2025 பிப் 16
காமராஜர்,MGR, கலைஞர் மற்றும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தினத்தையும் ஏற்படுத்தி பெரும் முக்கியத்துவம் அளித்த செல்வி ஜெயலலிதா போன்ற சிறந்த மாநில ஆட்சியாளர்களின் தலைமைத்துவத்தால் இந்தியாவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் ஆகும்.
அவற்றைச் சீர் குழைத்திடும் விதமாகத் தமிழக வரலாற்றில் கடந்த காலங்களில் இல்லாத குற்றச் சம்பவங்கள் தற்போது கல்விக்கூடங்களில் நிகழ்ந்து வருகிறது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழ்நாட்டில் பரவலாக அதிகரிப்பதும். நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் ஓர் அரசின் முதன்மையான கடமையாகும். அவைதான் இன்றைக்கு இந்தக் கொடூரச் சம்பவங்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.
இதற்கிடையில், சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் புகார், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம்,கள்ளக்குறிச்சி மாணவி மரணம்,கன்னியாகுமரி மருத்துவ மாணவி மரணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி பயிற்சியில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் உள்ளிட்ட சம்பவங்கள் மிகப்பெரும் அதிர்ச்சியைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்களால் பெற்றோர்கள் மத்தியில் மாணவிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடுகளுடன் இருப்பது அச்சத்தைத் தருகிறது. காவல்துறையின் விசாரணைகளும்,நடவடிக்கைகளும் திருப்திகரமானதாக இல்லை என்பதினால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இன்றைக்கு அரசியல் விமர்சனத்தையும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சந்தித்து வருகின்றன.
குறிப்பாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தமிழகத்தில் இதுவரை நடந்திடாத அவமானச் சம்பவம் ஆகும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களுக்குள்ளான ஆசிரியர்களின் பட்டியல்களைப் பள்ளிக்கல்வித் துறையால் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது என்றால் இவ்வளவு காலம் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மீது சரியான நடவடிக்கைகள் அரசிடம் இல்லாதது தெளிவாகிறது.
தொலைபேசி புகார் எண்,புகார் பெட்டி மூலம் தகவல் தெரிவிப்பது போன்ற முன் எச்சரிக்கை பாதுகாப்பு அம்சங்கள் மாணவிகளுக்கு வழங்கியிருப்பதும், அதன் செயல்பாடுகள் குறித்துச் சரிவர ஆய்வுகளும் பள்ளிக்கல்வித்துறைக்குக் கடந்தகாலங்களில் இல்லையெனலாம்.
ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் பணிநீக்கம், கல்விச் சான்று ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் போதுமான கருதிவிடமுடியாது. இவைகள் குறைந்தபட்ச நடவடிக்கை முயற்சியாகும்.
மாணவிகள் பயிலும் பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புக்கான ஆண் ஆசிரியர்களைத் தமிழ்நாடு அரசும்,பள்ளிக்கல்வித் துறையும் பணிநியமனம் செய்வதைக் கைவிடவேண்டும்.தேவையான பணிகளுக்கு மட்டும் ஆண் ஆசிரியர்களையும், பெண் ஆசிரியர்களே மகளிர் கல்விக் கூடங்களில் பணி அமர்த்துவதும், மாணவிகளின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பெற்றோர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.