1. உங்களை பற்றிய அறிமுகம்?
நான் ஒரு குடும்பத்தலைவி. எழுத்தாளர் மற்றும் ஹூதா ஹெல்த் கேர் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்... " தாயில்லாமல் நானில்லை' , 'நாலுபேருக்கு நன்றி ' என்ற புத்தகங்களை எழுதியுள்ளேன்... பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடந்த தமிழ்ச்சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பாரதியார் கவிதைப் போட்டியில் பங்கேற்று பாண்டிச்சேரி கவர்னரின் கைகளால் விருதினைப் பெற்றுள்ளேன்... 2008 ஆண்டு பெண்கள் தினத்தில் முன்னாள் அமைச்சரும் இன்றைய தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் விருதுகள் பெற்றுள்ளேன்...
2. உங்களின் புத்தக வாசிப்பு எங்கிருந்து துவங்கியது..?
எனது வாசிப்பு எங்கள் வீட்டில்தான் அறிமுகமானது.. வீட்டுப்பெரியவர்களுக்கு நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்துக்காட்டிய பொழுது வாசிப்புப் பழக்கம் உறவானது... பக்கத்து வீட்டு வேணி அக்காவின் துணையோடு வார இதழ், மாத இதழென, எனது வாசிப்பின் பயணம் நீளத்துவங்கியது...அந்த வயதிலும் அவர்களுடனான வாசிப்புச் சார்ந்த பகிர்வுகள் எனக்கும் புத்தகத்திற்குமான உறவை நீளச்செய்தது...
3. புத்தக வாசிப்பு உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன..?
வெளி உலகத்தில் எப்படி நான் நடந்துகொள்ளவது என்ற புரிதலைத் தந்தது.. காணாத தேசத்தைக்கூட எழுத்தின் வழியே என்னால் காண முடிந்தது... வாசந்தி, கீதா பெர்னட் போன்றவர்கள் வெளிநாட்டு வாழ்வியல் சார்ந்த கதைகளை எழுதியபொழுது, அதை வாசித்த நான் கதைகளின் வழியே வெளிநாட்டில் கூட வாழ்ந்துபார்த்த உணர்பை் பெற முடிந்தது. இப்படியாக எனது குறுகிய வட்டத்திலிருந்து பரந்துபட்ட வெளிகளைக் காணவைத்தது எழுத்துக்கள்...என்னிடம் தேடலையும் உண்டாக்கியது...
4. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்..?
ஆரம்ப காலத்தில் தொடர்கதைகளாக வாசிக்க ஆரம்பித்த பொழுது அனுராதா ரமணன், இந்துமதி, லஷ்மி போன்றவர்கள் பிடித்தவர்களாக இருந்தார்கள்.. "இரும்புக்குதிரையி்ல்" ஈர்க்கப்பட்டு, மெர்க்குரி பூக்கள் போன்றவைகளை வாசித்த பொழுது "பாலகுமாரனின்" எழுத்துக்கள் பிடித்துப் போனது. அவர் எழுதிய ராஜ ராஜ சோழனை வாசித்தப்பிறகு பாலகுமாரனை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது... அப்படியாக இன்றுவரையிலும் "பாலகுமாரனின்" எழுத்துக்கள் பிடித்தமானவை...
5.புத்தகம் எழுதத் துவங்கிய பொழுது உங்களுக்குள் தயக்கம் இருந்ததா...? எதைச்சார்ந்து...?
கண்டிப்பாக... தயக்கம் இருந்தது. துவக்கக்கல்வியோடு தடைப்பட்டுப் போன எனது பள்ளிப்படிப்பும். எழுத்து ஜாம்பவான்களுக்கு மத்தியில் நம்முடைய எழுத்து வாசிக்கப்படுமா என்ற தயக்கங்களும் இருந்தது... தொடர்வாசிப்பும், என்னை ஊக்குவிக்கும் நல்ல மனிதர்களும் உடன் இருந்ததால் எழுத்து தயக்கங்களைத் தாண்டி சாத்தியமானது...
6. புத்தகம் எழுதத் தூண்டியது எது..?
நான் கடந்து வந்த தவிப்புகளைக் கடத்துவதற்கு எழுத்து எனக்கு துணையாக அமைந்தது.. உடல் நலத்தில் அக்கறையி்ல்லாத பெண்களுக்கு, தாயில்லாமல் நான் கடந்துவந்த துயர்களை கருவாக முன்னிலைப்படுத்தி எனது முதல் புத்தகத்தை எழுதத்துவங்கினேன்.. பின்பு பெண்களுக்கான குரலாய் எனது எழுத்துக்கள் தொடரும் வண்ணம், பெண்களின் முன்னேற்றங்களுக்கான வழிகோலாக எனது எழுத்துக்களை தொகுத்து வருகிறேன்...
7. "உணவே மருந்து" என்ற சாராம்சத்தை முன்னிருத்தி ஹூதா ஹெல்த் கேர் அமைந்ததன் பின்னணி என்ன..?
ஆரோக்கியமான விவசாயத்தை வேண்டி, நேரடியாக நாங்கள் விவசாயம் சார்ந்து ஈடுபட்டபோதும், உரம் விதைகள் என அனைத்திலும் கலப்படம் இருந்தது தெரியவந்தது.. ஆர்கானிக் என்பதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் புரியவந்தபொழுது, ஏன் அதை மதிப்புக்கூட்டு செய்து மக்களுக்கு ஏற்றதாக மாற்றக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது... அதிலிருந்து பிறந்ததுதான் மரபுவழிப்படி வந்த உணவே மருந்தின் சாரம்சமாய் , கபப்பொடி, பிரசவ லேகியம், பிரண்டைத் தொக்கு, முளைக்கட்டிய தானியங்களின் சத்துமாவு போன்ற இன்னும் அதிகமான தயாரிப்புப் பொருட்கள்... இப்படியாக துவங்கியதுதான் ஹூதா ஹெல்த் கேர் நிறுவனம் .
8. குடும்பத்தையும் கவனித்து தங்களையும் மேம்படுத்திக்கொள்ள நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட முயற்சிகள் என்னென்ன..?
குடும்பத்திற்கும் என்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்குமான நேரங்களையும் சரியாக கையாள்வது... எனது எழுத்துக்கான நேரத்தை பெரும்பாலும் அமைதியான இரவுகளில் அமைத்துக்கொண்டேன்.. எதையும் தள்ளிப்போடு்ம் பழக்கம் இல்லாதததும் எனக்கான நேரத்தை வசப்படுத்திக் கொடுத்தது...
_ சுட்டுவிரலுக்காக
. _ ஜெஸிரா...