இஸ்லாமும், நாட்டுப் பற்றும்..
ஜனநாயகத்தை தன் உயிர் மூச்சாகச் சுவாசித்துக்கொண்டு,உலகளவில் உயர்ந்து நிற்கின்றது இந்தியா..பேச்சுரிமை எழுத்துரிமை என்று தனிமனித சுதந்திரத்திற்கு வழிக் கொடுத்து மக்களின் குரலை கேட்டு ரசிக்கிறது இந்தியா.
தாய் நாட்டைப் பிரியம் கொள்ளுதல் என்பது மனிதனின் இயற்கையான ஒன்று.தன் தாய் நாட்டை மறந்து எந்த ஒரு மனிதனும் இருக்க இயலாது என்பதே உண்மை. தாய் நாட்டின் பிரியம், உலகில் எந்த நாட்டின் நாம் வசித்தலும் அதுவாக வெளிப்படும்.
தன் தாய் நாட்டின் மீது பற்று வைப்பது, அதை நேசிப்பது ஒவ்வொரு குடிமகனின் மீதும் கட்டாயக் கடமையாகும்.இதை இஸ்லாமும் வலியுறுத்துகிறது. தாய் நாட்டின் மீது பிரியம் கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்விலும்,நபித் தோழர்களின் வாழ்விலும் நமக்கு முன்னுதாரணம் இருக்கின்றது.
நபிகளார் நாட்டின் மீது கொண்ட பிரியம்..
.உலகிற்கு அருட்கொடையாக அனுப்பியதாக குர்ஆனில் கூறப்பட்ட நபி (ஸல் ) அவர்கள், தான் பிறந்து, வளர்ந்த மக்காவைப் பெரிதும் நேசித்தார்கள். மக்காவாசிகளின் கொடுமையின் காரணமாக, மக்காவை விட்டு மதினா இடம்பெயர இறைவன் ஆணையிடுகிறான். இறைவனின் ஆணையின் காரணமாக மக்காவை விட்டு மதினா இடம்பெயர முடிவு செய்த நபி (ஸல்) அவர்களுக்கு, தன் தாய் ஊரை விட்டுச் செல்கின்றோமே என்ற ஏக்கம் இருந்தது..
மக்காவை விட்டு மதீனா தேசத்திற்குச் செல்லும்போது, மக்காவை நோக்கி திரும்பிப் பார்த்தவராக “நீ எவ்வளவு மனமான தேசமாக இருக்கிறாய். நீ தான் எனக்கு மிக விருப்பமான (பூமியாக) இருக்கிறாய். நிச்சயமாக எனது சமூகத்தார் என்னை வெளியேற்றி இருக்கா விட்டால் நீ அல்லாத ஒரு பூமியில் நான் வசித்திருக்க மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி)
நபித் தோழர்கள் கொண்ட பிரியம்
நபி (ஸல் ) அவர்களின் தோழர்களும் பிறந்து வளர்ந்த நாட்டைப் பிரியம் கொண்டவர்களாக இருந்தார்கள். நபியைத் பின்பற்றி மக்காவை விட்டு மதீனா சென்ற நபித் தோழர்கள் கூட, தம் தாய் நாட்டைப் பிரிந்த கவலையில் கவிதை பாடியிருக்கிறார்கள். மீண்டும் தம் தாய் நாட்டை மிதிக்க வாய்ப்புகள் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறார்கள்.
.
இமாம்கள் தான் நாட்டின் மீது கொண்ட பிரியம்..
இஸ்லாம் குர்ஆன் மற்றும் நபி மொழியை அடிப்படையாகக் கொண்டது.குர்ஆன் என்பது இறைவனே நபி (ஸல்) அவர்களுக்கு இறைதூது மூலம் இறக்கிவைத்தான்.நபி மொழி என்பது நபி (ஸல்) அவர்கள் செய்தது ,கூறியது , அங்கிகாரம் கொடுத்தது.
தற்போது நம் கையில் இருக்கும் நபி மொழி புத்தகங்கள், நபி (ஸல் ) அவர்களைப் பின்பற்றிய நபி தோழர்கள் மூலம், நபி மொழியைச் சேகரித்து அப்படியே அதனை பதிவிறக்கம் செய்திருப்பது. இதனைக் கோர்வை செய்தவர்களை இமாம்கள் (முன்மாதிரி)என்று அழைப்பது வழக்கம்.
