இன்று விடுதலைப் போராட்ட தியாகி அஷ்பகுல்லா கானின் பிறந்தநாள்.
தாய் மண்ணான இந்தியாவின் விடுதலைக்காக உயிரைப் பணயம் வைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த மாபெரும் புரட்சியாளரான அஷ்பகுல்லா கான், 1900 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் ஒரு நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தார்.
இவரது பெற்றேர்ர் ஷஃபிகுல்லா கான் மற்றும் மஸ்ஹருன்னிசா பேகம். அவரது தாயின் செல்வாக்கின் காரணமாக, அவர் இலக்கியத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். உருதுவில் பாராட்டப்பட்ட கவிஞரானார். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு, கவிதைகள் மூலம் அரசுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தி வந்தார்..
‘ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சியின்’ தலைவராக இருந்த ராம் பிரசாத் பிஸ்மில் அவருக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் பிஸ்மில் அஷ்பகுல்லாவிற்கு தனது புரட்சிகர அமைப்பில் உறுப்பினர் பதவி கொடுக்க தயங்கினார். பின்னர், பிஸ்மில் அஷ்பகுல்லாவின் உறுதிப்பாட்டை நம்பி, அவரை ‘ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சி’ உறுப்பினராக்க அனுமதித்தார்.
பிஸ்மிலின் தலைமையில் பல நடவடிக்கைகளில் அஷ்பகுல்லா தீவிரமாக பங்கேற்றார். ஆரம்ப நாட்களில், ராம் பிரசாத் பிஸ்மில், புரட்சிக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்குவதற்காக ககோரியில் அரசாங்க பொக்கிஷங்களைக் கொண்ட ரயிலில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அஷ்பகுல்லா இந்த யோசனையை எதிர்த்தார் மற்றும் அத்தகைய கொள்ளை நடந்தால் புரட்சியாளர்களை அரசாங்கம் முழு பலத்துடன் ஒடுக்கும் என்று எச்சரித்தார். இருப்பினும், அவர் ஓர் ஒழுக்கமான செயல்பாட்டாளராகவும், ஜனநாயகவாதியாகவும் திகழ்ந்ததால் அமைப்பின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தை மதித்து இறுதியாக பிஸ்மிலின் யோசனைக்கு ஒப்புக்கொண்டார்.
ரயில் கொள்ளை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி அரசு கருவூலத்தை ஏற்றிக்கொண்டு ரயில் ககோரி கிராமத்தின் வழியாகச் சென்றபோது, அது கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது இடைவிடாது புரட்சியாளர்களைத் தாக்கியது மற்றும் புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்தது.
சம்பவத்திற்குப் பிறகு அஷ்பகுல்லா தலைமறைவானார். அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு துரோகி, காவல்துறைக்குத் தகவல் கொடுத்தின் விளைவாக ஓர் ஆண்டு கழித்து அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது,ககோரி ரயில் கொள்ளை சம்பவத்திற்கு முழுப் பொறுப்பையும் தானே ஏற்று பிஸ்மிலைக் காப்பாற்ற விரும்பினார். அவர் தனது வழக்கறிஞரின் அறிவுரைக்கு செவிசாய்க்கவில்லை, மேலும் இந்த முழு சம்பவத்திற்கும் தானே பொறுப்பு என்று பிரிவி கவுன்சிலுக்கு எழுதினார். பின்னர், நீதிமன்றம் அஷ்பகுல்லா கானுக்கு மரண தண்டனை விதித்தது. அவர் 1927 டிசம்பர் 19 அன்று ஃபைசாபாத் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.