இரட்டைக் கிளவி
இடி. மின்னல் , மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார்.அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம் மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும் என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டு குளிக்கச் சென்றார்.
குளித்து முடித்து... வெளியில் வரும் போது. சுட சுட டீ அவரை வரவேற்றது...
உன் தூக்கம் கெட்டு விடக் கூடாதென்பதற்காக தானே! பொறுமையாக நடந்தேன்.பிறகு எப்படி ? டீ யென்றுக் கண்ணால் கேட்டார்.
அவளின் சிரிப்பே... அதிகாலை சூரியனுக்கு வழிவிட்டது போல்... கூடுதல் வெளிச்சமானது அதிகாலை.
4 மணி பஸ்ஸில் வரும் வெற்றிலை சுமைகளை இறக்கி சந்தைக்கு சென்று சலாம் பாய் கடையில் போடுவது ஹனிஃபின் அன்றாட வேலை.
இரவெல்லாம் ஓய்வில்லாமல் பணி செய்ததால் மேகத்திடம் ஓய்வு கேட்டு உறங்கச் சென்றது மழை.அதிகாலை வேலைக்குச் செல்லும் ஹனிஃப் மதியம் தான் வீடு திரும்புவார்.பேருந்து வந்துவிடுமென்பதற்காக அவசர, அவசரமாக வேலைக்குக் கிளம்பிச் சென்றார்.
தன் கனவனுக்காகச் சமைக்கத் தொடங்கினாள்.
வழக்கம் போல் அன்பு டீக் கடையில் வந்து கொடு. பிறகு வாங்கிக்கொள்கிறேனென்று ... வேலைக்குச் சென்றுவிட்டார்.
காலை நேரமென்பதால் பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் குறைவாக தென்பட்டது.
தன் நண்பர்களுடன் பஸ்ஸுக்காக காத்திருந்தார்.
பஸ்ஸில் வந்த வெற்றிலை சமைகளை சலாம் பாயிடம் கொடுத்துவிட்டு ... 6 மணி பஸ்ஸில் அண்ணாச்சிக்கு வந்த பார்சல்களை எடுத்து அவரிடம் கொடுக்கும்போது மணி 7யை தாண்டியது வயிறு பசிப் பாட்டுப் பாடியது.
அன்பு டீ கடைக்குச் சென்று கை, கால் கழுகிகிட்டு மனைவி கொடுத்துச் சென்ற சாப்பாட்டு கேரியரை... எடுத்துப் பிரித்தார்.
“உன் வீட்டுச் சாப்பாட்டைத் தினந்தோறும் கொண்டு வந்து என் கடையில் சாப்பிடுகிறாய்! என்ன ஆள் யா நீயென்று கேளிச் செய்தார் அன்பு”.
“என் மனைவி கைப் பக்குவம் உங்களிடம் இல்லை என்றார்”.. மனைவி சமைத்த உணவை வாயில் வைத்துக் கொண்டு...
"உன் கூட வேலை செய்த முனிர் இறந்தானே. அவன் பொண்டாட்டி பிள்ளைங்களை பார்த்தியா?"
"ம் ம் ... போன வாரம் அந்தத் தெருவில் சின்ன வேலை இருந்தது...அப்படியே அவங்களையும் போய் பார்த்து வந்தேன். மகன், மருமகளுடன் சந்தோஷமாக இருக்காங்க....என்று கை கழுகி கடையை விட்டு வெளியேறினார்."
பாதியில் விட்டுப்போன வேலைகளை முடித்தார்...
கனவனுக்காகச் சமையல் செய்து விட்டு மழைக்குக் காத்திருக்கும் பூமி போல் காத்திருந்தாள் ஹனிஃபின் மனைவி.
தன் அனைத்து வேலைகளை முடித்து விட்டு மதியம் வீட்டுக்குத் திரும்பினார்.
மகிழ்ச்சிப் பொங்க வரவேற்றாள். எப்போதும் இருவரும் ஒரே தட்டில் சாப்பிடும் பழக்கமென்பதால் ... இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டு முடித்தார்கள்...
