Wednesday 09 04 2025

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

என்னவருக்குச் சமர்ப்பணம்
மூமினா பேகம் Dec 12 2024 வாழ்வியல்

என்னவருக்குச் சமர்ப்பணம்


 

எனக்கு 16

என்னவருக்கோ 26.

எங்களது இனிய நாளான திருமணம் 13.08.1998 அன்று நடைபெற்றது.

 

புதியதொரு வாழ்க்கை வாழ பல கனவுகளோடு நாங்கள் வாழ ஆரம்பித்த நாள் அன்று.

எனக்கோ புது அனுபவம். புது இடம். புது மனிதர்கள்.

இப்படி அழகிய நினைவலைகளோடு எங்களது வாழ்க்கை தொடங்கியது.

என்னவரோ வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்.

2.மாதம் லீவில்தான் திருமணத்திற்காக வந்திருந்தார்.

திருமணம் முடிந்து 40 நாள்களில் என்னவர் வெளிநாடு பயணம் சென்றார்.

ஆனால் எனக்கும் என்னவருக்கும் அந்த நாள் மிகவும் துயரமான நாளாக இருந்தது. அதன்பின் எங்களுடைய வாழ்க்கை போனிலும் தபாலிலும் தொடங்கியது.

 

எனக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதம் ஆனவுடன் என்னவர் வெளிநாட்டில் இருந்து 2 மாதம் லீவில் வருகை தந்திருந்தார். மிகவும் சந்தோஷமான நாள்களாக எங்களுக்கு அந்த நாள்கள் இருந்தன.

2 மாதம் ஆனவுடன் மீண்டும் என்னவர் வெளிநாட்டிற்குப் பயணம் கிளம்பினார். நானும் எனது மகளும் 3 வருடக் காலம் காலத்தைக் கழித்தோம். அதன் பிறகு என்னவர் வெளிநாட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் என்று வந்து விட்டார்

 

உள் நாட்டிலேயே சொந்தமாக ஒரு ஹோட்டல் தொழிலைத் தொடங்கினோம். ஒரு தொழில் என்றால் உடனே அது நமக்கு இலாபம் அளிக்காது. ஆதலால் மிகவும் சிரமப்பட்டு ஒரு வழியாக அந்த ஹோட்டலை நடத்தி வந்தோம்.

 

பிறகு எங்களுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் மிகவும் சுட்டித் தனம் உள்ளவள்.

எனக்கு இந்த இடத்தில் எதைப் பேச வேண்டும்; எதைப் பேசக்கூடாது; எப்படி மற்றவர்களிடம் நடந்து கொள்வது என்று தெரியாமல் நடந்து கொள்வேன். என்னவரோ என்னை நிதானமாக வழிநடத்தி வந்தார்.

 

இப்படியே காலம் ஓடியது. எங்களுக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. மிகவும் பொறுமையுடன் இருப்பாள். மூன்றாவது  குழந்தை  பிறந்த சிறிது காலத்தில் எனது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.

 

சொல்லாத் துயரத்திற்கு நான் ஆளானேன். இறைவனின் நாட்டம். அவன் நாடியபடிதான் நடக்கும்.

 

அதனால் நான் பொறுமையுடன் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன். முதல் முதலில் இடுப்பு வலி வந்து படுத்த படுக்கையில் இருந்தேன். அப்போது எனக்கு மனம் வேதனையளிக்கும். என் வாழ்க்கையில் அன்றைய வாழ்க்கையில் இருந்து இன்றைய வாழ்க்கை வரை எனது தாயும் எனது தங்கையும் என்னையும் என் குழந்தைகளையும் பார்த்துக்கொள்வார்கள்.

 

என்னவரோ அந்த நேரத்தில் உள்நாட்டில் தொழில் நஷ்டம் அடைய, கடை உரிமையாளர் காலி செய்யச்சொல்ல, வேறு வழியின்றி மறுபடியும் வெளிநாடு பயணம் சென்றிருந்தார்.

