ஆயிறத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்குழந்தைகளின் பிறப்பை பெரும் துக்க நிகழ்வாகக் கருதி வந்த மக்களிடையே “பெண் குழந்தை ஒரு நற்செய்தி” எனக் திருக்குர்ஆன் எடுத்துரைத்தது. ஆண்களும், பெண்களும் ஓரே மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் எனவே, இருபாலரும் சமமானவர்கள் என பெண்களின் மாண்பை உயர்த்தும் வகையில் பல கருத்துகளை இச் சமூகத்தில் பதியவைத்து பெண் குழந்தைகள் பற்றிய கண்ணோட்டத்தைக் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹீ வஸல்லாம் அவர்கள் மாற்றி அமைத்தார்கள். பெண் சிசுக் கொலைகள் நடந்தேறிய சமூகத்தில் அதை அறவே ஒழித்து பெண்களுக்குப் பல உரிமைகளையும் வழங்கினார்கள் எம் பெருமான்(ஸல்)அவர்கள்.
இஸ்லாம் மார்க்கம் பெண்களைக் கண்ணியப் படுத்தி அவர்களுக்கு கல்வி,பொருளீட்டும் உரிமை,சொத்துரிமை, சமநீதி, மண முறிவு, மறுமண உரிமை, பெண் சிசுவைப் பாதுகாத்தல், அரசியலில் பங்கேற்க்கும் உரிமை, பெண்கள் மீது அவதூறு பரப்புவதைக் கண்டித்து தவறான செயலாகக் கொண்டு வந்தது என பல பெண்களுக்கான உரிமைகளைக் கொடுத்துள்ளது. இஸ்லாம் மார்க்கத்தை அறிவுப்பூர்வமாக அனுகியவர்கள் அதன் சிறப்பை நடைமுறைப் படுத்தி பெண்களைச் சிறப்பாக வாழவைக்கிறார்கள், வைப்பார்கள். “பெண் என்பவள் ஒரு சமூகத்தின் சிற்பி”…இவ்வுலகில் பொறுமைக்கும்,அன்புக்கும் இலக்கணமாகப் பெண்களைக் குறிப்பிடுவது ஒரு குடும்பத்தின் தூணாக இருப்பதால்தான்.
இத்தனை சிறப்புகள் இஸ்லாம் மார்க்கம் கொடுத்தும் பெண்களை அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே இஸ்லாம் மார்க்கத்தின் அறிவுரைகளை தோற்றத்திற்க்காகவே எடுத்துக் கொண்ட ஆண்களால் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பால்ய வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்குழந்தை அவளது மனதால் மனம் சொல்லொன்ன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் அவளுக்கு பயம், பதட்டம் என அவளது அறிவும் செயல்பட முடியாமல் உடல் நலனும் பாதிப்படைகிறது. “காமம் கண்களை மறைத்து கண்ணாக, மணியாக காக்க வேண்டிய பெண் குழந்தைகளை களங்கப் படுத்திவிடுகிறார்கள், காமுகர்கள்”.
ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகள் வளர்ப்பதில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும். பல பெண் குழந்தைகளுக்கு வாழ்வில் அவர்களது பால்ய வயதில், அவர்களுக்குப் “பாலியல் பலாத்காரம்” ஏதாவது ஒருவகையில் ஆண்களால் நடக்கிறது. கல்வி பயிலச் செல்லுமிடத்தில், ஓதுபள்ளி செல்லுமிடத்தில், கடைகளுக்குச் சாமான்கள் வாங்கச் செல்லும் இடத்தில், பக்கத்து வீட்டு நட்புக் குடித்தனங்கள் மூலமாக, குடும்ப உறவுகள் மூலமாகவும்,”போதைக்கு அடிமையான தந்தையாலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடக்கிறது”.
குழந்தைத் தனத்துடன், மனம் முழுவதும் மகிழ்வுடன் பட்டாம்பூச்சி போல உலாவரும் பெண்குழந்தைக்கு ஆணின் பாலியல் சீண்டலால், பலாத்காரத்தால் அந்தப் பட்டாம்பூச்சிபோல துள்ளித் திரிந்த பெண் குழந்தை அருவெறுப்பிலும், மனம் பாதிப்பிலும் அட்டை போல மனம் சுருண்டு தவி, தவித்துப் போகிறாள். தனது மறைவிடங்களைத் தொட்ட ஆணைப் பற்றி தனது பெற்றோரிடம் சொல்லலாம?...வேண்டாமா?.. தன்னை ஆண் தொடலாமா?... அம்மா,அத்தா திட்டுவாங்கள?.. அடிப்பாங்களா?.. என மனதுக்குள் திணறடிக்கும் கேள்விகளால் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு புழுங்கிப், புழுங்கி பயம், பதட்டம் என்ற குழப்பமான மனதுடன் கல்வியில் கவனமின்மை, உணவு சரிவர உட்கொள்ளாமல் சோர்வுடன் இருப்பது குதூகலத்துடன் விளையாடித் திரியாமல் மந்தமாக இருப்பது…என தன்னைத் தானே தனித் தீவாக்கிக் கொள்வாள்.இதனால், மனமும்,உடல்நலனும் வெகுவாகப் பாதிப்படையும்.
ஒரு குடும்பம் தனது அண்டை வீட்டுக் குடித்தனக்காரர்களுடன் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகி வந்தபோது, தான் அவசரமாக ஹாஸ்பிடல் செல்லும்போது அந்தக் குடும்பத்தின் தாய் தனது பெண் குழந்தையை நட்பாகப் பழகிய அண்டை வீட்டில் விட்டுச் சென்றாள். பக்கத்து நட்புக் குடித்தனத்தில் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வார்கள் என நம்பி விட்டுச் சென்ற அந்தப் பெண் குழந்தைக்கு அந்த வீட்டின் இளைஞனால் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது. குழந்தையுடன் விளையாடுகிறேன் என்ற பெயரில் தனது மடியில் குழந்தையை வைத்து மிகுந்த அத்துமீறல்களை குழந்தையின் உடலில் நடத்தியிருக்கிறான்.
