இமாம் மதீனா பள்ளிவாசல், பட்டினம்பாக்கம் சென்னை-28
நம்முள் பலரின் வீட்டோடு இணைந்த நிலையில் கட்டப்பட்டுள்ள அண்டை வீடுகள் நிச்சயம்
இருக்கும். சிலருக்கு அண்டைவீடு வலப்பக்கம் இருக்கலாம்; சிலருக்கு இடப்பக்கம் இருக்கலாம்.
சிலருக்கு எதிர்வீடாக இருக்கலாம். சிலருக்கு மேல்வீடாகவோ கீழ்வீடாகவோ இருக்கலாம்.
ஆக எப்படியேனும் நமக்கு அண்டைவீட்டார் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் நம் உறவினராகவோ
உறவினர் அல்லாதவராகவோ இருக்கலாம். அவர்கள்
முஸ்லிம்களாகவோ முஸ்லிம் அல்லாதோராகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களோடு
இணங்கி வாழ்வதுதான் நம்முடைய நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
நம் அண்டை வீட்டார் நம்மைவிட ஏழையாக இருக்கலாம்; அல்லது நம்மைவிடப் பணக்காரராக
இருக்கலாம்; அல்லது நமக்குச் சமமான பொருளாதாரப் பின்புலம் கொண்டவராக இருக்கலாம். எத்தகைய
நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு நம் வீட்டு உணவைப் பகிர்ந்துகொள்வதும் அன்பைப் பகிர்ந்துகொள்வதும்
நம் கடமையாகும்.
இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூதர் ரளியல்லாஹு அன்ஹு
அவர்களிடம், “அபூதர்! நீர் குழம்பு சமைத்தால் அதில் அதிகமாகத் தண்ணீர் சேர்த்துக்கொள்வீராக.
உம்முடைய அண்டை வீட்டாரையும் கவனித்துக்கொள்வீராக'' என்று சொன்னார்கள். (முஸ்லிம்:
5120) ‘குழம்பு’ என்று குறிப்பிட்டுச் சொன்ன காரணம், ரொட்டியை எப்படியாவது சமைத்துவிடலாம். ஆனால் அதற்கான குழம்பு
தயாரிப்பதுதான் பலருக்குச் சிரமமாக இருக்கும். அதனால்தான் அதைக் குறிப்பிட்டுக் கூறினார்கள்.
இன்றும் பல வீடுகளில் அந்நிலை தொடர்வதைக் காணலாம்.
நம்முடைய அண்டைவீட்டார் நம்மைவிட ஏழையாக இருந்தால் அந்தக் குழம்பு (சால்னா) அவர்களுக்கு
உதவியாக இருக்கும். நம்மைவிடப் பணக்காரராக இருந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்காதே?
பிறகு நாம் ஏன் கொடுக்க
வேண்டும் என்று கேட்கலாம். அது அவர்களுக்கு உதவியாக இருக்காவிட்டாலும் நமக்கும் அவர்களுக்கும்
இடையே அன்பை வளர்ப்பதற்கான ஊடகமாக இருக்கும்.
நாள்தோறும் அண்டைவீட்டாருக்குக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை; வாரத்தில் இரண்டு அல்லது மூன்று
நாள்கள் அல்லது கறி, மீன் வாங்கிச் சமைக்கிறபோது, பிரியாணி சமைக்கிறபோது, சிறப்பான உணவு வகைகளைச் சமைக்கிறபோது, இனிப்புப் பண்டங்கள் செய்கிறபோது
அதில் ஒரு பங்கு அண்டை வீட்டாருக்குக் கொடுக்கலாம். அது நிச்சயம் அவர்களுக்குப் பிடிக்கும். அதை அவர்கள்
இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வார்கள். அதன்பின் அவர்கள் நமக்குக் கொடுக்க, அது நம் இருவருக்கிடையே அன்பையும்
நல்லுறவையும் வளர்க்க உதவும்.
