எனது குடும்பம் சிறிது
காலம் கிராமத்திலேயே இருந்தது.
என் தந்தையோ மதுரை to திருச்சி செல்லும்
வழியில் கொட்டாம்பட்டி என்ற ஊரில் டீ-ஸ்நாக்ஸ் கடை வைத்திருந்தார்.
அதன்பின் நான் மட்டும்
என்னுடைய பெரியம்மா வீட்டில் தங்கி 3ஆம் வகுப்பு படித்தேன்.
என்னை மட்டும் கிராமத்திலேயே
விட்டுவிட்டு எனது குடும்பம் கொட்டாம்பட்டிக்குக் குடி போனது.
டீக்கடைக்குப் பின்னாடியே
வீடு பார்த்து எனது குடும்பம் குடி போனது. அப்போது எங்களுடைய தாய் மாமா மதுரையில் இருந்து
ரொம்ப நாள் எங்களோடுதான் இருந்தார்.
அவர் லாரி ஓட்டுநராக
இருந்தார்.
நான் மூன்றாவது படித்து
முடித்துவிட்டு நானும் கொட்டாம்பட்டிக்குச்
சென்றுவிட்டேன்.
அனைவரும் சந்தோஷமாக
வாழ்ந்தோம். அங்குள்ள அண்டை வீட்டாருடன் நன்றாகப் பழகி வந்தோம்.
நானும் என் தங்கையும்
பொம்மைகள் வைத்து விளையாடுவோம். எங்களது வீட்டிற்குப் பக்கத்தில் புளிய மரம் இருந்தது.
அந்த மரத்தில் இருந்து
கீழே விழும் புளியம் பழத்தைச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். இப்போது நினைத்தாலும் நாக்கில் உமிழ்நீர் சுரக்கிறது.
என் தந்தை டீ.கடை வைத்திருந்ததால்
பால்,மோர்,பாலாடை,நெய் என்று வீடே கமகமக்கும்.
தோசை, பணியாரம், ரசசாதம்,
சாம்பார் சாதம் என வீட்டில் எல்லா உணவுகளிலும் நெய் மணக்கும்.
நான் 5ஆம் வகுப்பு
படிக்கும்போது எனக்கு மூக்கு குத்தி விட்டார்கள். அந்தப் புண் குணமாக கொஞ்ச நாள் ஆனது.
அதனால் அவஸ்தை அடைந்தேன்.
அதன்பின் ஒரு மாடி
வீட்டிற்குக் குடி போனோம். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்தில் இருந்து
சுற்றுலாப் பயணம் சென்றோம்.
கொடைக்கானல், வைகை
டேம் என ஒரு நாள் பயணம் சென்றோம். குளுகுளு கொடைக்கானல் சென்றோம். அங்கு மியூசியம்
ஒன்றுக்குச் சென்றோம். அதன்பின் வைகை டேம் வந்தடைந்தோம்.
அங்கு நூறு படிக்கட்டுகள்
இருந்தன. வரிசையாக மாணவ மாணவிகள் சென்று கொண்டிருந்தோம்.
அப்போது என் தோழி சர்பத்
குடிக்கலாம் என்று சொல்ல நானும் என் தோழிகளும் நின்று சர்பத் அருந்திவிட்டுத் திரும்பிப்
பார்த்தபோது எங்களுடன் வந்த சக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் எங்களைக் கவனிக்காமல்
சென்று விட்டனர். நாங்கள் பயந்து விட்டோம்.
இங்கும் அங்குமாக ஓடி
அலைந்தோம். 100 படிக்கட்டுகளில் ஏறி இறங்கினோம். இறுதியாக நிறையப் பள்ளிக்கூடங்களில்
இருந்து பேருந்துகளில் சுற்றுலாவிற்கு வந்திருந்தனர்.
நாங்கள் ஒவ்வொரு பேருந்திலும்
ஓடி ஓடித் தேடினோம். எங்களது பேருந்து கிடைக்கவில்லை.
மற்ற பேருந்துகள் இருக்கும்
இடங்களில் சென்று, “நாங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து வந்துள்ளோம். எங்களது டீமை நாங்கள்
மிஸ் பண்ணிட்டோம்” என்று கூறினோம்.
மற்ற மாவட்டங்களில்
இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் எங்கள் ஆசிரியர்களிடம் ஒரு வழியாக எங்களை ஒப்படைத்தனர்.
நாங்கள் வரிசையாக நின்று
கொண்டு இருந்தோம்.
எங்களைப் போலவே எங்கள்
ஆசிரியர்களும் எங்களைக் காணாமல் தேடி அலைந்து கோபத்துடன் இருந்தனர்.
நான்தான் முதலில் நின்றுகொண்டு
இருந்தேன்.
ஆசிரியர் ஒருவர் என்
கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விட்டார். அதில் என் காதில் இருந்த தோடு அறுந்து கீழே
விழுந்தது.
அதன்பிறகு வைகை டேம்
சுற்றிப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பினோம்.
-மீண்டும் சந்திப்போம்