரியர் முஹம்மது அஸ்கர் ஆளூர் Nov 01 2024 காலக்கண்ணாடி

நாம் பேசாவிட்டால் - வேறு யார் பேசப் போகிறார்கள்!?


 

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் ஒன்றாம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு குமரி விடுதலை நாள்.

இந்தியா முழுவதும் ஒரே சுதந்திரப் போராட்டம்.

ஒரே விடுதலை நாள் என்றால், கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தெற்கெல்லை விடுதலை நாள் என்னும் ஒரு தனி வரலாறு உண்டு.

கேரளாவோடு மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது

இணைக்கப்பட்ட தமிழகப் பகுதியை மீண்டும் தாய்த் தமிழகத்தோடு இணைப்பதற்காக நடத்தப்பட்ட பலகட்டப் போராட்டம், பேரிழப்பு என்று வரலாறு நீண்டு விரிந்து கிடக்கிறது.

1947 முதல் 1956 வரை நடைபெற்ற பல கட்டப் போராட்டத்தில்

நேசமணி தலைமையிலான போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மிகச் சிறப்பாகச் செயல்பட்டது. அதன் விளைவாக பல்வேறு மறியல் போராட்டங்கள்,  அறவழிப் போராட்டங்கள் என்று விடுதலைப் போராட்ட முன் முயற்சிகள் நடத்தப்பட்டதோடு தொடுவட்டி, புதுக்கடை போன்ற பகுதிகளில் மலையாள காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு என்று சிறுபான்மைச் சமூகத்தின் இரத்த சாட்சியாக வரலாறு முழுவதும் நிறைந்திருக்கிறது.

 

குமரி மாவட்டம் தமிழகத்தோடு 1956 நவம்பர் ஒன்றில் இணைக்கப்பட்டது முதல் தாய்த் தமிழக இணைப்பு போராட்ட குழுவுக்கு தலைமை ஏற்ற நேசமணி குமரித் தந்தை எனக் கௌரவிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்படுகிறார்.

அவருக்கு மணிமண்டபம், சிலை, புகைப்படம் என்று பல்வேறு பெருமைகளும் சிறப்புகளும் வந்து சேர்ந்திருக்கின்றன.

ஆண்டு தவறாமல் அவருக்கான மாலை அணிவிப்புகளும் மரியாதை செலுத்தல்களும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அவருக்கு நன்றிக் கடன் பெற்றிருந்த அவர் சமூகம் மற்றும் அவரைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட அல்லது மலையாள ஆதிக்கச் சமூகத்தாலும் அரசியல் பாகுபாட்டை உருவாக்கிய மலையாளிகளாலும் பாதிக்கப்பட்டவர்களும் மார்ஷல் நேசமணியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் குமரி விடுதலைப் போராட்டத்தில் மிகப்பெரிய மூளையாகச் செயல்பட்டவரும்,  நேசமணிக்கு மார்ஷல் என்னும் பட்டத்தைக் கொடுத்தவருமான நேசமணியின் வலக் கரமாகவும் இடக் கரமாகவும் இருந்தவர் என்று சிறப்புப் பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ரசாக் அவர்களைப் பற்றி யாரும் நினைவு கூரவில்லை.

அப்துல் ரசாக்கை நினைவு கூர வேறு யாரும் வர வேண்டும் என்று நாம் ஏன் நினைக்க வேண்டும்?  அப்துல் ரசாக்கிற்குச் சிலை வைக்கக் கூடாது, புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கக் கூடாது என்று முஸ்லிம்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ அவரை வேறு யாரும் இதுவரை கண்டு கொண்டதில்லை.

ஆனாலும் மணிமண்டபம் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?  சரி அது கூட வேண்டாம். குறைந்தபட்சம் குமரி விடுதலை நாளில் நேசமணியை அவருக்குக் கடமைப்பட்டவர்கள் கொண்டாடுவதைப் போல குறைந்தபட்சம் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ரசாக்கின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் பேசுவதற்கு முன் வந்திருக்கலாம்.

குமரி விடுதலை நாளில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றிய கருத்தரங்குகளை நடத்தி அடுத்த தலைமுறைக்கு அன்றைய காலச் சூழல்களையும் வரலாற்றையும் அதற்காக முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பையும், குறிப்பாக அப்துல் ரசாக் அவர்கள் குமரி தாய்த் தமிழக இணைப்புப் போராட்டத்தில் எப்படி மூளையாகச் செயல்பட்டார் என்பது பற்றியும் பேசி இருக்கலாம்.

குறைந்தபட்சம் அவர்களுடைய வாழ்க்கையைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கலாம்.