“முஸ்லிம் பெண்களே! ஓர்
அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாக)க் கொடுத்தாலும்
அதை(க் கொடுப்பதையும், பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள். (புகாரீ: 2566) இதில் பெண்களை முன்னிலைப்படுத்தி நபியவர்கள் கூறியுள்ளதற்குத் தனிப்பட்ட ஒரு காரணம்
உள்ளது. ஆம்! பெண்கள் அண்டைவீட்டார் கொடுக்கிற சின்னச் சின்னப் பொருள்களை அர்ப்பமாகக்
கருதுவார்கள்; இழிவாகக் கருதுவார்கள். ஆட்டுக்கால்களைக் கொண்டுபோய்க் கொடுத்தால்,
“எல்லாத்தையும் மத்தவங்களுக்குப்
பங்குபோட்டுவிட்டு, கடைசியாக மிஞ்சிய கால்களை எங்களுக்குக் கொண்டுவந்தியாக்கும்; அதை நீயே வச்சுக்க” என்று முகத்தில் அறைந்தாற்போல் பேசும் இயல்புடையவர்கள். எனவேதான் நபியவர்கள்,
எந்தப் பொருளாக இருந்தாலும்
அதை அர்ப்பமாகவோ இழிவாகவோ கருத வேண்டாம் என்று பெண்களை முன்னிலைப்படுத்திச் சொன்னார்கள்.
ஆகவே அண்டை வீட்டார் நமக்கு எவ்வளவு சிறிய பொருளைக் கொடுத்தாலும் நாம் அதை இன்முகத்தோடு
வாங்கிக்கொள்ள வேண்டுமே தவிர, அதைத் திருப்பி அனுப்பி, அவர்களை வருத்தமடையச் செய்யக்கூடாது.
பிறர் தருகின்ற சின்னச் சின்ன அன்பளிப்புகளை இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வதும் நம்மிடம்
உள்ள சின்னச் சின்னப் பொருளாயினும் அதை அர்ப்பமாகக் கருதாமல், அண்டை வீட்டாருக்குக் கொடுப்பதும்
நம் அண்டை வீட்டாரின் அன்பை அதிகப்படுத்தும். அந்த வகையில் நபியவர்கள் தமக்கு வழங்கப்படுகிற
சின்ன அன்பளிப்பாயினும் அதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்கள்: “ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை
அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன்.
எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி, நான் அதைப் பெற்றுக் கொள்வேன்.”
(புகாரீ: 2568)
பெண்கள் மத்தியில் பிணக்குகள் ஏற்பட்டு, அதன்மூலம் அண்டை வீட்டார் உறவு
முறிவதுதான் மிகுதியாக நாம் காணும் அன்றாட நிகழ்வுகளாகும். துணி காயப்போடும்போது
சிக்கல் ஏற்படும்; குப்பை போடும்போது சிக்கல் ஏற்படும், வீடு கழுவிவிட்டுத் தண்ணீரைத்
தள்ளும்போது பிரச்சனை ஏற்படும். இரண்டு வீட்டாரின் பிள்ளைகள் விளையாடும்போது அவர்களுக்கிடையே
சண்டை ஏற்பட்டு, அதன்மூலம் இருவீட்டாரின் பெண்களுக்கும் பிரச்சனை ஏற்படும். இவ்வாறு அவ்வப்போது
சின்னச் சின்னச் சிக்கல்களும் பிணக்குகளும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதையெல்லாம்
சமாளித்து அண்டை வீட்டார் உறவு சிதைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது குடும்பத்தலைவரின்
பொறுப்பாகும்.
“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்குத்
தொல்லை தர வேண்டாம்” (முஸ்லிம்: 75) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் கூறியுள்ளதை நினைவில்கொள்வோம். இச்செய்தியை நம் வீட்டுப் பெண்களுக்கு
எடுத்துச் சொல்வோம். அவர்கள்மூலமே இணக்கமோ பிணக்கமோ ஏற்படுகிறது.
அண்டைவீட்டாரோடு இணங்கி வாழ்வதற்கான வழிமுறைகளுள் ஒன்று நாமும் அவர்களும் ஒருவருக்கொருவர்
கொடுத்து, வாங்கிக் கொள்வதாகும். நாம் மட்டும் அவர்களுக்குக் கொடுக்க, அவர்கள் நமக்கு எதுவும் தருவதில்லை
என்றாலும் பரவாயில்லை. நாம் அவர்களுக்குக் கொடுப்பதை நிறுத்தக் கூடாது. ‘நாம் மட்டும் அவர்களுக்குக் கொடுக்கிறோம்,
அவர்கள் நமக்கு எதுவும்
தருவதில்லையே’ என்று நம்முள் சிலர் நினைக்கலாம். நாம் அவ்வாறு நினைக்கத் தேவையில்லை.
நாம் அவர்களுக்குக் கொடுத்ததற்கான நன்மை நமக்கு நிச்சயம் கிடைக்கும்.