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் இருக்குமல்லவா?... வெற்றிலையை மடித்து மனைவி கொடுத்தாள். ஹனிஃபும் அதைச் சாப்பிட்டுக் கொண்டு மனைவியின் மடியில் ஓய்வெடுத்தார்...
பிரஷருக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரிகளை இரண்டு வாயில் போட்டு விழுங்கினாள்.
பட்டணத்தில் வேலை செய்யும் தன் மகனுக்கு வரன் வந்துள்ளதை மனைவி பேச ஆரம்பித்தாள். உங்களுக்கு அந்த வீடு பிடித்திருக்கா?
“நல்ல இடமென்றால்! .. அவனிடமும் ஒரு வார்த்தைக் கேட்டு.. இந்த இடத்தை முடித்துவிடுவோம்”.
பெண் வீட்டைப் பற்றி முழுவதும் கேட்டறிந்து, மகனிடம் விருப்பத்தைக் கேட்டாள்.
“உங்களுக்குப் பிடித்திருந்தால் சரித்தானென்றான்’ மகன்.
இருவீட்டாரும் திருமணத்திற்கு நாள் குறித்து ... பத்திரிக்கையடித்தார்கள்....
கணவன், மனைவி இருவரும்... கடிகாரத்தின் முட்கள் போல் திருமணத்திற்கான வேலைகளைச் செய்து வந்தார்கள்.....
பத்திரிக்கை கொடுக்க வெளியூர் சென்று விட்டு வந்து வீட்டில் நுழையும் போது..அப்படியே... மயங்கி விழுந்தாள்...
பதறிப்போனார்..... ஹனிஃப்.
அருகிலிருக்கும் ... மருத்துவமனைக்குச் சென்று டாக்டரை பார்த்த போது ....
"பிரஷர் அதிகமாகிடுச்சி... நான் எழுதிக் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டு வரீங்களா?"
"கல்யாண பிஸியில் மாத்திரைகள் எடுக்கவில்லை அதான்."
"நீங்கள் மருத்துகளை எடுக்காவிட்டால் ... உங்கள் உயிருக்கு ஆபத்தென்று எச்சரிக்கை செய்தார் மருத்துவர்".
மனைவியின் உடல் நிலை நினைத்துக் கண்கலங்கி அவளை தன் மடியில் படுக்க வைத்தார்.
திருமணத்திற்கு நாள் நெருங்க மகனும் வந்தான்.....
குறிப்பிட்ட நாளில் திருமணம் நடத்தேரியது.
நினைத்தது போல் மருமகளும் அமைந்து போனாள்....
மனைவி, மகன், மருமகளென்று... சலனமில்லாமல் வாழ்க்கை பயணித்துக் கொண்டிருந்தது...
வழக்கம் போல் வேலைக்குச் சென்று ... அன்றாட வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார். போன் சப்தமிட்டு அழைத்தது.... வேலையின் மீதுள்ள கவனத்தில். அதற்கு பதில் சொல்ல இயலாமல்... போனது.
மறுபடியும் தொடர்ந்து... சம்பதமிட.... அதை எடுத்து காதில் வைத்து ஹலோ என்றார்.....
மாமி மயங்கி விழுந்துடாங்க... டாக்டர்கிட்ட கொண்டு போனோம். பிரஷர் அதிகமாகி மாமி இறந்து பத்து நிமிஷம் ஆகிடுச்சியென்று சொன்னதாக... மருமகள் கதறியழுதாள்....
நிற்க வைத்து மின்சாரம் பாய்ந்தது போல் அவரை நிலைதடுமாறச் செய்தது மனைவியின் மரணச் செய்தி.
எழுந்து நடக்க முயன்ற போது எழ முடியாமல் தடுமாறிப் போனார். எழுத்து நடக்கத் தெம்பு தொலைந்தது போல் உணர்ந்தார்.
நடைக்குச்சித் துணைவுடன் தடுமாறி நடக்கலானார்.. பக்கத்து வீட்டுப் பையன் தன் பைக்கில் கொண்டு செல்ல அருகில் வந்தான்..பைக்கில் அமர்ந்து... வீட்டிற்குச் சென்றார்.
