*காவலர் நினைவேந்தல் நாள்*
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் நினைவேந்தல் நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாள் இந்தியாவின் ஒன்றிய மற்றும் அனைத்து மாநிலக் காவல்துறையில் தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
இது, 1959ல் இந்நாளில் சீனாவுடனான போரில், தங்கள் உயிரை ஈகிய பத்துக் காவலர்களின் தியாகத்தை நினைவுகூரும் நாள்.
*அக்ஸாய் சின் வெப்ப நீரூற்றுகள் - ஹாட் ஸ்பிரிங்ஸ்*
அக்டோபர் 20, 1959 அன்று இந்திய-திபெத் (இந்திய-சீன) எல்லையில், வடகிழக்கு லடாக் பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 15,000 முதல் 16,000 அடி உயரமுள்ள இடத்தில் வெப்ப நீரூற்றுகள் - ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளன. இவை அக்ஸாய் சின் வெப்ப நீரூற்றுகள் என அழைக்கப்படுகின்றன. இந்த இடம் இந்தியக் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்விடத்தில் எல்லைப் பாதுகாப்புக்காக, சீனப் படைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF - Central Reserve Police Force) மற்றும் பிற காவல்படைகள் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது.
*தியாகிகள் நாளின் வரலாறு*
அக்டோபர் 20, 1959 அன்று அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் எனும் அப்பகுதியில் மூன்று கண்காணிப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து, லானாக் லா எனும் பகுதி வரை சென்று கண்காணித்துவிட்டு, மீண்டும் அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிக்குத் திரும்புவது அம்மூன்று படைகளின் பணியாக அளிக்கப்பட்டது. அன்று பிற்பகலில் அம்மூன்று குழுக்களில் 2 குழுக்கள் அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிக்குத் திரும்பின. இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு போர்ட்டர் அடங்கிய மூன்றாவது குழு அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிக்குத் திரும்பவில்லை.
மறுநாள் அதிகாலையில், காணாமற்போன அம்மூன்று பேரைத் தேடுவதற்காக, அம்முகாமில் இருந்த அனைத்து வீரர்களும் ஒன்று திரட்டப்பட்டனர்.
அந்த மொத்தக் குழுவும் டிஎஸ்பி/டிசிஐஓ - DSP/DCIO கரம்சிங் தலைமையின் கீழ் இயங்கியது.
நண்பகலில், சீன ராணுவ வீரர்கள் டிஎஸ்பி கரம்சிங் குழுவினர் மீது ஒரு குன்றிலிருந்து துப்பாக்கியாலும், கையெறி குண்டுகளாலும் தாக்கினர். சுற்றி மறைவிடம் போன்ற பாதுகாப்பு இல்லாததால் கரம்சிங் குழுவிலிருந்த பத்து வீரர்கள் வீரமரணம் அடைந்ததுடன், ஏழு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த ஏழு இந்திய வீரர்களும், சீன வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டனர்.
சம்பவம் நடந்த மூன்று வாரங்களுக்குப் பின், நவம்பர் 13, 1959 அன்று மரணமடைந்த பத்து வீரர்களின் உடல்கள் சீனர்களால் ஒப்படைக்கப்பட்டன. இந்த வீரர்களின் உடல்கள், அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன.
ஜனவரி 1960ல் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் காவலர் நினைவேந்தல் நாள்/ காவலர் தியாகிகள் நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
அதே மாநாட்டில், அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கவும், அந்த வீர தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த, ஒவ்வொரு ஆண்டும், எல்லா மாநிலக் காவல்துறையினர் அடங்கிய ஒரு குழு, அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிக்கு மலையேற்றம் செய்ய வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
*அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங்ஸ் தியாகிகள் நினைவுச் சின்னம்*
இந்தோ-திபெத் பார்டர் போலிஸ் (ITBP: Indo-Tibet Border Police)ன் டிஎஸ்பி கரம்சிங் மற்றும் 21/10/1959ல் வீர மரணமடைந்த காவலர்களுக்கான நினைவுச் சின்னம் இன்றும் அக்ஸாய் சின் ஹாட் ஸ்பிரிங் பகுதியிலுள்ளது. நாடு முழுவதும் உள்ள காவலர்கள், அங்கு ஆண்டு முழுக்கப் பயணிக்கின்றனர்.
*இந்தியக் காவல்துறையின் தியாகங்கள்*
நாடு விடுதலையடைந்ததில் இருந்து இதுவரை 23,000 ராணுவ வீரர்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.அவர்களுக்கு நிகராக நாடு விடுதலை பெற்றதிலிருந்து, இதுவரை 34,382 காவலர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பதற்காகவும், இந்நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர்.