2025 பிப் 19
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இரு நாடுகளுக்கும் உரிய முக்கிய விஷயங்களைக் கலந்து ஆலோசனை செய்தனர்.
உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததை டொனால்டு டிரம்ப் குறிப்பிடும் பொழுது நம்முடைய எதிரிகளை விட நம்முடைய நண்பர்கள் ஆபத்தானவர்கள் என்று மோடி அருகில் வைத்துக் கொண்டே தெரிவித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில்கள் இன்றி மழுப்பியது அதற்கான பதில்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கிடையில் அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக இருப்பவர்களை கைகளில் விலங்கிட்டு இந்தியாவிற்கு அனுப்பி வைப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை வேறு நாடுகள் செய்திருந்தால் உடனே இந்தியா முழுவதும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் இவர்கள் மனிதநேயம் அற்றவர்கள், மனித உரிமைகளை மீறக் கூடியவர்கள் என்றெல்லாம் தவறான கருத்துக்களையும் மதத்தையும் இணைத்து நாடு முழுவதும் அவப்பெயரை உருவாக்கியிருப்பார்கள். ஆனால் இவற்றைச் செய்தது அமெரிக்கா. அங்கு ஒன்றும் இவர்களின் பாய்ச்சல் பழிக்காத நிலையில் மோடி அரசும்,பாஜகவினரும் மௌனம் சாதிக்கின்றனர்.
இவற்றைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணிப் பத்திரிகையான விகடன். மோடியின் கையில் விலங்கு போடப்பட்டது போன்று கார்டூன் படம் வெளியிட்டு மோடியின் அமெரிக்கப் பயணத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளையும் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியது. இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜகவினர். ஒன்றிய அரசின் தொலைத்தொடர்பு ஆணையத்தின் மூலம் விகடனின் இணையதளத்தை முடக்கியதோடு. நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தியுள்ளனர். இவற்றை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிய மோடி அரசின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளனர். குறிப்பாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இதற்கான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.