2025 மார்ச் 31
அன்றைய கிராம மக்களிடத்தில் ஒரு வழக்கம் இருக்கும்.தாம் பயணிக்கும் பேருந்தில் இடம் பிடிப்பதற்காகத் தங்களுடைய கை குட்டை அல்லது கையில் கிடைக்கக்கூடிய பொருட்களைப் பேருந்தின் சீட்டில் வைத்து இருக்கையைப் பிடிப்பார்கள். பேருந்து புறப்படும் பொழுது அந்த இருக்கையில் தனக்கு அல்லது தன்னை சார்ந்தவர்க்குத் தாம் முன்கூட்டி பிடித்த இடத்தில் அமர வைப்பார்கள்.
இதே போன்ற ஒரு நிலையைத் தான் தற்பொழுது 800க்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் செய்வதற்காகப் புதிய கட்டிடத்தை வடிவமைத்து, இன்னும் பதவிக்கு வராத உறுப்பினர்களுக்கு RSS மற்றும் மோடி,அமித்ஷாவின் மறைமுகத் திட்டத்தின் படி இப்போதே இருக்கையைப் போட்டுவைத்துள்ளார்கள். இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தினை பாஜக ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கிறது.
தமிழ்நாடு,கேரளா, கர்நாடகம் போன்ற தென் மாநிலங்கள் கடந்த காலங்களில் அப்போதைய பதவியில் இருந்த ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களைச் சிறந்த முறையில் அமல்படுத்தி வெற்றிகண்டுள்ளது. இதே திட்டத்தை வட மாநில அரசுகளும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத பட்சத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தவறியது.
இது ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக தொடர்ச்சியாக ஆட்சியில் அமர இந்தச் சந்தர்ப்பம் மிகுந்த பயன்களைத் தரும் எனலாம். இதன் அடிப்படையில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை வடமாநிலங்களுக்கு அதிகரிப்பதும்,
பாஜகவிற்குத் தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் பூஜ்யமும்,மற்ற மாநிலங்களில் உறுப்பினர் ஒற்றை இலக்குடன் உள்ளது. இதனால் மோடி அரசு தந்திரமாக நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தென்மாநிலங்களில் குறைக்கும் ஆடாவடி தனமான செயலாகும்.
வடமாநிலங்களுக்கும்,தென்மாநிலங்களுக்கும் ஏற்கனவே நிதிப் பகிர்வில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய மோடி அரசின் செயல் தென்னிந்திய மக்களையே வெறுப்படையச் செய்துள்ளது. என்றைக்கும் பகுத்தறிவைப் போற்றும் மாநிலமும், இவற்றை மீண்டும் மீண்டும் நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழ்நாடும்,தமிழக மக்களும் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வட இந்தியர்கள் சர்வாதிகார ஆட்சிக்குத் தென்னிந்திய உள்நாட்டு மக்களை அடிமைப்படுத்திட ஒன்றிய அரசின் இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்கும் வேலையைத் துவங்கியது தமிழ்நாடு தான்.
தமிழகத்துக்கான நடப்பு நிதிநிலையில் பணத்தின் ₹ குறியீட்டை மாற்றி முதலில் ரூ வில் போட்டதும் ஆட்டம் கண்ட ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களை சென்னைக்கு அழைத்துக்கூட்டத்தை நடத்தி துணிச்சலுடன் இரண்டாவதாக அசத்தியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.