என் தாயும் தந்தையும் கிராமத்தில் பிறந்தவர்கள்.
அவர்களுக்குத் திருமணம் ஆனவுடன் சிறிது காலம் கிராமத்திலேயே இருந்தனர்.
நான்தான் முதல் பெண் குழந்தை. இரண்டாவதாக எனக்கொரு தங்கை இருக்கிறாள்.
பிழைப்புக்காக மதுரையை நோக்கி எனது குடும்பம் குடிபோக
எனது குடும்பமும் எனது பெரியப்பாவின்
குடும்பமும் ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.
மறக்க முடியாத நினைவுகள்.
என் தந்தையும் பெரிய தந்தையும் உடன் பிறந்த சகோதரர்கள்.
அதேபோல் என் தாயும் என் பெரியம்மாவும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.
நான் குழந்தையாக இருந்தபோது அங்கன்வாடி மையத்துக்கு என்னை என் தாய் அழைத்துப் போகும்போது நான் மிகவும் அழ ஆரம்பித்து விடுவேன்.
நான் என்னதான் அழுதாலும் என்னை வலுக்கட்டாயமாகக் கொண்டுபோய் விட்டுட்டு வந்துவிடுவார்.
அதன்பின் பிரைமரி பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
ஒரே பள்ளியில் நான் என் பெரியப்பாவின் மகன் (அண்ணன்), பெரியப்பாவின் மகள், நாங்கள் மூவரும் படித்தோம்.
மதியம் பெரிய கேரியரில் லஞ்ச் கொண்டு வந்து தினமும்
பெரியப்பா கொடுப்பார்.
இப்படியே சிறிது காலம் ஆனவுடன் பிள்ளைகள் வளரவே எங்களது குடும்பமும்
பெரியப்பா குடும்பமும் தனித்தனியாகக் குடியிருக்க ஆரம்பித்தோம்.
அதன்பிறகு என் தந்தை மளிகைக் கடை தொடங்கினார்.
அந்தச் சின்னஞ்சிறு வயதில் உள்ள நினைவலைகள் என்னை அசை போட வைத்தது.
மாங்காய் பீஸ் கட் பண்ணி அதில் மிளகாய்ப் பொடியுடன் பிள்ளைகள் விற்பார்கள்.
சிறிது சில்லறை கொடுத்து அந்த மாங்காய்த் துண்டுகளை இரசித்துப் புசித்த காலம் இப்போது வருமா?
அப்போது தெருவில் ஒரு வீட்டில் மட்டும்தான் ப்ளாக் அன் ஒயிட் டி.வி.இருக்கும்.
அந்த டி.வி.யில்.ஹிந்தி படம் ஓடும். அவர்கள் பேசும் பாஷை புரியாது.
இருந்தாலும் ஜன்னலில் சக தோழிகளோடு எட்டிப்பார்த்துக் கொண்டிருப்போம். அந்த வசந்த காலம் இப்போது வருமா?
எங்களது தெருவில் ஒரு மனிதர் மிகவும் பெரிய மீசையுடன், பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பார்.
அவரைப் பார்த்து நான் மிகவும் பயப்படுவேன். ஒரு நாள் நான் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தேன்.
அந்த நேரத்தில் பெரிய மீசையுடன் உள்ள நபர் தீடிரென வந்து விட்டார். நான் பயந்து விட்டேன்.
அந்த நபரைப் பார்த்தவுடன் நான்
வீட்டிற்குள் ஓடி விட்டேன். அவர் வீட்டிற்குள்ளேயே வந்து விட்டார்.
நான் நடுநடுங்கி விட்டேன்.
மற்றொரு நாள் அங்கன்வாடி மையத்துக்கு அங்கன்வாடி மையப்பணியாளர் என்னை அழைத்துக்கொண்டு
சென்றபோது, நான் பார்த்து பயந்த அந்த மீசைக்காரர் குடியிருக்கும் காம்ப்பவுண்டிற்குள்
அழைத்துச்செல்ல, நானோ பயந்து நடுநடுங்க, ஐயையோ!
அதை எப்படிச் சொல்வது அதை அனுபவிக்கும்போதுதான் உணர முடியும்.
நானும் என் தங்கையும் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தோம்.
தினமும் இரண்டு பேருக்கும் முட்டையுடன் என் தாய் மதிய உணவு
கொண்டு வருவார்.
நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து
எங்கள் கிராமத்திற்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
என் தந்தையின் தந்தை மரணித்து விட்டார்.
அதனால் கிராமத்திற்கு வந்து விட்டு மதுரைக்குக் கிளம்பியபோது
என் தங்கைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.
அந்தக் காரணத்தால் ஒரு மாதக் காலம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதன்பிறகு என் தந்தையின் மளிகைக் கடை வியாபாரம் நஷ்டம் அடையவே,
மறுபடியும் சொந்தக் கிராமத்திற்குக் குடி பெயர்ந்து வந்து விட்டோம்.
அதன்பின் நடந்தது என்ன?
-இந்த உண்மைக் கதை மீண்டும் தொடரும்.