*அஞ்சலி*
*தெளிவத்தை ஜோசப்*
16/2/1934 - 21/2/2022
இலங்கைத் தமிழ் எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் அவர்கள் நேற்று (21/10/2022) காலமானார். அவருக்கு வயது 88.
இலங்கை மலையகத் தமிழர் வாழ்வியலைத் தன் கதைகளால் வெளிக் கொணர்ந்தவர் ஜோசப்.
சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு, திரைப்படக் கதை ஆகியவற்றோடு வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு நாடகங்களும் எழுதிக் குவித்தவர். இலங்கைத் தமிழ் இதழான வீரகேசரியில் உஷா என்பவர், அவருக்காக எழுதிய அஞ்சலிக் கட்டுரை இவ்வாறு துவங்குகிறது: "தன் வாழ்நாள் முழுக்க எழுதிக் கொண்டேயிருந்த பேனா இன்று (நேற்று) எழுதுவதை நிறுத்தியது!"
அது மிகையல்ல. உண்மைதான். ஜோசப் அவர்கள் பல நூல்களின் தொகுப்பாசிரியராகப் பல நூல்களைத் தொகுத்துள்ளார். அவ்வகையில் இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு ஜோசப் அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது, மகத்தானது.
அவருடைய இயற்பெயர் சந்தனசாமி ஜோசப். அவர் இலங்கையின் மலையகத்தில், பதுளை மாவட்டம் ஹாலி எல்ல என்ற சிறு நகரத்துக்கு அருகிலுள்ள ஊவாக்கட்டளை என்ற ஊரில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை ஹாலி எல்லாவில் முடித்தார். பின் கும்பகோணத்தில் லிட்டில் ஃபிளவர் உயர்நிலைப் பள்ளியில் மூன்றாண்டுகள் படித்துவிட்டு, மீண்டும் இலங்கை திரும்பி, பதுளை செயின்ட் பீட்டர்ஸ் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தார். இவர் ஆரம்ப காலத்தில் தெளிவத்தை தோட்டத்தில் ஆசிரியப் பணிபுரிந்தார். அதனால் தன் பெயருக்கு முன்னால் தெளிவத்தை என்பதை இணைத்துக் கொண்டார்.
1960களில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது முதலாவது சிறுகதை தமிழக இதழான 'உமா' என்ற இதழில் வெளியானது. அவரது படைப்புகளில் மலையக மக்களின் வாழ்வு வெளிப்பட்டது. மலையக மக்களின் வாழ்வின் உயர்வுக்குத் தன் சிந்தனையை, எழுத்தை அவர் மலையக மக்களின் அடையாளம் மற்றும் தனித்துவத்தை தன் எழுத்துகளில் வடித்தார். அதாவது மலையக மக்களின் வாழ்வின் உயர்வுக்குத் தன் சிந்தனையையும், எழுத்தையும் அர்ப்பணித்தார். அவர் மலையக மக்களின் வாழ்வியல் என்ற ஒரு கருத்தின் மூலம் இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு அழகு சேர்த்தவர்.
காலங்கள் சாவதில்லை (1974, வீரகேசரி வெளியீடு) என்ற இவரது நாவல் இலங்கைத் தமிழ் எழுத்துகளில் முக்கியமான படைப்பாகும். நாமிருக்கும் நாடே (1979, வைகறை வெளியீடு) என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்ய விருது பெற்றார். இவரது குடை நிழல் (2010) என்ற புதினம், யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றது. அதுமட்டுமின்றி 2013ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும், சம்பந்தன் விருது, கலாபூஷண் விருது ஆகியவற்றையும் பெற்றார்.
தமிழ் இலக்கியத்துக்குத் தன் பங்காற்றிய அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்!