2025 ஜனவரி 28
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் வர்க்கத்திற்கும், அடக்குமுறைக்கு எதிரானவராகவும், தனக்கென பெரியளவில் அமைப்புகள் இல்லையென்றாலும். தனி மனித இராணுவத்தைப் போன்றவர்.தமிழகத்தில் முஸ்லிம்களில் அரசியல் அடையாளமாகக் காயிதே மில்லத்துக்கு பின்பு அரசியலில் தமது சமூகம் இடம் பெறுவதின் மூலம்தான் தனக்கென உரிமைகள் பெறமுடியும் என்பதில் வழுவான நம்பிக்கை கொண்டவர் பழனிபாபா அவர்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் திமுக, அதிமுக,பாமக, போன்ற கட்சிகளின் வளர்ச்சிக்குத் தன்னுடைய ஆற்றல் மிகுந்த பேச்சாலும், சாமானிய மக்களும் அரசியலுக்கு வருவதின் மூலம் தான் அதிகாரம் பெற முடியும் என்ற உன்னத முழக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அதிகாரம் இல்லாத மக்களுக்கும் எடுத்துக் கூறினார். இவரின் வருகை அன்றைய காலகட்டங்களில் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சி மிகுந்த அரசியல் பயணமாகும்.
தேசிய அரசியலில் RSSயின் முஸ்லிம்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை உணர்ந்த பழனி பாபா அன்றைய காலத் தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மத்தியிலும் இவற்றை எடுத்துரைத்தார் பழனிபாபா. ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் வன்னியர் சமூக மக்கள் விழிப்படைந்தனர். தங்களுக்கான அரசியல் தலைமை ஆளுமைகளை உருவாக்கி முன்னேற்றம் பெற்றனர்.
ஆனால் முஸ்லிம் சமூகத்தில் எந்தப் பலனும் இல்லாமல்போனது. தனது சமூக மக்களிடத்தில் பழனிபாபாவிற்குப் போதுமான ஆதரவு இல்லாததும், இன்று வரை தமிழக முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுகள் கொண்ட சமூகமாகவே இருப்பதே காரணமாகும்.
முஸ்லிம்களை திமுகவும்,அதிமுகவும் வஞ்சிக்கும் வேலையில் இறங்கிய பின்பு அவற்றிற்கு மாற்றமாக பாமகவைத் துவங்கக் காரணமாக இருந்த பழனிபாபா. டாக்டர் ராமதாஸின் துரோகத்தால் அவரிடமும் விலகினார்.
முஸ்லிம்களின் முஹல்லாஹ்களை ஒன்றிணைப்பதின் மூலம் அரசியல் ஆளுமைகளை உருவாக்கலாம் என்று எண்ணிய பழனிபாபா அதற்கான வேலையைத் துவங்கி,தலித் தலைவர்களையும் ஒன்றிணைத்தார். இந்தக் காலகட்டத்தில் தான் பழனிபாபா அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்.
அன்று முதல் இன்று வரை இந்த முயற்சி முஸ்லிம் சமுகத்தில் நிறைவேற்றப் படவில்லை. அடுத்து வரும் தலைமுறையும் எவ்வித உரிமைகளும் இன்றி ஒடுக்கப்பட்டவர்களாகவே தமிழகத்தில் வாழும் நிலையிலிருந்து மாறுவதற்கு இனியாவது முஹல்லாஹ் ஜமாத்துகளை இணைப்பது பற்றி முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும். இது பழனிபாபா அவர்களின் திட்டமும் கூட இது முஸ்லிம்களின் அரசியலில் பாதையில் வெற்றியாக அமையும்.
ஒருங்கிணைந்த முஹல்லாஹ்கள் தேர்தல் நேரங்களின் கோரிக்கைகளை முன் வைத்து தீர்மானங்களை நிறைவேற்றியும், தேர்தல் காலங்களில் வாக்கு அளிப்பதின் மூலம் முஸ்லிம்கள் பல கோரிக்கைகளை இதுவரையிலும் வென்றிருக்கலாம்.இவற்றை இனியாவது முஸ்லிம் சமூகம் செய்ய முன்வரவேண்டும். இல்லையெனில் யார் என்ன செய்தாலும் முஸ்லிம் சமூகத்துக்கு பயனற்றதாகும்.