உலகத்தில் பெண்மை கொண்டாடவும் படுகின்றது;
துண்டாடவும் படுகின்றது. பெண்மையைத் துண்டாட பல கயவர்கள் இருந்தாலும், கொண்டாடுவதில் தந்தையே சிறந்தவர். தமக்கு மகள் பிறக்கும்போது தந்தை
மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார். அந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை கிடையாது.
ஒரு தந்தை, தம் மகளைத் தாய் போன்று உணர்கின்றார். இந்த உலகத்தில் தாயின் அன்பிற்கு உண்டோ
ஈடு. இறைவன் தந்தைக்குப் பெண் குழந்தையைக் கொடுத்து சுபச் செய்தி கூறுகிறான் என்றால், அந்த உறவு எவ்வளவு உயர்வானது
என்று தெரிகிறது. மகளைத் தந்தை எப்படி வளர்த்துப் பாதுகாக்கிறார் தெரியுமா? மாணிக்கத்தைப் போல் பாதுகாக்கிறார்.
தந்தை-மகள் உறவில் என்ன ஒரு காந்த சக்தி இருக்குமோ ஒட்டிக் கொள்வதற்கு!
தந்தை தன் மகளைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்லும்போது தன்னை, ஓர் இளவரசியாகக் கற்பனை செய்து
கொள்ளும் தருணம். ஆம்! அவள் இளவரசிதான். கற்பனைக்கு அடங்கிய உறவு இல்லை. ஒரு தந்தை
வாழ்க்கையில் மகள் இளவரசிதான். ஒரு தாயின் அல்லது தன் மனைவியின் கோபத்திற்கு அடங்காத
ஆண் தன் மகளின் சிறிய சிரிப்புக்கு அடங்கி விடுவது அதிசயம். என்ன தந்தை-மகள் உறவில்
சுயநலப் பாசம் அடங்கியுள்ளது. தன் தாய், மனைவி ஆகியோரின் பேச்சைக் கேட்காத தந்தை, தன் மகள் பேச்சில்
ஒரு குழந்தையாகவே மாறிவிடுவது இரசனைக்குரியது.
ஏழ்மையின் உச்சத்தில் இருக்கும் தந்தை, தன் மகள் விஷயத்தில் தற்காலிகப் பணக்காரனாக
ஆன தருணம் வியப்பாக இருக்கிறது. மிதிவண்டியில் தந்தையுடன் பின்னால் அமர்ந்து, அந்த
மிதிவண்டியைத் தந்தை ஓட்டி, தெருவை ஒரு சுற்று சுற்றும் சந்தோஷம் ஆகாயத்தில் பறக்கின்ற
விமானத்தில் உலகம் சுற்றினாலும் கிடைக்காத சந்தோஷம்.
திருமண வாழ்க்கையில் சில மனச்சங்கடங்களைச் சொல்லி ஆறுதல் அடைவதற்கு, தந்தையைவிட
வேறு ஆள் இல்லை. தந்தை-மகள் உறவென்பது தினம், தினம் புதிய வாழ்க்கை வாழுகின்ற
ஓர் அனுபவம். இந்த அனுபவம் மீண்டும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறேன்.
வயதை இழந்தவளாக அல்ல; தந்தையை இழந்தவளாக! கண்ணீருடன்........