70 ஆண்டுகளைத் தொடப்போகும் இன்றைய வருடம் வரை நாம் குறிப்பிட்டது போன்ற எந்த முன்முயற்சியையும் கோட்டாறு முஸ்லிம்களும் முன்னெடுக்கவில்லை. குமரி மாவட்ட இஸ்லாமியர்களும் முன்னெடுக்கவில்லை.

 

மார்ஷல் நேசமணி போராட்டக் களத்தில் தலைமை ஏற்றார் என்றால் போராட்டத்தைத் திட்டமிடுவது, அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வோர் ஊரிலும் சென்று சேர்ப்பது, தமிழர்களை ஒன்று திரட்டுவது, சரியான திட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்குவது என்று முழு களப் போராளியாக விளங்கியவர் அப்துல் ரசாக்.

நேசமணி அவர்களைக் கைது செய்வதற்கான தேடலில் காவலர்கள் இருந்தபோது அவரை இரகசிய இடத்தில் அமர வைத்துவிட்டு அவருக்குப் பதிலாக நாகர்கோயிலில் இருந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இரவும் பகலுமாக ஒழிந்தும் மறைந்தும் சைக்கிளிலும் நடந்தும் பயணித்து, போராட்டக் குழுக்களைச் சந்தித்து உரிய ஏற்பாடுகளைச் செய்து வழிநடத்திய பணியை அப்துல் ரசாத் முழுமையாகச் செய்திருந்தார். எனவேதான் நேசமணி அவர்களே தம் வாயால் "அப்துல் ரசாக் எனக்கு வலக்கரமாகவும் இடக்கரமாகவும் இருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மார்ஷல் நேசமணி அவரோடு துணை நின்ற மற்ற தொண்டர்களையும் தலைவர்களையும் போன்று அப்துல் ரசாக் அவர்களும் விடுதலைப் போராட்டப் பங்களிப்பிற்காகச் சிறைப்படுத்தப்பட்டார். கேரள போலீசாரால் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டார் என்றாலும் தங்களின் முழக்கத்திலிருந்து ஒருபோதும் அவர் பின்வாங்கவில்லை.

சிறை விடுவிப்புக்குப் பிறகும் முழுமையாகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒவ்வோர் ஊரிலும் தாய்த் தமிழக இணைப்பு முழக்கம் எழுவதற்குக் காரணமாக இருந்தவர்.

குமரி மாவட்டத்தில்  மட்டுமல்லாமல் நேசமணியைத் தமிழகத்தில் எங்கெல்லாம் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்காக அழைத்தார்களோ

அங்கெல்லாம் அழைத்துச் சென்று அவரவர் பகுதியில் போராட்டங்கள் தீவிரமடைந்து புதிய வழிகளை உருவாக்குவதற்கு அப்துல் ரசாத் விதை விதைத்தார். குறிப்பாக மூணாறில் நடைபெற்ற போராட்டத்தில் நேசமணி உடன் அப்துல் ரசாக்கும் கலந்துகொண்டு போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்திருக்கிறார்.

 

நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நேசமணி போட்டியிட்டபோது வாக்குச் சேகரிப்புக்காக அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அப்துல் ரசாக் அவர்களும் நேசமணி உடன் வாக்குக் கேட்டுச் செல்வார். அப்படி இருவரையும் ஒருசேரப் பார்க்கும் குமரி மக்கள் ``நேசமணி ராசாவுக்கு ஜே. கூட வந்திருக்கும் மேத்தனுக்கும் ஜே` என்று முழக்கமிடுவார்களாம்.

அந்தத் தேர்தலில் நேசமணி வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட போது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அப்துல் ரசாக் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு இருவரும் சமகாலத்தில் குமரி மாவட்டத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குமரி மாவட்டத்தின் வரலாற்றில் நேசமணி தந்தையாகச்  சிறப்பிக்கப்படுகிறார் என்றால், அவருக்குக் கொஞ்சமும் குறைவில்லாத அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்க வேண்டியவராக அப்துல் ரசாக் விளங்கி இருக்கிறார். ஆனால் எந்த அரசியல் பலனும் அதிகாரப் பலனும் எதிர்பாராத அப்துல் ரசாக் அவர்கள் தாய்த் தமிழக இணைவின் மகிழ்விலேயே தம் வாழ்வின் இறுதியை ஏற்படுத்திக் கொண்டவர்.

 

இதுவரை பதிவு செய்யப்படாத வரலாறுகளை இப்போது வாழும் மூத்த குடிமக்களிடம் சேகரித்து இனிவரும் ஆண்டிலாவது அப்துல் ரசாக் குறித்த நினைவுகளைக் கருத்தரங்குகளாய் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து அதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். அல்லது அவர் வாழ்ந்த கோட்டாறு முஸ்லிம்கள் அதற்கான பணிகளைச் செய்ய முன்வர வேண்டும் .