அண்டை வீட்டாரின் அன்பைப் பெற, அவர்களோடு இணங்கி வாழ, நாம் அவர்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுப்பது ஒரு வழி என்றால், நாம் அவர்களுக்கு எந்தச் சிரமமும்
கொடுக்காதிருப்பது மற்றொரு வழி. நம்மால் அவர்களுக்கு எந்தத் தொல்லையுமில்லை என்பதை
உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நாமே அவர்களிடம், “எங்களால் உங்களுக்கு ஏதேனும்
சிரமம் இருக்கிறதா” என்று கேட்டு, ‘இல்லை’ என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ‘ஆம்’
என்றால் அது என்னவென்று
கேட்டு, அதைச் சரிசெய்துகொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறியுள்ள செய்தி நம்மை எச்சரிக்கிறது: “யாருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு
உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.” (முஸ்லிம்: 73)
அண்டைவீட்டாரின் உரிமைகளில் தலையிடாமல் இருப்பதும் அவர்களுக்குரிய உரிமைகளை முழுமையாகக்
கொடுப்பதும் நாம் நம் அண்டைவீட்டாருக்குச் செய்யும் கடமையாகும். குறிப்பாக மேல்வீடு,
கீழ்வீடுகளில் குடியிருக்கக்கூடியோர்
இவ்விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துவைத்த துணிகளைக் காயப்போடுதல்,
வாகனங்களை நிறுத்துதல்,
தண்ணீர்த் தொட்டியில்
நீர் நிரப்புவதற்காக மோட்டார் சுவிட்சை இயக்குதல் உள்ளிட்டவற்றில் பிரச்சனைகள் எழும்.
அப்போது நாம் அவர்களுக்காக விட்டுக்கொடுத்தல், உதவிசெய்தல் ஆகியவை மூலம் அவர்களின்
மனத்தில் இடம்பிடிக்க முயல வேண்டுமே தவிர வம்புக்கு நிற்கக்கூடாது. தண்ணீர்த் தொட்டியில்
தண்ணீர் தீர்ந்துபோனால் யார் மோட்டார் சுவிட்சை இயக்குவது என்பதில்கூடச் சண்டைபோட்டுக்
கொள்கின்றார்கள். அவர்களுக்குத் தேவையென்றால் அவர்களே வந்து சுவிட்சைப் போடட்டுமே
என்று கீழ்வீட்டுக்காரர்கள் வீம்புசெய்வது சரியில்லை. ‘நானே முதலில் செய்வேன்’ என்ற கொள்கைதான் இப்பிரச்சனைக்குத் தீர்வாகும்.
மேலும் கீழும் அடுக்கடுக்காக மூன்று வீடுகள். மூன்று வீட்டுக்காரர்களும் வாகனங்கள்
வைத்திருக்கின்றார்கள் என்றால் நம் வாகனத்தை நிறுத்தும்போது பிறரின் வாகனங்களை நிறுத்துவதற்குத்
தோதுவாக இடம் ஒதுக்கிவிட்டு நிறுத்த வேண்டும். நம்முடைய வண்டி, பிறரது வண்டியில் கீறல் ஏற்படுத்திவிடாதவாறு
கவனமாக நிறுத்த வேண்டும். அதேவேளையில் பிறரின் வண்டி நமது வண்டியில் கீறல் ஏதாவது ஏற்படுத்திவிட்டால்,
அதைப் பொறுத்துக்கொள்ள
வேண்டும்; சகித்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் ஏற்பட்ட கீறல்களை எளிதில் சரிசெய்துவிடலாம்.
ஆனால் மனித மனங்களில் கீறல் ஏற்படுத்திவிட்டால் அதை அவ்வளவு எளிதில் நீக்க முடியாது;
அது நீக்க முடியாத வடுவாகப்
பதிந்துவிடும். அதுவே அடுத்தடுத்த சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். எனவே சின்னச் சின்ன
விஷயங்களுக்காகச் சண்டைபோடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
அண்டை வீட்டார் எப்படியோ போகட்டும்; அவர்களுக்குக் காற்று வரும்வழி இருக்கிறதா, தடைபடுகிறதா என்று பார்ப்பதெல்லாம்
என் வேலை கிடையாது. என்னுடைய வசதியும் நிம்மதியும்தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தம்
வீட்டை உயர்த்திக் கட்டுகிற, தம் வீட்டுச் சுவரை உயர்த்திக் கட்டுகிற எத்தனையோ பேரை நாம் காண்கிறோம். அந்தோ
பரிதாபம்! அவர்களுக்கு நபியவர்களின் செய்திகள் தெரியாது. அண்டைவீட்டாருக்கு உபகாரம்
செய்வது மிகப்பெரும் நன்மைக்குரிய செயல் என்பதை நம்முள் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
அண்டைவீட்டாருக்குச் செய்ய வேண்டிய நன்மைகள் என்னவென்று கேட்டால், அவரவர் தத்தம் கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.