அந்த இமாம்கள், தாங்கள் இயற்பெயரைப் பயன்படுத்தாமல், தாங்கள் நாட்டின் பெயரையே அடைமொழியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.அந்த பெயரைக் கொண்டுதான் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார்கள் .
இஸ்லாமிய அறிஞர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் புத்தகங்களில் முதலானவை புஹாரி என்ற நபி மொழி புத்தகம். இதனைக் கோர்வை செய்தவர் இமாம் புஹாரி(`ரஹ் ) இவர்களின் இயற்பெயர் முஹம்மது பின் இஸ்மாயீல். இவர்கள், புஹாரா என்ற ஊரில் பிறந்தார்கள். தான் தாய் நாட்டின் மீது பிரியத்தால், அந்த ஊரை தன் பெயருடன் இணைத்து புஹாரி என்றழைப்பதை பிரியப்பட்டார்கள். அந்த பெயரைக் கொண்டே அறியப்படுகிறார்கள்.
அதேபோல், திர்மிதீ என்ற ஹதீஸ் புத்தகத்தை கோர்வை செய்தவர்கள் திர்மிதீ (ரஹ்). இவர்களின் இயற்பெயர் அபு ஈசா. ஆனால் இவர்கள் திர்மித் என்ற இடத்தில் பிறந்த காரணத்தால் திர்மிதீ என்பதை தனது பெயருடன் இணைத்துக் கொண்டார்கள். இவர்களும் இதைப் பெயரைக்கொண்டு இன்றுவரை அழைக்கப்படுகிறார்கள்.
இப்படி, பல இமாம்கள் தன் தாய் நாடு, தாய் ஊரின் மீது பிரித்தால் அந்த ஊர்ப் பெயரையே தங்களின் பெயருடன் இணைத்துக் கொண்டார்கள்.
கண்ணியமிகு காயிதே மில்லத்தின் தேசப் பற்று :
கண்ணியமிகு காயிதே மில்லத் ஹஜ் யாத்திரையாக மக்கா நகரம் சென்ற சமயம், உடல் நிலை பாதிக்கப்பட்டார்கள் . பாகிஸ்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அருகில் இருப்பவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.அதனை மறுத்த காயிதே மில்லத் அவர்கள், இந்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பிடிவாதம் செய்தார்கள். பின்பு இந்திய மருத்துவர் மூலம் இந்தியத் தூதரின் வீட்டில் சிகிச்சை கொடுக்கப்பட்டது .
பிறகு காயிதே மில்லத் தன் பிடிவாதத்திற்கான காரணத்தை விளக்கிச் சொன்னார். “நோயின் கடுமையினால் நான் இறந்துவிடவும் கூடும் என நினைத்தேன். நான் இறந்தால் இந்திய மண்ணில்தான் இறக்க வேண்டும் என விரும்பினேன். அந்நிய நாடுகளில் இருக்கும் இந்தியத் தூதர் அலுவலகம், தூதர் வீடு இவை இந்திய மண்ணிற்குச் சமம். இது சர்வதேச மரபொழுக்கம். எனவே இந்திய இந்தியத் தூதர் வீட்டில் சிகிச்சை பெறச் சம்மதித்தேன். இறந்திருந்தால் இந்திய மண்ணில்தான் இறந்தேன் என்ற நிம்மதியோடு இறந்திருப்பேன் அல்லவா?” இந்திய மண் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தினார்கள் .
இந்தியாவில் பிறந்து வளர்ந்த நாம், எந்தச் சமுகத்தை சார்ந்து இருந்தாலும், உலகின் எந்தத் திசையில் இருந்தாலும் இந்தியர்கள்தான். இந்தியாவில் பிறந்தவர்கள், இந்திய மண் மீது பிரியம் கொள்ளுதல் கூட ஒரு வகையில் நபி வழித்தான்.
இந்தியாவின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக, மதப் பெயரால் சாதிப் பெயரால் இந்தியாவை துண்டாமல் ஒற்றுமையாய் வாழ்வது, ஒவ்வொரு இந்தியன் மீதும் கட்டாயக் கடமை. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
A.H.யாசிர் அரபாத் ஹசனி.
லால்பேட்டை .
தொடர்புக்கு :971556258851