 

அதன் பிறகு எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, மயக்கமும் ஏற்படும். மயங்கிக் கீழே விழுந்து விடுவேன். எனக்கு நிதானமே இருக்காது. என்னுடைய உறவினர்கள், என் நண்பர்கள் எல்லாம் என்னைப் பற்றி மிகவும் கவலையடைவார்கள். அந்த நேரத்தில் மனதால் பாதிப்புக்குள்ளானேன். அன்றிலிருந்து இன்றுவரை நோய் வாய்ப்பட்டுதான் இருக்கிறேன்.


மாத்திரை இல்லாமல் என்னால் ஒரு நேரம்கூட இருக்க முடியாது. எனது நோய்க்குச் செலவழித்த பணத்தின் மதிப்போ அதிகம். வேறு நபராக இருந்தால் இந்த அளவு பொறுமையுடன் இருந்திருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

 

என்னவருக்கோ இறைவனின் நம்பிக்கையும் ஈமானில் உறுதியும் அதிகம் இருந்தது. அதனால்தான் என்னவர் போல இந்த அளவு பொறுமையுடன் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்பினேன். என்னவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

 

இப்படியே எங்கள் காலம் ஓடியது. எங்களது பெரிய மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. எங்களைவிட்டுப் பிரிந்து அவள் புகுந்த வீடு சென்றாள்.

 

காலங்கள் கழிந்தன. இரண்டாவது பெண்ணுக்குத் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் என்னவரைப் பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். எனக்கு இறைவன் கொடுத்த அருட்கொடைகளுள் ஒன்றுதான் என் கண்நிறைந்த கணவர்.

 

"ஒரு நல்ல கணவர் என்று பெயர் எடுத்தால் அந்த மனிதரே சிறந்தவர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

 

அந்த ஹதீஸில் குறிப்பிட்டுள்ளது போல் "என் கணவர் சிறந்த கணவராகவும் அவருக்குச் சிறந்த மனைவியாகவும்" நாங்கள் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

எனது மனதும் உடலும் மிகவும் பலவீனமாக இருப்பதால் "யாரேனும் என் மனம் புண்படும் வகையில் பேசினால், என்னால் அதைத் தாங்க முடியாது. அதையே யோசித்துக் கொண்டு இருப்பேன்.

 

இப்படி யோசித்து யோசித்து எனக்கு மன அழுத்தம் எனும் நோய் வந்துவிட்டது. ஆதலால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார்கள்.

 

என்னவரோ எங்களது வாழ்க்கையில் நிறைய இடத்தில் என்னிடம் கோபம் அடையும் தருணம் இருந்தும் அந்தக் கோபத்தை அடக்கிக்கொண்டு ஒரு குழந்தையைப்போல பார்த்துக்கொள்வார். அதையெல்லாம் எழுத்துகளால் எழுதினால் அதை எழுதி முடிக்க முடியாது. 'அதை உணர்ந்து அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.  


இறைவன் மிகப் பெரியவன். அடிக்கடி ஹாஸ்பிடலுக்குப்போய் பெட்டில் சேர்ந்து சிகிச்சைப் பெற்று வருவேன். அப்போது எனக்கு மரண பயமே வந்து என்னைப் பாடாய்ப் படுத்தும்.


"என் மனதில் இறைவன் மீது நம்பிக்கையும் பொறுமையும்" இருந்தது. அன்றைய நாளில் இன்றைய நாள் வரை உயிரோடு இருப்பேனா என்று நான் நினைத்ததில்லை. என்னவரோ மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்கிறார். ஆதலால்தான் உலகத்திலேயே யாருக்குமே கிடைக்காத கணவர் எனக்குக் கிடைத்துள்ளார் என்று சொல்கிறேன்.


எனவே எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நீண்ட ஆயுளோடும் நோயற்ற வாழ்வோடும் வாழப் பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கோருகிறேன்.