2025 ஏப்ரல் 07
வக்பு திருத்த சட்டத்தை பாஜக மோடி அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்ததொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்றுவிட்டது.
இனி வக்பு சொத்துக்களை பாஜகவினரும், சங்பரிவார கும்பல்களும் திட்டமிட்டபடி அபகரிக்கும் முயற்சியில் இறங்குவார்கள். முஸ்லிம்களின் பாபர் மசூதி இடத்தையே நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பின் மூலம் அபகரித்துக்கொண்ட சங்பரிவார்கள், இனி வக்பு திருத்த சட்டத்தின் மூலம் இவர்களின் வேலையை இன்னும் இலகுவாக்கியுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் மூலம் சட்டங்களை நிறைவேற்றியும்,உத்தரவுகள் என்ற பெயரில் பாஜக ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்டுவரும் புல்டோசர் தாக்குதல்கள், உச்ச நீதிமன்றமே கண்டித்தும் நின்றபாடில்லை. இப்போது மகாராஷ்டிரா மாநிலத்திலும் புல்டோசர் கரங்கள் நீள ஆரம்பித்திருக்கின்றன.
ஔரங்கசீப் கல்லறை தொடர்பாக நாக்பூரில் நடந்த கலவர வழக்கில், சிறுபான்மை ஜனநாயகக் கட்சியின் தலைவர் கான் சிக்கினார். இதையடுத்து, அவருடைய வீட்டை இடித்துத் தள்ளியது மாநகராட்சி. மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்து, புல்டோசர் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை பெற்றும் பயனில்லை. அதற்குள்ளாக இடித்து நொறுக்கிவிட்டனர்
இந்தியாவில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பாபர் மசூதி விவகாரத்தில் துவங்கி முத்தலாக் தடை சட்டம்,பொதுசிவில் சட்டம்,வக்பு திருத்த சட்டம் வரை நிறைவேற்றி முஸ்லிம்களுக்கு எதிரான வெருப்பு அரசியலையும் வெளிப்படையாகவே பாஜக மோடி அரசு செய்துவருகிறது.
எதிர்க்கட்சிகளும்,முஸ்லிம்களும், பாஜகவிற்கு எதிரான குரல்களை கொடுத்து வந்தாலும் அவற்றை கொஞ்சமும் செவி சாய்க்காத முறையில் ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது. அவர்களின் எண்ணங்கள் எதுவோ அவற்றை முழுமையாக நிறைவேற்றுகின்றார்கள். இதற்கு முஸ்லிம்கள் எதிர்வினை ஆற்றாத வரை இவர்களின் அச்சுறுத்தல்கள் முற்றுப்பெறாது. வருங்கால முஸ்லிம் தலைமுறைகளை பாதுகாப்பது நமக்கு அவசியமாகிறது.இவற்றை செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு நாம் செய்யும் வரலாற்றுப் பிழையாகிவிடும்