அந்தக் குழந்தைக்கு மனதுள் அருவெறுப்பும், பயம்,பதட்டம் ஏற்பட்டு மனதளவில் பாதிப்பில் இருந்திருக்கிறாள் குழந்தை. அடுத்தநாளும் ஹாஸ்பிடல் போக வேண்டுமே பக்கத்து வீட்டு நட்பான வீட்டில் குழந்தையை விட அந்த தாய் குழந்தையை கூட்டிச் சென்ற போது பிட்ஸ் வந்துவிட்டது. உடனடியாக நரம்பு டாக்டரிடம் குழந்தையைக் காட்டி, பரிசோதனைகள் செய்து மருந்துகள் கொடுத்தும் நாளுக்கு நாள் குழந்தை களையிழந்து, உடல்நலம் வெகுவாகப் பாதித்தது. நரம்பு டாக்டர் மனோதத்துவ மருத்துவருக்கு பரிந்துரை செய்து, குழந்தையை அங்கு அழைத்துச் சென்று, மனோதத்துவ டாக்டர் கூழந்தையிடம் விளையாட்டாகப் பேச்சுக் கொடுத்து, குழந்தையிடம் பேப்பர்,பென்சிலைக் கொடுத்து படம் வரையச் சொன்னபோது, ஆண்கள் உடுத்தும் “கைலி” படத்தை வரைந்து அதன்மேல் பென்சிலால் கோபமாக குத்தி,குத்தி பேப்பரையே ஓட்டையாக்கி இருக்கிறாள்.
குழந்தை வரைந்ததோ ஆண்கள் உடுத்தும் கைலி, அதையும் பென்சிலின் நினியால் கோபமாகக் குத்தியிருக்கிறாள்…இதனைப் பார்த்து ஓரளவு புரிந்துக் கொண்ட மனோதத்துவ மருத்துவர்…பக்குவமாக குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து அவளிடம் நடந்தவைகளைச் சொல்ல வைத்து, அதற்கேற்று கவுன்சிலிங்க், மருந்துகள், பெற்றோருக்கும் கவுன்சிலிங் என தொடர் சிகிச்சையால் குழந்தையை மீட்டெடுக்க முடிந்தது. இதில் பெற்றோரின் பங்கு பெரிய பங்கு. மிக நேர்த்தியாக குழந்தையை மனம், உடல் இரண்டையும் ஆரோக்கியமாக்கினார்கள்.
ஒரு பெண் குழந்தைக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை அவளது வாழ்க்கை முழுவதும் மனதளவில், உடலளவில் மிகுந்த பாதிப்பை சந்திக்கும், மிகக் கொடுமையான விஷயம். பாதிக்கப்பட்ட பெண் குழந்தையை மீட்டுருவாக்கம் செய்வதில் தாயின் பங்கு மிக, மிக அலாதியானது. பொறுமை, நிதானத்துடன் அணுகி குழந்தையைப் பரிவுடன், பக்குவத்துடன் நடத்தி சமூகத்தின் தைரியமான பெண்ணாகக் கொண்டு வர வேண்டும். தந்தை, அண்ணன், பெரியத்தா,சச்சா,மாமு,மச்சான்,ராதாப்பா,நன்னா,பக்கத்து வீட்டு ஆண்கள், ஆசிரியர்கள், ஹஜ்ரத்மார்கள் என எந்த ஆண்மகனுடனும் எல்லையுடன் நடந்து கொள்ளப் பழக்க வேண்டும்.பெண் குழந்தைகளை அன்புடன் கொஞ்சுவது, வாஞ்சையுடன் அணைத்துக் கொள்வது போன்ற செயல்களை அறவே அனுமதிக்கக் கூடாது. பெண் குழந்தைகளுக்கு சிறு பிராயத்திலிருந்தே “பாலியல் புரிந்துணர்வைக் கற்றுக் கொடுக்க வேண்டும்”. ஆண்களிடம் வரையறையுடன் நடப்பது என்ற புரிதலை பெண் குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பது ஒரு தாயின் கண்ணியமிக்க கடமைகளில் முதன்மையானது.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்குழந்தை அதன் பருவ வயது வந்து, திருமணம் செய்து வைத்த பின்தான் அவளின் மன உணர்வுகளால் குடும்ப வாழ்வியலில் மகிழ்ச்சி, கணவருடன் அன்புடன் இருத்தல் இருக்காது. அதிகமான பெண் குழந்தைகளின் வாழ்வு அவள் பருவ வயது வந்து திருமணமான பின் தனக்கு நடந்த வெறுக்கத்தக்க செயல் மனம் முழுவதும் மண்டிக் கிடக்க கணவருடன் இணைந்து வாழ்வதில் சிரமம் ஏற்பட்டு, மனமுறிவுவரை போய்விடுகிறது.
பெண் குழந்தை தனது பால்யத்தில் துள்ளித் திரிந்து, கல்வி, இறை வணக்கம், பொருளீட்டுவதற்க்கான துறை எனத் தேர்வு செய்து தனது பருவ வயதில் பொறுப்புள்ள பெண்ணாக, அவளால் ஒரு குடும்பம் உருவாகி பூத்துக் குலுங்க வேண்டும். பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம். அவர்களை கண்ணியமாக வளர்ப்போம். சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை நிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.