வெளியூரில் வேலை செய்யும் மகனுக்கும் செய்திகள் பகிரப்பட்டிருந்தது.
மனைவியின் உடலைப் பார்த்து கதறியழுதார். தன் உடலின் ஒரு பகுதி மரணத்தினால் பிரித்து கீழே கிடப்பது போல் உணர்ந்தார்... செய்வதறியாமல் செல்லரித்த கட்டைப் போல் சாய்ந்தார்....
அவருக்குத் தண்ணீர் கொடுத்து ஆறுதல் சொன்னது சொந்தப் பந்தங்கள்.
நல்லடக்கம் செய்யப்பட்டது. சில சம்பிரதாய வழிமுறைகள் முடிந்தப் பின் சொந்தப் பந்தங்கள் களைந்து சென்றனர்.
நாட்கள், வாரங்கள் கடந்தன...
மனைவி தனியாக இருப்பதால் சொந்த ஊரில் வேலைக்குச் சென்றான் மகன். ஆனால், மனைவி இறந்த துக்கம் அட்டைப் போல் அவரை சுற்றி வலம் வந்தது.
மாமனாருக்குத் தேவையான அனைத்தையும் மருமகள் செய்தாலும்....மனைவியிடம் உரிமையாகக் கேட்பது போன்று மருமகளிடம் கேட்க முடியவில்லை...
அதிகாலை காலை வேலைக்குச் சென்று விடுவதும், அவரது மனைவி அன்பு கடையில் காலை சாப்பாட்டைக் கொண்டு வருவதும் வழக்கமான ஒன்று. அவை அனைத்தும் தலைகீழானது.
மகன் வேலைக்குச் செல்வதால் மருமகள் மட்டும் தனியாக வீட்டில் இருக்கிறாள். வேலை நேரம் முடிந்து வீட்டில் இருக்கவும் மனம் அனுமதிக் கொடுக்கவில்லை.
காற்றின் திசைக் கேற்ப ஆடும் பிடிமானமில்லாத இலையாக ஆடிப் போனார்.
சின்னத் சின்னத் தேவைகளுக்கும் மருமகளிடம் கேட்டுப் பெறுதலுக்கும், தன் தேவைகளை முன்கூட்டி அறிந்து. பணிவிடை செய்யும் மனைவிக்கும் வேறுபாட்டை உணர்துக் கொண்டார்.
வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டு ... இரண்டு கைகளைத் தலைக்குத் தலகாணிக்குப் பதில் முட்டுக் கொடுத்து ... விண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தார். நிலவு இவரை பார்த்துக் கொண்டிருந்தது.
அப்போது...
முனீர் மறைந்த பின்பு ...அவனின் மனைவி தன் மருமகளுடன் அமைதியாக வசித்து வருகிறாள். கணவன் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் பெண்ணால் இங்கு வாழ்ந்து விட முடிகிறது.
ஆனால்,
மனைவி இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது என்பது... கடினமான ஒன்றாக எண்ணினார்.
தமிழில் இரட்டைச் சொல்லாகவே வரும் பிரித்தால் பொருள் தராத
இரட்டைக் கிளவிப் போன்றுத் தான் ஆணுக்கு மனைவி. மனைவி இருக்கும் வரை கணவனின் வாழ்க்கை பொருள் கொடுக்கும். மனைவி இல்லாவிட்டால் ஆணின் வாழ்க்கை பொருள் கொடுக்காதென்பது அவரது மனதுக்குள்...
எண்ணவோட்டங்களாக ஓடிக்கொண்டிருந்தது.
பெண் துணையே ஆணின் சந்தோஷங்களின் ஆணிவேர்..வேரில்லாத மரங்கள் நீண்ட நாள் வாழ்வது கடினமோ! அதே போல்.. பெண் துணையில்லாமல்..ஆண் இவ்வுலகில் வாழ்வது கடினமானதென்று இவரைப் போன்று தனியாக இருக்கும் நிலாவுடன் பேசிச் கொண்டிருந்தார்...
A.H. யாசிர் அரபாத் ஹசனி.
லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு:971-556258851