ஒருவர் ‘கொடுத்து உதவுதல்’ என்பார்; ‘தொல்லைகளைச் சகித்துக்கொள்ளுதல்’ என்பார் மற்றொருவர். ‘அவர்களுக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல்’ என்பார் மற்றொருவர். ‘அன்பைப் பரிமாறிக் கொள்ளுதல்’ என்பார் இன்னொருவர். ஆனால் எல்லாவற்றிலும் முக்கியமானது என்னவென்றால்,
அண்டைவீட்டார் நம்மைவிடப்
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தால், அவர்கள் முன்னிலையில் நம்முடைய
மேன்மையை, பணப்புழக்கத்தை வெளிக்காட்டாமல் இருப்பதுதான்.
நாம் மிகுதியாக வாங்கி உண்கின்ற பழத்தோல்களை அவர்களுடைய பிள்ளைகளின் கண்களுக்குப்
படுமாறு வீதியில் போடுவதும் உயர்தரமான ஆடைகளை நம் பிள்ளைகளுக்கு உடுத்திவிட்டு,
அதை அவர்களின் பிள்ளைகள்
பார்த்து ஏங்குமாறு செய்வதும் மிகப்பெரும் தவறாகும். நம் மனைவிக்கு உயர்தரமான ஆடைகளை
வாங்கி, உடுத்திக்கொள்ளச் செய்து, அதைப் பார்க்கின்ற அண்டைவீட்டாரின் மனைவியை ஏங்க வைப்பதும் உயர்பண்பாகாது. இத்தகைய வசதிகள் நமக்கு இல்லையே
என்ற ஏக்கத்தை உண்டுபண்ணாமல் இருப்பதே நாம் அண்டைவீட்டாருக்குச் செய்யும் உபகாரங்களுள்
மிக முக்கியமானதாகும். அதைத்தான் ‘உடையது விளம்பேல்’ என்று ஆத்திசூடி பாடல் விளம்புகிறது.
அண்டைவீட்டாருக்குச் செய்யும் உபகாரங்களுள் மற்றொன்று, அவர்களுடைய வீட்டிற்குத் திடீரென
விருந்தாளிகள் வந்துவிடும்போது அவர்களை எங்கே தங்கவைப்பது என்ற பதற்றம் அவர்களுக்கு
ஏற்படும். அந்த நிர்ப்பந்தமான நேரத்தில், நாம் அவர்களிடம் சென்று, “உங்கள் உறவினர்களை எங்கள் வீட்டில்
தங்க வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி, நம் வீட்டில் அவர்கள் தங்குவதற்கு
இடம்கொடுத்து உதவுவதே மிகச் சிறந்த உதவியாகும். கடுமையாக மழைபொழிந்து கீழ்வீட்டில்
மழைநீர் புகுந்து, அவர்கள் தங்குவதற்கும் தூங்குவதற்கும் இடமின்றித் தவிக்கும்போது, “எங்கள் வீட்டில் தங்கிக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லி, அவர்களுக்கு இடமளிப்பது காலத்தால் செய்கிற மாபெரும் உதவியாகும். இவை போன்ற உதவிகள்
நமக்குக் கிடைக்க வேண்டுமெனில், நாம் நம் அண்டைவீட்டாரோடு அண்டி வாழ வேண்டும்; இணங்கி வாழ வேண்டும்.
என் வீட்டில் இல்லாததா என்று இறுமாப்போடு இருக்காமல், அண்டைவீட்டார் அன்போடு தருகிற அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வதும் அவர்களோடு இணங்கி வாழ்வதும் நம் வீட்டிலிருந்து அவர்களுக்குக் கொடுத்து உதவுவதும் நாம் அண்டைவீட்டாரோடு அண்டி வாழ்வதற்கான அடையாளங்களாகும். எனவே அவற்றைக் கடைப்பிடித்து, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய வழியில் வாழ முற்படுவோம்.
========================