திருவாரூர் ஜன 07
தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படும் மரபு முதலில் தமிழ்த் தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவது தான். இந்த மரபை இது வரையில் தமிழ் நாட்டில் ஆளுநராக இருந்தவர்கள் அனைவருமே மதித்து நடந்துள்ளனர். தற்போது ஆளுநர் ரவி இந்த மரபுகளை மாற்றுவதோடு தன்னுடைய சுய விருப்பத்தைத் திணிக்கப்பார்க்கிறார்.
இவற்றைக் கண்டிக்கும் விதமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டிற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர் என்கிற ஒரு பதவி தேவையில்லை என்பதனை தொடர்ந்து வலியுறுத்தி வரும் கட்சியாகும். மக்களுடைய பிரதிநிதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
சட்டமன்றத்தில் மக்களுக்குத் தேவையான சட்டங்களையும், அரசு ஏற்றுகின்ற புதிய திட்டங்களை நிறைவேற்றுகிற பொழுது அந்தச் சட்டங்களுக்கும், திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுகிற வகையில் தற்போது மத்தியில் ஆளுபவர்கள் தங்களுடைய ஏஜெண்டுகளாக ஒரு ஆளுநரை பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்கள் ஆளுங்கட்சியினர் நிறைவேற்றப்பட்ட சட்டக் கோப்பில் கையெழுத்து போடாமல் முட்டுக்கட்டை போடுவதும்,தொடர்ந்து மக்கள் நலத் திட்டங்கள் அதனால் புறக்கணிக்கப்படுவதும் தமிழகத்தில் நீடித்து வருகிறது.
இந்த நிலையினை உடனடியாக மத்திய அரசும் ஆளுநர் என்கிற பொறுப்பினை நீக்கி முழுமையாக மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதனை இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்குத் திமுகவினர் வலியுறுத்தினர்.
மேலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநில ஆட்சியை வலியுறுத்தி நாடாளுமன்றத்திலே பேசுகின்ற பொழுதும், தமிழ்நாட்டிலே பல்வேறு சந்தர்ப்பங்களிலே பேசுகிற பொழுதும் ஆட்டுக்குத் தாடியும்,நாட்டுக்கு கவர்னர் என்ற பதவியும் தேவையில்லை என்று பலமுறை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
ஆளுநர் ரவி பாசிச வெறி பிடித்த பாஜகவின் இடைத்தரகர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்டிப் பார்க்கலாம், அசைத்துப் பார்க்கலாம் என்றும் அதிமுக,பாஜக கட்சிகள் கள்ளக் கூட்டணியின் மூலம் ஆட்சி கலைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டால் அது ஒருபோதும் நிகழாது என்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசினர். இதில் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.