 

 அப்துல் ரசாக் எப்படிக் களப்பணியாளர்கள் முன்னின்று வழி நடத்தினாரோ, அதேபோன்று திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதன்மையான நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து அப்போது நடைபெற்ற தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் மாபெரும் வெற்றியை அடைவதற்கு உரிய வியூகங்களை வகுத்துப் பணிகளைக் கூர்மைப்படுத்தி, கட்சியின் வெற்றிக்கும் குமரி மாவட்ட விடுதலைக்கும் முழு முதல் காரணகர்த்தாக்களுள் ஒருவராக நின்று வழிநடத்தியவர் சூரங்குடியைச் சேர்ந்த "நூர் முஹம்மது" என்பவர் ஆவார்.

சோமாலியா நாட்டினுடைய அரசுப் பொறுப்பைப் பெற்றிருந்து பணியாற்றிய சூழலிலும் குமரி மாவட்ட தாய்த் தமிழக இணைப்பிற்காக முழுமையாகக் களம் இறங்கிப் போராடியதில் நூர் முஹம்மது அவர்களின் பங்கும் போற்றுதலுக்குரியது. நாம் அவரைப் பற்றிய தகவல்களையும் இன்னும் அதிகம் தேடவும், தொகுக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதைச் செய்வதற்குரிய வாய்ப்பைப் பெற்ற கடைசித் தலைமுறை நாமாக இருக்கிறோம் என்பதை குமரி மாவட்டத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைக்க நடைபெற்ற போராட்டத்தில் மலையாள போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். ஆனால் போலீஸ் ரெக்கார்ட் 11 தமிழர்கள் பலியானதாகச் சொல்கிறது.

இதில் நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த போராளிகளோ நாகர்கோயிலைச் சேர்ந்த போராளிகளோ யாரும் இல்லை. மார்த்தாண்டம், புதுக்கடை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு என்பதால் குமரியில் இன்றைய கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இதில் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

ஆனால் போலீஸ் வெளியிட்டிருக்கும் 11 பேர் கொண்ட உயிரிழந்தோர் பட்டியலில் தேங்காய்ப் பட்டணம் பகுதியைச் சேர்ந்த பீர்முகமதுவும் ஒருவர். உயிர்த்தியாகம் செய்தவர்களின் பட்டியலில் பீர் முஹம்மதின் பெயரைச் சிலர் கடைசியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சிலர் அதையும் பயன்படுத்தவில்லை.

மார்ஷல் நேசமணி பற்றி எழுதிய புத்தகங்களில் அப்துல் ரசாக் என்ற பெயர் மட்டும் ஆங்காங்கே இடம்பெற்றிருக்கிறது. அவர் எந்த அளவிற்கு இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் மூளையாகச் செயல்பட்டார்;

நேசமணிக்கு ஆலோசனைகளைக் கொடுத்து அவரை வழிநடத்திய ஒரு கேப்டனாகச் செயல்பட்டார் என்பது குறித்த தகவல்களை யாரும் பதிவு செய்யவில்லை.

 அது சரி.  அவர்கள் ஏன் பதிவு செய்ய வேண்டும்? அவர்கள் யாரைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களைக் கொண்டாடுவார்கள். அதற்காகவே அவர்கள் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். நாம் யாரையும் கொண்டாடுவதும் இல்லை. அவருக்காக நாம் பேசுவதும் இல்லை. எழுதுவதுமில்லை. நம் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பை யாரும் பதிவு செய்யவுமில்லை. தமிழகத்தில் நடந்த மொழிப்போரில்

தமிழ் மொழி உணர்வு கொண்ட முஸ்லிம்களின் பங்களிப்பையும் யாரும் பதிவு செய்யவில்லை இப்படி நம்மில் சிலர் அவ்வப்போது பேசிக்கொள்வார்கள். யாரோ பதிவு செய்வார்கள்.  யாரோ எழுதுவார்கள், யாரோ பேசுவார்கள் என்று இருப்பதைவிட நாம் பேச, எழுத முன்வருவோம்.

நாம் பேசாவிட்டால் யார் பேசப் போகிறார்கள்?  2025 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள் குமரி தாய்த் தமிழக இணைவின் எழுபதாவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறோம்.

அந்த ஆண்டின் பெருவிழா நாயகர்களாக அப்துல் ரசாக்கையும் நூர் முஹம்மதையும் பீர் முஹம்மதையும் முன்னிறுத்தி குமரி மாவட்ட முஸ்லிம்கள் இந்த நாளைக் கொண்டாட முன்வர வேண்டும் என்னும் எதிர்பார்ப்போடு!

பேராசிரியர்

முகம்மது அஸ்கர்

நிறுவனர்

தமிழ்நாடு இஸ்லாமிய இளைஞர் மேம்பாட்டு இயக்கம்.